Advertisment

புத்தர் சிலை இங்கே, தலை எங்கே?; தலையில்லா  புத்தர் சிலை கண்டுபிடிப்பு - வரலாற்றில் புதிய திருப்பம்!

2

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லாத புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ. மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார். 

Advertisment

இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது,  புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தோடு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு களப்பணியாற்றி வருகிறோம். கள ஆய்வில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 

Advertisment

தலையில்லாத புத்தர் சிலை:

ஆவுடையார்கோவில் எல்லைக்குட்பட்ட பெரிய பாசனக் குளத்தின் அருகிலேயே கருங்கல்லாலான இந்த புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சிலையை மக்கள் “தலையில்லாத சாமி” என்று அழைப்பதோடு, இதற்கு களிமண்ணில் தலை செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை அறிய முடிகிறது. 

காலம்:

பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்ப உருவ அமைதியுடன் காணப்படுகிறது.  

சிற்பத் தோற்றம்:

புத்தர் சிலை 48 செ.மீ. உயரமும், 38 செ.மீ. அகலமும் கொண்டு, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. வலது மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, கழுத்தில் திரிவாலி, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின் மீது வானோக்கிய வலது கையமைப்புடன் உள்ளது. கழுத்தின் பக்கவாட்டில், பின்புறமாக உடைந்த நிலையில் பிரபையின் அடிப்பகுதி உள்ளது. வலது கையின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது.  

தலையைத் தேடும் முயற்சி:

புத்தர் சிலையின் உடல் பகுதி இங்கே உள்ளது. தலைப்பகுதி எங்கே என்ற கேள்வி எழுந்த நிலையில், தலைப்பகுதி அருகிலிருக்கும் வாய்க்காலில் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், அந்தப் பகுதியை முழுதும் தேடியும் இதுவரை தலை கிடைக்கவில்லை. தொடர் களப்பணியின்போது கண்டுபிடிக்க முடியுமென நம்புகிறோம்.  

புத்தமித்திரர் வாழ்ந்த பகுதி:

3

சோழர் காலத்தில் புத்த மத வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய புத்தமித்திரர், ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பொன்பற்றி என்று இலக்கியங்களிலும், வரலாற்று ஆவணங்களிலும் கூறப்பட்டுள்ள பொன்பேத்தி எனும் ஊரைச் சேர்ந்தவர். அவ்வூரில் இன்றளவும் அவரது பெயரில் அகழியுடன் கோட்டை போன்ற அமைப்பு காணப்படுகிறது. 

சோழ மன்னர் வீர ராஜேந்திரன் காலத்தில், அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ‘வீரசோழியம்’ எனும் இலக்கண நூலை புத்தமித்திரர் எழுதினார். இக்காலத்தில் புத்த மதம் இப்பகுதியில் செழுமையுடன் இருந்திருப்பதை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது.  

கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள கரூரில், நிலவளமுடைய அய்யனார் கோயிலில் ஒரு புத்தர் சிலையும், இரண்டாவது புத்தர் சிலை மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்திலும் இருப்பதாக புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக இணை இயக்குனர் பொறுப்பு வகித்த முனைவர் ஜெ. ராஜா முகமது, 2002 ஆம் ஆண்டு கண்டறிந்த நிலையில், அச்சிலை 2008 இல் காணாமல் போனது குறித்து ஆய்வாளரால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை ‘சோழ நாட்டில் பௌத்தம்’ (2022) எனும் நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ள முனைவர் பா. ஜம்புலிங்கம், சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து, தற்போதைய கண்டுபிடிப்பு புத்த சமய வரலாற்றில் மிக முக்கியமான சான்று என்பதை உறுதி செய்துள்ளார்.

இந்தத் தொடர் ஆய்வின்போது, உள்ளூர் வரலாற்று ஆர்வலர் ஓர் நாழிகை ரமேஷ்குமார், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் இணைச் செயலாளர் பீர்முகம்மது, துணைத் தலைவர் கஸ்தூரிரெங்கன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் இளங்கோவன், நலங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் ஆகியோர் ஆய்வுக்கு உதவினர் என்றார். 

budhdha pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe