Advertisment

கண்ணீர் மல்க பிரியாவிடை...! மக்களின் மனதை வென்ற மகத்தான கலைஞன் ஜூபீன் கார்க்!!

1

செப்டம்பர் 23 அன்று, அசாமில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. காமரூப் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திடீரென 6 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அண்டை மாநிலமான மேகாலயாவில் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இப்படி ஒட்டுமொத்த மாநிலத்தையுமே ஸ்தம்பிக்க வைத்தது, இசையால் பலரின் இதயங்களை வென்ற மகத்தான இசைக் கலைஞன் ஜூபீன் கார்க்கின் மரணம்.

Advertisment

90-களில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஜூபீன் கார்க், ‘அனமிகா’ என்ற இசை ஆல்பத்தின் மூலம் அசாமில் புகழ்பெறத் தொடங்கினார். அசாமி, வங்கம், தமிழ், இந்தி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழிகளில், 3,000-த்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். பாடல் பாடுவதைத் தாண்டி, கிட்டார், டிரம்ஸ், தபேலா என 12 இசைக் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். அதைத் தாண்டி, இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் பயணித்து, பன்முகத் திறமையுடன் ஜூபீன் கார்க் வலம் வந்துள்ளார். இப்படி, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே மையமிட்டிருந்த ஜூபீன் கார்க், 2006-ம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் படத்தில் இவர் பாடிய ‘யா அலி’ பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தி ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்தார். அதன்பிறகு, பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

Advertisment

பாரம்பரிய அசாமிய நாட்டுப்புற இசையுடன், நவீன பாப் மற்றும் ராக் இசையையும் சேர்த்து, அவர் ஒரு தனித்துவமான இசையை உருவாக்கியிருந்தார். அது, அசாமிய இசைக்கே ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. மேலும், ‘தும்ஹி மோர் மத்து மோர்’, ‘கஞ்சன்ஜங்கா’, ‘மிஷன் சைனா’ போன்ற படங்களை இயக்கி, நடித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கிய இசையமைப்பாளரும் இவர்தான். தொடர்ந்து, திரைத்துறையில் தனது அசாத்திய திறமையால் அசாம் மக்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த ஜூபீன் கார்க், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார்.

எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத ஜூபீன் கார்க், பொதுமக்களுக்கு பல்வேறு நலன்களைச் செய்துள்ளார். பல ஆண்டுகளாக, சிறு நகரங்கள், கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்த ஜூபீன் கார்க், அவர்களது கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு, குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பொதுமக்களை ஒன்றாகத் திரட்டி போராட்டம் நடத்தினார். மேலும், கொரோனா காலத்தில் பொதுமக்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்காக, தன்னுடைய அடுக்குமாடி வீட்டையும் வழங்கியிருந்தார். தனது இசையாலும், சமூக சேவைகளாலும், அசாம் மக்களின் தனி அடையாளமாகவே ஜூபீன் கார்க் ஜொலித்து வந்தார்.

இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், நான்காவது வடகிழக்கு இந்திய விழா சிங்கப்பூரில் நடந்தது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, சில நாட்களுக்கு முன்பே ஜூபீன் கார்க் சிங்கப்பூர் சென்றிருந்தார். கடந்த 19-ம் தேதி, அங்கு ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு முதலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே ஜூபீன் கார்க்கின் உயிர் பிரிந்திருக்கிறார். சிங்கப்பூரில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால், அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதையடுத்து, இங்கும் இரண்டாவது முறை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவரது மறைவு, வடகிழக்கு இந்திய இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு,  கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் பேரிடியாக விழுந்தது.  அவரது உடல், குவஹாத்தியிலுள்ள அர்ஜுன் போகேஸ்வர் பாருவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். வெயிலையும் பொருட்படுத்தாமல், 4 கிலோ மீட்ட தூரத்திற்கு வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

2001-ம் ஆண்டு அசாமியத் திரைப்படமான தாக் படத்தில் அவர் பாடிய ‘மாயாபினி ராதிர் புகுட்’ (Mayabini Ratir Bukut) பாடலை, “நான் மறைந்தால், இந்தப் பாடலைத் தான் அசாம் மக்கள் பாட வேண்டும்,” என்று முன்பே கூறியிருந்தார். அவரது இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன்  இந்தப் பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினர். ஜூபீன் கார்க்கின் செல்லப் பிராணிகளான நான்கு நாய்களும் அவரது உடல் அருகே மௌனமாகக் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தின. சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என லட்சோப லட்சம் பேர் அங்கு திரண்டு இருந்தனர்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இறுதி ஊர்வலத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, அசாம் சட்டமன்றத் தலைவர் பிஸ்வஜித் தைமரி, முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன், பாரம்பரிய கலாச்சார முறைப்படி, சோனாப்பூர் அருகே காமர்குச்சி என்.சி. கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் அன்று, அசாம் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு உடனடியாக 6 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இறுதி ஊர்வலம் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். குவஹாத்தி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது, சாலைகள் துக்கத்தில் மூழ்கின.

மைக்கேல் ஜாக்சன், போப் பிரான்சிஸ், மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியவர்களைத் தொடர்ந்து, உலகின் நான்காவது பெரிய இறுதி ஊர்வலம் ஜூபீன் கார்க்கினுடையது என்று லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. ஜூபீன் கார்க்கின் மறைவு, அசாமிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய இசைத்துறைக்குமே பெரும் இழப்பாக மாறியிருக்கிறது.

music director Assam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe