இங்கிலாந்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். தமிழர்களின் பெருமையையும், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக, சமூக நீதியின் அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கம்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது... பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்குத்துல பேசுறத பெருமையா நினைக்குறேன்.இங்க தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.க. தலைவர் என்ற தகுதியோட மட்டுமில்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோட நிக்குறேன்.
பகுத்தறிவுப் பகலவன் - அறிவாசான் தந்தை பெரியாரின் படத்த ஆக்ஸ்போர்டுல திறந்து வைக்குறத, என் வாழ்நாள் பெருமையா நினைக்குறேன்.பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு.பெரியார் இன்று உலகம் முழுக்கத் தேவைப்படுறார் என்பதன் அடையாளமா,அவரோட படத்தை திறக்க திட்டமிட்டிருக்கீங்க
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவோட அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம்! மனித உரிமையின் அடையாளம்! உலக அடையாளம்! அப்படிப்பட்ட இங்கு பெரியாரோட படம் திறக்கப்படுறது உலகப் பெருமை!பெரியார் உருவாக்குன சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னோட நன்றி!
சுயமரியாதை இயக்கத்தோட தொடர்ச்சியா இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புல இருக்குற எனக்கு, இதைவிடப் பெருமை இருக்க முடியாது.தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுனு நான் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கே. பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கேன். எங்க வீட்டுல நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க, தந்தை பெரியார் வந்தப்போ, இந்தக் கையால அவருக்கு உணவு பரிமாறி இருக்கேன். இத சொல்லும்போதே எனக்குள்ள பெருமை பொங்குது!
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வெச்ச தந்தை பெரியாரை இன்னைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான்ம் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் கிடைச்ச மிகப்பெரிய பெருமை!இங்கிலாந்துல இருக்க செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைஞ்சு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறாங்க என்கிட்ட சொன்னப்போ, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டுச்சு.
நினைச்சுப் பார்க்குறேன்…
1983 செப்டம்பர் 21-ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டில, மானமிகு ஆசியர் அவர்கள் கலந்துகிட்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்துச்சு. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல ஆகுது. அதுக்குப் பிறகு, இன்னைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டுல தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுது!
பெரியாருக்கு மிக மிகப் பிடிச்சத்த சொல், சுயமரியாதை!உலகத்துல எந்த அகராதியை கொண்டுவந்து காட்டுனாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாதுனு சொன்னார் அவர்.ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிட்டா, அவன் வெற்றிப் பெற்றுடுவான்னு சொன்னார்.அதுமட்டுமில்ல, “உலகத்துலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்னே ஒன்னு சுயமரியாதைதான்”-னு அழுத்தம் திருத்தமா சொன்னார்.
மனிதனோட சுயமரியாதையைக் காக்கத்தான் எல்லா அரசியல் தத்துவங்களும் தேவைனு சொல்லி, தான் உருவாக்குன இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம்னு பேர் வெச்சார். அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தோட நூற்றாண்டை முன்னிட்டு, இங்க மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருக்குறத பார்த்து மகிழ்ச்சியும் மனநிறைவும் அடையிறேன்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவரா சிறப்பாகப் பணியாற்றிட்டு இருக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களும், பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆய்வு செய்த பேராசிரியர்எஸ்.ஆனந்தி அவர்களும் இன்னைக்கு இங்க வந்திருக்குறாங்க.
இந்த விழாவுக்கு மகுடம் சேர்க்குற மாதிரி, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள்ல ஒருத்தரான பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதியும், பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரனும் இணைஞ்சு உருவாக்கியிருக்க ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூல் வெளியீட்டு விழா அமைஞ்சிருக்கு.இதை வெளியிடுற பெருமையும் எனக்குக் கிடைச்சிருக்கு!
இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கசாலசபதி அவர்களோட முயற்சியால, பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டிருக்கு. பெரியார் உலகமயமாகிட்டார் என்பதன் அடையாளம்தான் இது!தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டுல பிறந்தார். தமிழ்ல பேசுனார். ஆனா அவரோட சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்துக்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!
