மாணிக்கம் தாகூருக்கு என்னாச்சு? திமுகவுடன் தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது ஏன்? விருதுநகரில் அவருடைய ஆதரவாளர்கள் ஏன் விசிலடிக்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கு விடை தேடினோம். மாணிக்கம் தாகூர் எம்.பி.யாக இருக்கும் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் கதர்ச்சட்டையினரே குமுறலுடன் விவரித்தனர். தங்களது சொந்தக் கட்சி என்றும் பார்க்காமல், ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குறித்து உள்ளது, உள்ளபடி பேசுகிறோம்’ என்று மனம் திறந்தனர்.
“தமிழ்நாட்டுல எங்க (காங்கிரஸ்) கட்சிய வெளில இருந்து யாரும் வந்து கெடுக்க வேண்டியதில்லை… எங்கள நாங்களே கெடுத்துக்குவோம். 1971-ல இதுக்கான அடித்தளத்தை போட்டவர் அன்னை இந்திரா காந்தி. மாநிலத்துல திமுக.. மத்தியில காங்கிரஸ்… தமிழ்நாட்டுல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை முக்கியம் இல்ல. பார்லிமெண்ட்ல காங்கிரஸ் எம்.பி.க்கள்தான் முக்கியம். 1967 தேர்தல்ல தமிழ்நாட்டுல எல்லா தொகுதியிலும் போட்டியிட்டு, பெரும்பான்மையான தொகுதிகளில் தோற்றுப்போயி அப்ப வாங்கின பலத்த அடிதான், அன்னை இந்திரா காந்தியை அப்படியொரு முடிவு எடுக்க வச்சது.. தற்போது இத்தனை அலப்பறை பண்னும் மாணிக்கம் தாகூர் விஷயத்துக்கு வருவோம். இந்த மாணிக் தாகூர் யாரு? அவருக்கும் விருதுநகர் எம்.பி. தொகுதிக்கும் என்ன சம்பந்தம்? விருதுநகர்ல போட்டியிட உள்ளூர்ல காங்கிரஸ்காரங்க யாருமே இல்லையா? அப்படின்னு நிறைய பேர் அப்பவே பேச ஆரம்பிச்சாங்க. அதுக்குக் காரணம் ஒண்ணுதான்.
டெல்லி தலைமை எப்பவுமே தங்களோட நலனைத்தான் முதல்ல பார்க்கும். லோக்கல் காங்கிரஸ் தலைவர்கள் அவங்களுக்கு பெரிசா ஒரு பொருட்டே கிடையாது. ‘மாணிக்கம் தாகூர் நமக்கு சரியா வருவாரா?’ங்கிற ஒரே கணக்குதான். அந்த டெல்லி சிபாரிசுலதான், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூரை வலிய கொண்டு வந்து விருதுநகர்ல திணிச்சாங்க. இங்க திமுகவ பத்தி தெரியாதா? காங்கிரஸ் கட்சி யாரை வேட்பாளரா நிறுத்தினாலும், நமக்கென்ன?ன்னு நினைச்சு, கூட்டணி உறவுக்காக ரொம்ப ஸ்ட்ராங்கா கை கொடுத்தாங்க. இதுல உண்மையிலேயே கொடுமை என்னன்னா…தங்களோட தொகுதிக்கு துளியும் சம்பந்தம் இல்லாத மாணிக்கம் தாகூரை ஜெயிக்க வச்சு, ஆகச்சிறந்த பார்லிமென்டேரியன், வைகோ மாதிரியான தலைவரை, விருதுநகர் தொகுதியில தோற்கடிச்சதுதான். என்ன இது? மதிமுக தலைவருக்கு ஆதரவா பேசுறோம்னு நினைக்காதீங்க. அவர் மாற்றுக் கட்சி தலைவரா இருந்தாலும், விருதுநகர் தொகுதிக்கு பார்த்துப் பார்த்து நல்லது பண்ணுனாரு. அதை மறக்காம, மறைக்காம பேசுறோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/mani2-2026-02-17-18-01-56.jpg)
இந்த ஒரு தடவை இல்ல.. இதே விருதுநகர் தொகுதில மூணு தடவை திமுக கூட்டணி தயவுல எம்.பி. ஆயிருக்காரு இந்த மாணிக் தாகூர். ஆனா 2014-ல நாங்க (காங்கிரஸ்) தனித்துப் போட்டியிட்டப்ப, தமிழ்நாட்டுல எங்க கட்சிக்கு உண்மையிலே எவ்வளவு செல்வாக்கு இருக்குங்கிறாது வெட்ட வெளிச்சமா தெரிய வந்துச்சு. அத்தனை தொகுதியிலயும் தோல்வி. இதே விருதுநகர்ல 2014-ல மாணிக்கம் தாகூர் தனியா நின்னப்ப, கிடைச்சது என்ன? தோல்விதான். அதுவும் 4வது இடம். வாங்கின வாக்கு சதவீதம் வெறும் 2.85%. இப்படி ஒரு படுதோல்வியை மாணிக்கம் தாகூர் ஏன் சந்திச்சாரு?”. ‘அது என்னப்பா மாணிக்கம் தாகூர்? வடநாட்டுக்காரன் மாதிரி பேரை வச்சுக்கிட்டு தமிழ்நாட்டு அரசியல்ல குப்பை கொட்ட முடியாது. இனிமே உன் பேரு மாணிக்கம். நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நீயும் பேரை மாத்திக்கன்னு’ அட்வைஸ் பண்ணுனது யாரு தெரியுமா? திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தான். அப்புறம் தம்பி மாணிக்கத்துக்கிட்ட அண்ணாச்சி காட்டின பாசம் இருக்கே… அப்படி ஒரு பாசம். அண்ணாச்சி கிழிச்ச கோட்டை தாண்டாத தங்கக் கம்பியா இருந்தாரு இந்த மாணிக்கம் தாகூர்.
