'Inferiority by nature; how did I change?' - Idumbavanam Karthi shares his experience Photograph: (naam tamilar)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்தே போட்டியிருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை நிர்வாகியும்,வேதாரண்யம் தொகுதியின் வேட்பாளருமான இடும்பாவனம் கார்த்தி நக்கீரனின் 'சூடா... ஸ்ட்ராங்கா...' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உங்களுக்கு அரசியல் மீதான விருப்பம் எப்போது வந்தது?
2009-ல் ஈழப்படுகொலை சமயத்தில் நான் புதுக்கோட்டையில் மகாத்மா கல்லூரியில் படிச்சிட்டு இருந்தேன். அப்போது ஜனவரி 29 ஆம் தேதி அண்ணன் முத்துக்குமார் இறந்து போனார். முத்துக்குமார் இறந்து போன சமயத்தில் பள்ளி, கல்லூரிக்கு எல்லாம் கலைஞர் விடுமுறை விட்டார். காரணம் போராட்டம் அதிகமாகக் கூடாது என்பதற்காக விடுமுறை விட்டார்கள். விடுமுறை விட்ட உடனே வீட்டுக்கு போகலாம் கிரிக்கெட் விளையாடலாம் என மகிழ்ச்சியோடு நானும் போனேன். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பதாகை வைக்கப்பட்டிருந்தது. 'தமிழா உன் வரிப்பணத்தில் இனத்தை அழிக்க ஆயுதமா?' என்று இருந்தது. அதைப்பார்த்த மாத்திரத்தில் ஒரு இனம் புரியாத உணர்வு வந்தது. அந்த சமயத்தில் தெரியாது அதுதான் இன உணர்வு என்று. ஆனால் அதற்கு பிறகு விசாரிக்கிறேன். அப்போதுதான் தெரிந்தது ஈழத்தில் வந்து போராடுறாங்க, தலைவர் போராடுகிறார், இவ்வளவு பேர் இறந்து போயிட்டாங்க என்பதெல்லாம் தெரிகிறது.
அந்த சமயத்துல இன்னைக்கு மாதிரி ஆண்ட்ராய்டு அலைபேசி எல்லாம் கிடையாது. அன்னைக்கு நக்கீரன் விற்கும். நக்கீரனில் 'மறக்க முடியுமா' என்று ஜகத் கஸ்பர் ஒரு தொடர் எழுதினார். இன்னைக்கு ஜகத் கஸ்பர் ஒரு உளவாளி என்கிற மாதிரி எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அன்னைக்கு அவர் எழுதினப்ப நான் அதை வாங்கி படிச்சேன். 'தலைவர் உயிருடன் உள்ளார்' என்று நக்கீரன் அட்டைப்படம் போட்டது. தலைவர் அப்படியே உட்கார்ந்திருக்கிற மாதிரியும். தொலைக்காட்சியில் அவர் இறந்ததாக வெளியான காட்சியை அவரே பார்க்கிற மாதிரியும், கையில ஒரு பத்திரிகை இருக்கற மாதிரியும் நக்கீரனில் அட்டைப்படம் வந்தது. அந்த வயசுல அது உண்மையா? பொய்யா என்று கூட தெரியவில்லை. தொலைபேசியில் அழைத்து உண்மையா? பொய்யா? என்று கேட்டு விடுவோமா என்று பல தடவை நினைத்திருக்கிறேன்.
அப்படி அந்த ஈழ உணர்வு வந்தது எனக்கு. அதுக்கு முன்னாடி மிக கடுமையான கடவுள் பக்திமான் நான். கடுமையான கடவுள் நம்பிக்கை உண்டு எனக்கு. நான் கல்லூரி விடுதியில் படிக்கும் போது என் நண்பர்கள் ஒரு ரூபாய் கடன் வாங்கினால் காசை திரும்ப வாங்கிடுவேன். ஆனால் அந்த சமயத்தில் நான் கோவிலுக்கு போனால் மட்டும் 5 ரூபாய் போடுவேன். அவ்வளவு பக்திமான். சனிக்கிழமை ஆனால் ஆஞ்சநேயர் விரதம் இருப்பேன். சனிக்கிழமை காலை ஆனால் சாப்பிட மாட்டேன் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு செஞ்சுட்டு தான் வீட்டுக்கு வருவேன். இப்படி அதிதமான கடவுள் நம்பிக்கை. இயல்பிலேயே எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. கூச்ச சுபாவம். ரொம்ப ஒரு சென்சிடிவ்வான ஆளாதான் இருந்தேன். ஆனால் இவ்வளவு மக்கள் ஈழத்தில் சாகும்போது எந்த கடவுளும் வந்து காப்பாற்றவில்லை. அதனால் கடவுள் மேல ஒரு வெறுப்பு வந்தது. அது கடவுள் மறுப்பாக மாறியது. முருகன், சிவன், கண்ணன் இவங்கல்லாம் நமக்கு முன்னோர்கள் என்கிற புரிதல் இருக்கிறது. தெய்வம் என்கிற புரிதல் இருக்கிறது. ஆனால் இதிகாச புராணங்கள் சொல்கிற கடவுள் என்ற கோட்பாட்டை நானும் ஏற்கவில்லை நாம் தமிழர் கட்சியும் ஏற்கவில்லை.
Follow Us