பெரியாரியம்னா என்னனு யாராச்சு கேட்டா -அவங்களுக்கு நாம அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னனா -
* சுயமரியாதை
*பகுத்தறிவு
*சமதர்மம்
*சமத்துவம்
*மானுடப்பற்று
* ரத்த பேதமில்லை
*பால் பேதமில்லை
* சுய முன்னேற்றம்
*பெண்கள் முன்னேற்றம்
*சமூகநீதி
*மதசார்பற்ற அரசியல்
*அறிவியல் மனப்பான்மை-னு
பெரியாரியத்தை அறிமுகப்படுத்தணும். பரந்து விரிந்த அறிவுக்கடலான அவரோட சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளா, ஆறு குறிப்புகளை, 'குடிஅரசு' இதழ்ல பெரியார் எழுதுனார்.
அவற்றைச் சொல்லணும்னா -
முதல்ல -சமூக வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.
இரண்டாவது -
ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருக்க ணும்.
மூன்றாவது -
ஆணுக்கும் பெண்ணுக்கும் சகல துறைகள்லயும் சமத்துவம் இருக்க ணும்.
நான்காவது-
சாதி, மதம், தேசம், வருணம்,கடவுள் ஆகியவை அற்ற மனித சமூக ஒற்றுமை நிலவ ணும்.
ஐந்தாவது -
அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த ணும்.
ஆறாவது -
யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு - ஆராய்ச்சி - உணர்ச்சி -காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடக்க முழு சுதந்திரம் இருக்க ணும்.
இதெல்லாம் உலகம் முழுக்க - எல்லா நாடுகளுக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதுனாலதான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கைனு சொல்றோம்.
இவ்வளவு முற்போக்கான கருத்தியல்களை, நூறு ஆண்டுகளுக்கும் முன்னாடியே, அதுவும் பழமைவாதங்களும் மூடநம்பிக்கைகளும் நிரம்பியிருக்குற மண்ணுல பேசி, மக்களை எழுச்சிப் பெற வெச்சவர் தந்தை பெரியார்!
சுயமரியாதை இயக்கத்தை அவர் சாதாரணமா தோற்றுவிக்கல. உலகம் முழுக்க பயனம் செஞ்சார். உலகம் எப்படி இருக்குனு அனுபவப்பூர்வமா உணர்ந்து, தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சொன்னார்! தமிழ்நாடும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்துச்சு! அதுனாலதான் அவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரோட உலகப் பயணங்களை சுருக்கமா பட்டியலிட்டுச் சொல்லணும்னா -
1929-ல - மலேசியா, சிங்கப்பூருக்கும் -
1932 -ல எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சோவியத் ரஷ்யானு ஓராண்டு முழுக்கப் பயணம் செஞ்சார்.
அப்போ, இந்த இங்கிலாந்து நாட்டுல, ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செஞ்சார். இங்கதான், கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் எழுதுன ‘மதம்’ என்ற நூலை வாங்குனார். அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, தமிழாக்கம் செஞ்சு வெளியிட்டார்.
இங்க இருக்க பார்ன்ஸ்லே-வுல நடந்த கூட்டத்துல பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலா பேசுனார். அந்தக் கூட்டத்துல இருந்த நிறைய பேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவங்க. அப்போ இந்தியால நடந்துட்டு இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனா அதபத்தியெல்லாம் கவலைப்படாம, “இங்க தொழிலாளர் நட்பு ஆட்சிய நடத்துறதா சொல்றீங்க. ஆனா, இந்தியால தொழிலாளர்களுக்கு விரோதமா ஆட்சி நடத்துறீங்க”-னு வெளிப்படையா குற்றம்சாட்டுனார். இந்த துணிச்சல்தான் தந்தை பெரியார். அதுனாலதான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார்-னு எல்லாராலும் நினைக்கப்படுறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!
அவர் இந்தச் சமூகத்துல விதைச்சது நாத்திகம் இல்ல; பகுத்தறிவு! அதுனாலதாம் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரினு பட்டது ஏத்துக்கோ, இல்லனா விட்டுடு”-னு சொன்னார்.
வெறும் நம்பிக்கையை கண்டுப்பிடிப்பா ஏத்துக்கக் கூடாதுனு சொல்லி, எல்லாத்தையும் கேள்வி கேட்கச் சொன்னார். எல்லாத்துக்கும் விடையை கண்டுப்பிடிக்கணும். எதையும் லாஜிக்கலா அணுகணும். இந்த அறிவியல் சிந்தனையைத்தான் பரப்புனார்; அறிவியல் மனப்பான்மையைத்தான் விதைச்சார்.
