பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் சூழலில், காசாவில் இஸ்ரேல் 'இனப்படுகொலை' நடத்தி வருவதாக ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிகாவை சேர்ந்த நவநீதம் பிள்ளை தலைமையில், இந்தியாவைச் சேர்ந்த மிலூன் கோத்தாரி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் சிடோடி ஆகியோரை உறுப்பினராக கொண்ட இந்த சுயாதீன சர்வதேச ஆணையம், இனப்படுகொலை மாநாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகோல்களை இந்த தாக்குதல்கள் எட்டியுள்ளதாகவும், அதில் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கம் தெளிவாக அறிய முடிவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அதற்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனைகளை பெற்றுத் தருவதிலும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கொல்வது, உடல் மற்றும் மன ரீதியாக மோசமான துன்பங்களை ஏற்படுத்துவது, பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கில், அவரது வாழ்க்கை நிலையை மோசமாக்குவது, புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயல்படுவது என இனப்படுகொலையாக கருதப்படும் 5 வரையறைகளில் நான்கை காசா போர் எட்டியுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,195 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் அமைப்பு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் சர்வதேச அளவில் வழுத்து வரும் சூழலில், காசாவில் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு புகலிடமாக இருந்து வரும், மருத்துவமனை வளாகம், சில உயர் கட்டடங்களையும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்கி வருகிறது. "காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது" என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நேற்று இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, காசாவில் உடனடி போர் நிறுதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு சொந்தமானதா?
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் திட்டத்தை செயல்படுத்த நீண்ட காலமாக முயன்று வரும் இஸ்ரேல், அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது; இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற போகிறோம்!" என கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட E1 என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில், பாலஸ்தீனியப் பிரதேசத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் பாதைகளுக்கு நடுவே கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இது பாலஸ்தீனத்தில் எப்போதும் சுயாதீன அரசு அமைந்துவிடாமல் தடுக்கும் செயல்திட்டம் என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் காசா, கத்தார் என பல முனை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக கத்தார், எகிப்து, ஈரான், சௌதி அரேபியா உள்ளிட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தோஹாவில் அவசர உச்சி மாநாட்டையும் நடத்தியுள்ளனர்.
மேலும், நேட்டோ போன்ற ஒரு ராணுவ கூட்டணியை உருவாக்க எகிப்து ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. கத்தார், சிரியா, லெபனான், பாலஸ்தீனத்தின் காசா பகுதி என்று பல முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், இந்த முன்மொழிவு பெரும் கவனம் பெற்றுள்ள அதே வேளையில், போர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
"ஹமாஸ் தலைவா்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும்" என பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிக்கும் இஸ்ரேல், தனது எந்த நடவடிக்கையையும் அது சார்ந்து அமைத்துக் கொள்ளவில்லை என விமர்சிக்கப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக தனது ராணுவ நடவடிக்கையை 700 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், அப்பாவி மக்களையும், அவர்களது உடைமைகளையுமே பெரும் அளவில் அழித்து வருகிறது. அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த இஸ்ரேல், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்த ஹமாஸ் தலைவர்கள் மீது கத்தாரில் தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலை நடத்தாது இருந்திருந்தால், இந்நேரம் காசவில் போர்நிறுத்தம் ஏற்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டும் போதெல்லாம் இஸ்ரேல், தனது நடவடிக்கைகளை அதற்கு எதிராகவே அமைத்துக் கொள்கிறது.
காசாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை தங்கு விநியோகத்தை தங்கு தடையின்றி வழங்கி வருகிறது. பாலஸ்தீனத்தில் அமைதியை கோரி வாக்களித்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எனினும், இஸ்ரேல் உலகளாவிய "தனிமைப்படுத்தலை" எதிர்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த போரினால் உறவுகளை உடைமைகளை இழந்து, பெரும் சேதத்தை சந்தித்து வரும் பாலஸ்தீனியர்கள் போர் நிறுத்தத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்போரில் கொல்லப்பட்டவர்களில் 80%க்கும் அதிகமானோர் அப்பாவி மக்கள் என The New York Times ஆய்வு தெரிவிக்கிறது. காசாவில் இஸ்ரேல் நடத்துவது ’இனப்படுகொலை’ என ஐ.நா.-வின் விசாரணை ஆணையமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அங்கு உடனடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே பாலஸ்தீனியர்கள் உட்பட அனைவரது எதிர்பார்ப்பாகும்.