தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
ஆனாலும் பாமகவில் தந்தை ராமதாஸிற்கும், மகன் அன்புமணிக்குமான மோதல் போக்கு சமாதானத்தை எட்டாமல் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கியும் தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில் மாற்றி மாற்றி விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
கடந்த 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''என்னை துரோகி என அன்புமணி கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் நான் தான் பேசினேன். அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்த நேரத்திலும் நானே அவருக்காக பேசினேன். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் வைத்து பேசியதால்தான் இந்த பிரச்சனையே முழுமையாக ஆரம்பித்தது'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு அன்புமணி ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், 'பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி அன்புமணி ராமதாஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிசம்பர் 6ஆம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுத்ததோடு நேர்காணல் அளித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த டிசம்பர் 15 ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார் .
இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/18/141-2025-12-18-19-23-42.jpg)
இந்நிலையில் அன்புமணி தரப்பினர் வீடியோ காட்சி ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஜி.கே.மணி மற்றும் எம்எல்ஏ சேலம் அருள் உள்ளிட்டோர் எழுதிக் கொடுப்பதை பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் ராமதாஸிடம் கொடுக்க, ராமதாஸ் அப்படியே வாசிக்கிறார்.பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி ஆத்தூரில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ராமதாஸ் 'ஆத்தூரில் பொதுக்குழு நடக்கும்' எனச் சொல்ல, சேலத்திற்கு மாற்றியாச்சு என ஜி.கே.மணி சொல்கிறார். ''சேலத்திற்கு மாற்றியாச்சா? சரி'' என ராமதாஸ் சொல்கிறார்.
இதனை சுட்டிக்காட்டி வரும் அன்புமணி தரப்பினர் ராமதாஸை முழுமையாக இயக்குவது ஜி.கே.மணி மற்றும் சேலம் பாமக எம்எல்ஏ அருள் என்ற குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். ராமதாஸ் பெயரில் வரக்கூடிய அறிக்கைகள் அவரது கவனத்தில் வரக்கூடிய அறிக்கைகள் தானா என்று அன்புமணி ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இந்த வீடியோ காட்சியை வைத்து ஜி.கே.மணிதான் ராமதாஸை இயக்குவதாக ஜி.கே.மணிமற்றும் அருளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர் அன்புமணி தரப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/18/142-2025-12-18-19-23-17.jpg)