இன்னைக்கு ஏற்பட்டிருக்க அத்தனை அறிவியல் மாற்றங்களையும், ‘இனிவரும் உலகம்’-னு தொலைநோக்குப் பார்வையோட சொன்ன சிந்தனையாளர் பெரியார். பகுத்தறிவும் அறிவியலும் ஒரே நேர்கோட்டுல இருக்கும்.அறிவின் கூர்மைதான் பகுத்தறிவுனு எடுத்துச் சொன்னதாலதான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவரைப் பத்தி அவர் மறைஞ்சு இத்தனை ஆண்டுகள் கழிச்சும் விவாதிக்குது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுது.
சுயமரியாதை இயக்கத்த 1925-ஆம் ஆண்டு தொடங்குனாலும், சுயமரியாதைச் சிந்தனையானது பெரியாருக்கு இளமைக் காலத்துலயே வந்துடுச்சு. அவர் அப்பவே அப்படித்தான்!
அவரோட லைஃப் ஹிஸ்டரிய கொஞ்சம் பார்த்தா, அவர் காலத்த மீறி செஞ்ச புரட்சிகள் புரியும்!
ஆதிக்க சாதியினர் வீட்டுல தண்ணீர் குடிச்சதால அவமானப்படுத்தப்பட்டதும், தாழ்த்தப்பட்டோர் வீட்டுல தண்ணீர் குடிச்சதால சொந்த வீட்டுல அவமானப்படுத்தப்பட்டதும் சின்ன வயசுலயே அவர் மனசுல தாக்கத்தை ஏற்படுத்துச்சு.
பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயசுலயே, 13 வயசு பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்துட்டார். மறுமணத்துக்கு குடும்பத்துல உள்ள எல்லாரும் எதிர்ப்புத் தெரிவிச்சாலும், அதையெல்லாம் மீறி, அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வெச்சார். மாற்று சமூகத்தினரோட காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வெச்சார்.
தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்குனார். நகராட்சிப் பள்ளிகள்ல தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்துல சேர்ந்த பெரியார், அப்பவும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புறதுல முனைப்பா இருந்தார். சேரன்மாதேவி குருகுலத்துல எல்லாருக்கும் சமமான உணவு தரப்படணும், வைக்கத்துல எல்லாரையும் கோயில் தெருவுல செல்ல அனுமதிக்கணும்னு போராடுனார்.
இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகள்ல தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டுச்சு. அங்கயும் உயர் சாதியினரின் ஆதிக்கம் இருக்குறத பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவைனு, அதுல இருந்து வெளியேறுனார். அப்படி உருவானதுதான், இன்னைக்கு நாம விழா எடுத்துக் கொண்டாடிட்டு இருக்க சுயமரியாதை இயக்கம்!
சமூகநீதி - பெண்களுக்கு சொத்துரிமை - தீண்டாமை ஒழிப்பு - பொது இடங்கள்ல பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக் கூடாது - நில உரிமை - கைம்பெண் மறுமணம் - தமிழுக்கு முக்கியத்துவம் - சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு - இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்.
இந்தக் கொள்கைகளுக்காக பெரியார் அலைந்த அலைச்சல் யாரும் அலையாதது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாள்ல, 17 சிற்றூர்கள்ல பெரியார் பேசி இருக்கார்.16.2.1962 அன்று மட்டும் 19 கூட்டங்கள்ல பெரியார் பேசி இருக்கார். அதுவும் அப்ப அவருக்கு என்ன வயசு? 82 வயசு! 95 வயசுலயும் 98 நாட்கள் அலைஞ்சிருக்கார் பெரியார்.
இவ்வளவு உழைப்பு எதுக்காக?
நம்ம மண்ணுல வாழுற மனிதர்களை மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைமிக்க மக்களாக்கத்தான் ஓயாம உழைச்சார்.
உலகத்துல எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் இல்லாத பெருமையும் புகழும் பெரியார் இயக்கத்துக்கு உண்டு.
பெரியாரின் இந்த சாதனைகள் எல்லாம், ஆயுதம் தாங்காத புரட்சிகள்! ரத்தம் சிந்தாத புரட்சிகள்!
