நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகிலுள்ள மானாபரநல்லூரைச் சேர்ந்தவர் சங்கரகுமார். அவரது மனைவி முத்துலட்சுமி. விவசாயத் தம்பதியரான இவர்களின் மகன் சபரி கண்ணன்(15), அங்குள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 4-ம் தேதி, ஒரு விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் சபரி கண்ணனைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன், விடுமுறை முடிந்து ஜூலை 7-ம் தேதி பள்ளிக்கு வந்தபோது, பள்ளி வளாகத்திற்கு அருகே தான் மறைத்து வைத்திருந்த வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு வகுப்பறைக்குள் சென்றுள்ளார்.

Advertisment

பின்னர், வழக்கமான காலை பிரார்த்தனை நிகழ்ச்சியின்போது, சபரி கண்ணன் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். பதறிப்போன ஆசிரியர்கள் அவரை உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். முதலுதவி அளிக்கப்பட்டபோது, தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், உறவினர்களும் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், 10 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகும், சிகிச்சை பலனளிக்காமல், ஜூலை 18-ம் தேதி சபரி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

94

இதையடுத்து, மாணவனின் உடலை ஆம்புலன்ஸில் ஊருக்குக் கொண்டுவந்த உறவினர்கள், அன்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு ஆம்புலன்ஸை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவனின் தற்கொலைக்கு பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியை உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தினர்.

96

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவினர்கள் மறியலை கைவிட்டு, மாணவனின் உடலை மானாபரநல்லூர் மயானத்தில் தகனம் செய்தனர். ஆனால், அதே இரவு, ஊர்முழுக்க பதற்றம் பரவிய நிலையில், சிலர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பள்ளி வேன்களுக்கு தீ வைத்தனர். இதில், இரண்டு வேன்களும் முற்றிலும் கருகி நாசமடைந்தன. இச்சம்பவத்தால், அக்கம்பக்கத்து கிராமங்களிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது, உடனே காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். தற்போது, காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

91

மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது? அப்படி ஆசிரியர் என்ன சொன்னார்கள்? என்று அந்த பகுதியில் உள்ள பலரிம் விசாரித்தோம்... அப்போது, மாணவன் சபரி கண்ணன் எல்.கே.ஜி. முதல் தற்போதைய 10-ம் வகுப்பு வரை அந்த தனியார் மெட்ரிக் பள்ளியிலேயே தொடர்ந்து படித்து வந்தவர். படிப்பில் முதல் தர  மாணவனான சபரி கண்ணன், இதுவரை முதல் அல்லது இரண்டாவது மதிப்பெண்களே(ரேங்கிலேயே) எடுத்து வந்திருக்கிறார். அந்தப் பள்ளியில் வகுப்புகள், மாலையில் வழக்கமான நேரத்தில் முடிந்த பிறகு, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதி இரவு, பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்தபோது, நான்கு மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக வகுப்பாசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்படி, அந்த நான்கு மாணவர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டபோது, மாணவன் சபரி கண்ணனும் அதில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

“படிக்கும் இந்த வயதில் இது தேவையற்றது. விடுமுறை முடிந்து, திங்கள் கிழமை பள்ளிக்கு வரும்போது உங்கள் பெற்றோர்களைக் கண்டிப்பாக அழைத்து வரவேண்டும். இல்லையெனில், டி.சி. கொடுத்து பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவோம்,” என்று ஆசிரியைகள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. படிப்பு பாதிக்கப்படுமோ என்ற பயத்தில், மாணவன் சபரி கண்ணன் நடந்தவற்றைப் பெற்றோரிடம் தெரிவிக்காமல், திங்கள் கிழமை விரக்தியில் பூச்சி மருந்தை எடுத்து வந்து, பள்ளியின் கேட் அருகே குடித்துவிட்டு வகுப்பறைக்குச் சென்ற பிறகுதான், இந்த விபரீதங்கள் நடந்தேறியுள்ளன எனப் பரவலாகக் கூறகின்றனர்.

92

மாணவனின் மரணம், மறியல் போராட்டம் மற்றும் பள்ளி வேன்களுக்கு தீ வைத்த சம்பவம் ஆகியவை தொடர்பாக மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவன் சபரி கண்ணனின் தற்கொலைக்கு ஆசிரியைகள் மற்றும் நிர்வாகத்தினர் காரணம் என்று, ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் புகார் அளித்துள்ளனர்.

கண்ணீருடனும் வேதனையுடனும் இருந்த சபரி கண்ணனின் தந்தை சங்கர குமாரோ, “சரக்கடித்துவிட்டு வந்துள்ளார்கள் என்று ஆசிரியைகள் கண்டித்திருக்கிறார்கள். அதுசமயமே அவர்கள் எங்களுக்கு தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அந்த விவகாரத்தை அப்போதே முடித்திருப்போமே. எங்களுக்கு தெரியப்படுத்தாமலே நடந்ததால்தான் நன்றாக படிக்கிற என் மகனை பறிகொடுத்து தவிக்கிற நிலைக்கு என்னை தள்ளிவிட்டார்களே” என்று கதறி அழுதுள்ளார்.

98

இதுகுறித்து நாம் சேரன்மகாதேவி சப் டிவிஷன் டி.எஸ்.பி.யான சத்யராஜிடம் பேசியபோது மாணவன் ட்ரீட்மென்டில் இருக்கும்போது அவனிடம் விசாரித்ததில் நடந்தவைகளை பற்றி அவன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறான். மேலும் அவனது பெற்றோர் கொடுத்த புகார் தொடர்பாகவும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஒருவினை, எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை ஆழ்ந்து ஆய்வு செய்திருந்தால், இதுபோன்ற விபரீதங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள்.