தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை வாசலில்தான் விழவேண்டும்  என்று சொல்லும் அளவுக்கு பெரிய ஓட்டல்களில் இருந்து  தள்ளுவண்டிக் கடைகள் வரை எங்கெங்கும் பிரியாணி கமகமக்கிறது.  பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு பிரியாணி  என்பதால், அதன் பெயரில் பெரிய அளவில் மோசடி செய்து  கோடிகளில் பணத்தைக் குவிக்கலாம் என்ற திட்டம்  ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் மனதில் உருவானது.  

400 ஆண்டுகளுக்கு முன்பே மொகலாயப் பேரரசர்களின் அரச  சமையலறையில் உருவானதாலும்,  பக்ரீத், ரம்ஜான் போன்ற இஸ்லாமியப் பெருநாட்களின்போது பிரியாணி விருந்து அனைத்துச் சமுதாய மக்களிடமும் போய்ச் சேர்ந்ததாலும்,  பிரியாணியையும்  இஸ்லாமியரையும் பிரித்துப் பார்க்கமுடியாது என்ற நிலை  இருப்பதாலும், தன்னுடைய பிராண்டுக்கு மரக்கார் பிரியாணி எனப்  பெயர் வைத்துப் பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கினார் கங்காதரன்.

பண்ணுவது மோசடியாக இருந்தாலும், முதலில் நம்பகத்தன்மையை  ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் கங்காதரன்.  புழுவைத் தூண்டிலில் மாட்டி, அதனைத் தனக்கான இரையென்று நம்பி  வரும் மீன் சிக்கும்வரை காத்திருக்கும் உத்தியை நேர்த்தியாகக் கடைப்பிடித்துள்ளார். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் முதலில்  21 மரக்கார் பிரியாணிக் கடைகள் திறக்கப்பட்டன. அந்தக் கடைகளுக்கு  சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்களை அழைத்துவந்து   “மரக்கார் பிரியாணியை மறக்கமுடியுமா?” எனப் பேசவைத்து,  உலகத்  தரத்திலான மரக்கார் பிரியாணி கிளைகளை உலகம் முழுவதும்  தொடங்கவிருக்கிறோம் என்று விளம்பரப்படுத்தினார். ஊருக்கு ஊர் மரக்கார் பிரியாணி கிளைகளைத் தொடங்குவதற்கு ஆர்வம்  காட்டியதால், டெபாசிட் என்ற பெயரில் கோடிகளைக் குவித்துள்ளார்  கங்காதரன்.

91

Advertisment

‘அடுத்து.. வேலையைக் காட்ட வேண்டியதுதான்’  என கங்காதரன்  முடிவெடுத்த நிலையில்,  அந்த 21 மரக்கார் பிரியாணி கடைகளும்  மூடப்பட்டன. கிளை உரிமை தருவதாக லட்சங்களில் முதலீடு செய்ய  வைத்து 239 பேரிடம் ரூ.25 கோடிவரை ஏமாற்றியிருக்கிறார்  கங்காதரன். இவர்களில் 98 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். 81  பேரிடம் ரூ.4.18 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டு,  மதுரையைச் சேர்ந்த சுபாஷ் ராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரால்  கங்காதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரைச் சேர்ந்த  வஹாப்,  கங்காதரனால் தான் ஏமாற்றப்பட்ட கொடுமையைக் குமுறலாகக்  கொட்டினார்.