அவரோட சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம், சட்டங்கள் ஆகுறத பார்த்த பெருமை பெரியாருக்கே உண்டானது!
இது உலகத்துல எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழ்!
உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை - சீர்திருத்தவாதிகளைப் பார்த்திருக்கு! எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவங்க பேசியிருக்காங்க. ஆனா, அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குற ஆட்சியாளர்கள் இருக்க மாட்டாங்க.
நம்ம தமிழ்நாட்டுல மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமா எழுச்சிப் பெற்று, வெகுசன மக்களை கன்வின்ஸ் பண்ணி - அவங்களோட ஆதரவை வாக்குகளா பெற்று - சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வெச்சிருக்கு.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையா இந்திய அரசியலமைப்புச் சட்டத்துல இடம்பெற வெச்சவர் தந்தை பெரியார். தமிழ்நாடு-னு பெயர் சூட்டப் போராடுனார் பெரியார். ஆட்சி அதிகாரத்த அடைஞ்சு, அதைச் செஞ்சு காட்டுனார் பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்-னு சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வேணும்னுபெரியார் தீர்மானம் போட்டார். அதை சட்டம் ஆக்குனவர் முதலமைச்சர் கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேணும்னுபெரியார் சொன்னார். அத சட்டம் ஆக்கி நிறைவேத்தித் தந்தது திராவிட இயக்க ஆட்சி.
இது எல்லாத்தையும்விட, நான் பெருமையோட சொல்றேன், சாதியைக் கடப்பதற்காக இந்தியாவுலயே வேற எந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும்”, தலைவர் கலைஞர் அவர்கள் “சமத்துவபுரம்” திட்டத்தையும் கொண்டுவந்து, தந்தை பெரியாரின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கோம்!
பெரியாரால்கல்வி பெற்றவர்கள் - வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் - அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்தவர்கள் - குறிப்பாக பெண்ணினம் அடைந்த வளர்ச்சி - ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வுகள் அனைத்தையும் இன்னைக்கு நாம கண் முன்னால பார்த்துட்டு இருக்கோம். படிக்கக் கூடாது-னு கல்வி மறுக்கப்பட்டவங்க எல்லா கல்வி நிலையங்கள்லயும் முதலிடத்துக்கு வந்து நிக்குறாங்க. வீட்டை விட்டே வெளிய வரக்கூடாது-னு தடுக்கப்பட்ட பெண்கள் - இன்று உலகத்தையே வலம் வர்றாங்க, உலகத்தைத் தாண்டி விண்வெளிக்கே போயி வர்றாங்க. கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாதுனு தடுக்கப்பட்டவங்களோட கரங்கள் இன்று கருவறையில வழிபாட்டை நடத்திட்டு இருக்கு.
இந்த ஐரோப்பிய பயணத்துல பார்க்குறேன்… ஒடுக்கப்பட்ட குடும்பங்கள்ல இருந்து முன்னேறி வந்து ஏராளமான பேர் இங்க நல்ல பொசிஷன்ல இருக்காங்க.
தமிழ்நாடு எல்லாத்துலயும் முன்னேறிட்டு வருது. கல்வியில - பொருளாதாரத்துல - தொழில் வளர்ச்சியில - வாழ்க்கைத்தரத்துல - உள்கட்டமைப்பு வசதியில முன்னேறி இருக்கோம். உழைப்பின் சாதனை உற்பத்தி சாதனையா மாறி இருக்கு.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமா தமிழ்நாடா இருக்கு. வளமான தமிழ்நாடா வளர்த்து வர்றோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமா உயர்ந்திருக்கோம். இதுதான் திராவிட இயக்கத்தோட சாதனை!
பெரியார் கண்ட வளர்ச்சிய நாங்க தமிழ்நாட்டுலசெயல்படுத்திக் காட்டி வர்றோம். பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கைனு சொன்னார் பேரறிஞர் அண்ணா. தமிழர் தந்தை பெரியார் மறைந்தபோது அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பிச்சார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளா அறிவிச்சு - செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வெச்சிருக்கு நம்ம திராவிட மாடல் அரசு.
