17வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிபோட்டி, 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து, 2025 ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள், பரிசளிப்பு விழாவிற்காக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான மொஹ்சின் நக்வி, இந்திய அணிக்கு கோப்பையும் பதக்கங்களும் வழங்குவதாக இருந்தார். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்துவிட்டனர். மாறாக, கோப்பையைத் தாங்களே கையில் எடுத்துக்கொண்டது போல் சைகை செய்து வெற்றியைக் கொண்டாடினர். இதனால் அதிருப்தியடைந்த மொஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்திய அணி கோப்பையைப் பெறாததால், ஆசியக் கோப்பை நிர்வாகம் கோப்பையைத் திரும்ப எடுத்துச் சென்றது.
இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெறுவதில்லை என முடிவு செய்தோம். ஆனால், அதற்காக கோப்பையை அவர்கள் எடுத்துச் செல்லலாம் என்று அர்த்தமல்ல. விரைவில் கோப்பை இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்,” என்றார்.
பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா இது குறித்து கூறுகையில், “இந்திய அணி எங்களுடன் கைகுலுக்கவில்லை, மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறவில்லை. இது எங்களை மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டையும் அவமதிக்கிறது. மற்ற அணிகளும் இதைப் பின்பற்றினால் என்ன ஆகும்? கிரிக்கெட் வீரர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற நடத்தைகளைப் பார்த்து குழந்தைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்? இந்தப் போட்டியில் நடந்தவை மிகவும் கவலையளிக்கின்றன,” என்றார்.
முன்னதாக, செப்டம்பர் 14 அன்று துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது, இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பஹல்காம் தாக்குதலைக் காரணம் காட்டி கைகுலுக்கவில்லை என விளக்கமளித்திருந்தார். பின்னர், செப்டம்பர் 21 அன்று நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியிலும் இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கவில்லை. அந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய ரசிகர்களைப் பார்த்து ‘6-0’ என்று சைகை காட்டி கேலி செய்தார். இது, ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ஆறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதைப் பிரதிபலிப்பதாக இருந்தது. மேலும், விமானம் பறப்பது போலவும், அதைச் சுட்டு வீழ்த்துவது போலவும் சைகை செய்து இந்திய ரசிகர்களை அவர் கேலி செய்தார்.
அதேபோல், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், அரைசதம் அடித்தபோது, துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்து கொண்டாடினார். இந்தச் சம்பவங்கள் இந்திய ரசிகர்களிடையே எரிச்சலையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தின. பாகிஸ்தான் வீரர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற விரும்பவில்லை என நிராகரித்தது.
இது ஒரு புறம் இருக்க, இரண்டாம் இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்போது, பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா, ரூ.66 லட்சம் மதிப்பிலான காசோலை மாதிரியைப் பெறுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் இணைந்து இந்தக் காசோலையை வழங்கினர். ஆனால், அதைப் பெற்ற சில நொடிகளிலேயே, கோபத்துடன் அதைத் தூக்கி எறிந்துவிட்டு சல்மான் அலி ஆகா வெளியேறினார். இதனால், பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள், “பாகிஸ்தான் அணி தங்கள் சொந்த அமைச்சரையே மதிக்கவில்லை” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாகவே, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றால், பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அதற்கேற்ப, 28 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியும் சர்ச்சைகளால் நிறைந்திருந்தது. இந்திய அணி, “பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பை வேண்டாம்” எனப் புறக்கணித்ததும், அதே நேரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தனது நாட்டு அமைச்சரிடமிருந்து வழங்கப்பட்ட காசோலையை கோபத்தில் தூக்கி எறிந்ததும், கிரிக்கெட்டைத் தாண்டி உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.