92

Advertisment

“கங்காதரன்கிட்ட ஏமாந்த பலரும் அன்றாடம் காய்ச்சிங்க. ஏதாவது ஒரு  தொழில் பண்ணி முன்னுக்கு வந்துறமாட்டோமா? நமக்கு ரெகுலரா ஒரு  நல்ல வருமானம் வந்துறாதாங்கிற தவிப்புல இருந்தவங்க. நான் ஹோட்டல் வச்சிருந்தேன். எலக்ட்ரானிக்ஸ் அன்ட் பர்னிச்சர் கடை வச்சிருக்கேன்.  மரக்கார் பிரியாணி ஏஜன்டுங்க என்னை மாதிரி ஆளைப் பிடிச்சு இன்வெஸ்ட்  பண்ணவச்சாங்க.  அந்த ஏஜண்டுகளுக்கு சம்பளம் 35,000 ரூபாய். ஒரு  ஆளைப் பிடிச்சுக் கொடுத்தா தனியா ரூ.25, 000. பெட்ரோலுக்கு.. சாப்பாட்டுக்கு  எல்லாத்துக்கு சேர்த்து டெய்லி பேட்டா 600 ரூபாய். இவ்வளவும் கிடைச்சா  அந்த ஏஜண்ட் சும்மா இருப்பானா? மாங்கு மாங்குன்னு சுற்றி ஒரே நாள்ல 4  பேரைக்கூட பார்த்து வச்சிருவான். நாம கடை திறக்குறதுக்கு முன்னாலயே  ஏஜண்ட் வந்து நின்னுறுவான். இவங்க குறிவச்சதுல 40 சதவீதத்துக்கு மேல  முஸ்லீம் ஆளுங்க.  அதுல ரொம்பப் பேரு 45 வயசுக்கு மேல உள்ளவங்க.  அப்புறம் ஐஸ்கிரீம் கடை, பால் கடை வச்சிருக்கவங்கள மெயினா  பார்த்திருக்காங்க. உங்களுக்கு கிளை உரிமை தர்றோம். எல்லாத்தயும் நாங்க பார்த்துக்கிறோம். மேன்பவர் நாங்களே கொடுத்திருவோம். ரூ.51,8000  டெபாசிட் பண்ணுங்க. 10 பெர்சன்ட் லாபம் உங்களுக்கு. மாசம் ரூ.50,000  தர்றோம். இது இல்லாம வாடகையும் நாங்களே கொடுத்திருவோம்.  வேலையாட்களுக்கு சம்பளம் நாங்களே கொடுத்திருவோம். நீங்க கடையை  பார்த்து அட்வான்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்னு மண்டைய கழுவிட்டாங்க. பூட்டுனாங்கள்ல அந்த 21 கடைக்காரங்களுக்கும் 10 பெர்சன்ட்  கமிஷன் தரல. என்னை மாதிரி 240 பேரை ஏமாத்திருக்கான். மரக்கார்  பிரியாணி ஊழியர்கள் 70 பேரை ஏமாத்திருக்கான். அந்த ஊழியர்களுக்கு  உதவ யாரும் முன்வரல.

96

ஏமாத்த ஆரம்பிச்சதும் கங்காதரன் பின்னால எப்பவும் வக்கீல்கள்  இருந்தாங்க. அவங்கள்லாம் கோர்ட்டுக்கு போற வக்கீல் மாதிரி தெரியல. டெபாசிட்டை திரும்பக் கேட்கிறவங்கள மிரட்டுறதுதான் அவங்க வேலை.  அந்த ஏரியா முக்கிய அரசியல்வாதிங்க உதவியாளர்களுக்கு மொபைல்  வாங்கிக் கொடுக்கிறது.. ஒரு லட்ச ரூபாய்க்கு கிஃப்ட் தர்றது.. போலீஸ்  அதிகாரிகளுக்கு மாமூல் தர்றதுன்னு தனக்கு பாதுகாப்பா நெறய காரியம்  பண்ணிட்டு இருந்தான் கங்காதரன். ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன்ல  கங்காதரன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா  வாங்கமாட்டாங்க. அந்த போலீஸ்  செல்வாக்கை வச்சு பணம் கேட்கிறவங்கள மிரட்டிட்டு இருந்தான்.    கங்காதரன் மேல ஏற்கனவே சில வழக்குகள் இருக்கு. பாஸ்போர்ட் வாங்கித்  தர்றேன்.. வெளிநாட்டுல வேலை வாங்கித் தர்றேன்னு ஏமாத்திருக்கான்.

94

போலீஸ் அகடமின்னு சொல்லி ட்ரெய்னிங் கொடுத்ததா கேஸ் இருக்கு.  இவன்கூடவே எல்லாமா இருந்த பிரவீனை 20ஆம் தேதி அரெஸ்ட்  பண்ணிட்டாங்க. அப்புறம் சண்முகசுந்தரம்.. சதீஸ்குமார், சுந்தர்ராஜ், சங்கர்  கணேஷ்ன்னு எல்லாரும் வழக்குல சிக்கிருக்காங்க. கவர்மென்ட் இந்த  மோசடி குரூப்போட சொத்தை முடக்கி.. பாதிக்கப்பட்டவங்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு பண்ணனும்.” என்றார் பரிதாபமாக.

டிசைன் டிசைனாக ஏமாற்றுகின்றனர்; ஏமாறுகின்றனர்!