அதுக்காக, பெரியார் கண்ட கனவுகள் எல்லாத்தையும் நாம நிறைவேத்திட்டோம்னு சொல்லமாட்டேன். இந்த நூறாண்டுகள்ல ஒரு சமூகமா நாம அடைஞ்சிருக்க வளர்ச்சி என்பது, ஒரு குழந்தை நடை பழகுற மாதிரிதான்! நாம செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. நம்மொட பயணம் நெடியது. இந்தப் பயணத்துல ஏற்படுற தேக்கங்களை - தேவையற்ற இடைஞ்சல்களை - பழைய குளறுபடிகளை நாம ஒதுக்கணும். போலி பெருமைகள்ல சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போயிடக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனைவிதமான தந்திரங்களையும் மேற்கொள்ளுவாங்க. கொஞ்சம் ஏமாந்தாலும், நம்மோட அத்தனை உழைப்பும் கேள்விக்குறியாகிடும்.
சாதி வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமா விலக்குற பயணத்தோட பல்வேறு படிநிலைகளை நாம படிப்படியாகத் தாண்டி வரணும். இதுக்கான முயற்சிகள்ல திராவிட முன்னேற்றக் கழகமும் - நம்ம திராவிட மாடல் அரசும் தொடர்ந்து பயணிக்குது. 100 ஆண்டுகளுக்கு முன்ன, சுயமரியாதை இயக்கம் எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டுச்சோ, அந்த நோக்கம் படிப்படியா நிறைவேறி வருது.
* பிறந்த நாடு
* பேசும் மொழி,
* வாழும் சூழ்நிலை
இதுக்கெல்லாம் கட்டுப்பட்டு அறிவுரை சொன்னவங்க மத்தியில, இதுக்கெல்லாம் வெளிய நின்னு அறிவுரை சொன்னவர் பெரியார். திருவள்ளுவர் திருக்குறளை தமிழ்ல எழுதுனாலும் அது உலகப் பொதுமறையா இருக்குறத போல, பெரியார் சிந்தனைகள் உலகம் முழுக்கத் தேவையானவை. உலக சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. உலகமே கூட்டுறவுமயம் ஆகணும்னு சொன்னார் பெரியார். மனிதப்பற்று தவிர வேற எந்தப் பற்றும் தேவையில்லனு சொன்னார் பெரியார். நிறபேதம் இல்லை! ரத்தபேதம் இல்லை! பால் பேதம் இல்லை!-னு பெரியார் சொன்னதெல்லாம் இன்னைக்கு உலகம் ஒப்புக்கொண்ட உண்மைகள்.
அந்த வகையில பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுக்க பரவணும். இங்க நிலவுற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களையணும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்படணும். ஒவ்வொரு பிரிவினரோட உரிமையையும் இடஒதுக்கீடு என்ற உரிமை மூலமா நிலைநாட்டி இருக்கோம். அதேபோன்ற இடஒதுக்கீட்டுக் கொள்கைய எல்லா நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கணும். சமூக உரிமையில அக்கறை கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கணும். அஃபிர்மேட்டிவ் ஆக்சன்-னு சில நாடுகள்ல இப்பவே இருக்கு. கேம்பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்சிட்டினு பல முன்னணி கல்லூரி, பல்கலைக் கழகங்கள்லயும் இருக்கு.
பல்வேறு உலக மொழிகள்ல பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து வெளியிட்டு வருது. இன்றைக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருப்பது போல, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிடணும்னு கேட்டுக்குறேன்.
“சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும். அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளிப்படும்"-னு பெரியார் சொன்னார். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை வென்றெடுக்க இதுபோன்ற கருத்தரங்குகள் வழிவகுக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சரா எத்தனையோ வெளிநாடுகளுக்கு நான் சென்றிருக்கேன். பல்வேறு நிகழ்ச்சிகள்ல கலந்துகொண்டு இருக்கேன். ஆனா, இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சிவயப்பட வெச்சிருக்கு. காரணம், இது பெரியாருக்கான நிகழ்ச்சி!
லண்டன்ல இருக்கேனா இல்ல, தமிழ்நாட்டுலதான் இருக்கேனானு நினைக்குற வகையில இந்த நிகழ்ச்சி அமைஞ்சிருக்கு. இந்த அழகான, அவசியமான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்ச எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிய மீண்டும் தெரிவிச்சிக்குறேன். பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும். நன்றி வணக்கம்.