அப்புறம் ஏன் 2024 பாராளுமன்றத் தேர்தல்ல, அண்ணாச்சியோட அருப்புக்கோட்டை தொகுதில மட்டும் 12,278 வாக்குகள் மாணிக்கம் தாகூர் பின்தங்கினார்? இதுக்கு பதில் சொன்னா கொஞ்சம் கசக்கும்.​ விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில கடந்த 15 வருஷமா,​ தொகுதி மக்கள்கிட்டயும், எங்க கட்சிக்காரங்ககிட்டயும்​ எம்.பி. சம்பாதிச்ச கெட்ட பேரு தான் அந்த 12,278 வாக்குகள் வித்தியாசம். விருதுநகர் தொகுதி அவருக்கு ஒரு அரசியல் முகவரி, அவ்வளவுதான்.. இங்க ஜெயிச்சா போதும்… டெல்லி போயி அரசியல் லாபி பண்ணணும். தொகுதி பிரச்சனை, கட்சி கட்டமைப்பு, உள்ளூர் தலைவர்கள் – இதெல்லாம் அவரு கணக்குல வராது. அவரோட மைண்ட் எப்பவும் தன்னை சுத்தியே ஓடும். நான் மேலிடத்து ஆளு. ராகுல் காந்திக்கு ஃப்ரண்ட். தமிழ்நாட்டுல இப்படி கெத்து காட்டுறதுல ஒரு குறைச்சலும் இல்ல. இந்த கெத்து காட்டித்தான்.. மேலிட தேர்தல் பார்வையாளர், மேலிட இன்சார்ஜ் குழு, கட்சி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புன்னு – மாணிக்கம் தாகூர் காட்டுல மழை பெய்தது.. அந்தமான் - நிக்கோபார் தீவு வரைக்கும் அவரோட பார்வை போயிருக்கு. ஆனா விருதுநகர் தொகுதிக்குள்ள மட்டும் வரவே வராது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/mani3-2026-02-17-18-02-15.jpg)
தமிழ்நாட்டுல தொடர்ந்து பேசப்படுற ரகசியம், ஒண்ணு இருக்கு. தெலங்கானாவுல மேலிட தேர்தல் பார்வையாளரா இருந்தப்ப, பார்வையாளர் பேர்ல வேட்பாளர் தேர்வாளரா நடந்ததுதான் பிரச்சனை. சீட் சிபாரிசுக்கு ஏகப்பட்ட கவனிப்பு நடந்ததா அந்த மாநிலத்துல எங்க கட்சிக்குள்ளேயே கொந்தளிப்பு. ஒற்றுமைய உருவாக்க வேண்டிய ஆளு, ‘டெல்லி லிஸ்ட்… மேலிட முடிவு…’னு போக்கு காட்டினதுனால​ தெலங்கானாவுல மாணிக்கம் தாகூருக்கு எதிரா கடுமையா கொந்தளிச்சாங்க. அங்க தலை இம்புட்டு உருண்டும், மாணிக்கம் தாகூர் இன்னும் பாடம் கத்துக்கல.. இப்ப இங்க உருட்டிக்கிட்டிருக்காரு.. அடிப்படையிலே எங்க கட்சிக்காரங்க யாரையும் அவர் பொருட்படுத்துறதே இல்ல. கல்யாண வீடு, சடங்கு வீடு, இழவு வீடுன்னு அப்பப்ப வருவார், தலையைக் காட்டுவார், போயிடுவார். அதுக்கு மேல கட்சித் தொண்டனுக்கு எதுவும் பண்ணல. அதிகாரம், பொறுப்புனு இப்ப பேசுறார். ஆனா நடைமுறையில என்ன கிடைச்சது? விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் - ஒரு காலத்துல காங்கிரஸ் வலுவா இருந்த நகராட்சிகள். எங்க கட்சிக்காரங்க தான் சேர்மனா இருந்தாங்க. இப்ப? ஒரு துணைத் தலைவர் பதவி கூட வாங்கிக் கொடுக்க முடியல. சிவகாசில ஒரு துணை மேயர் பதவிக்கே வழி செய்ய முடியல. வாய்ப்பு இருந்தும் அமைச்சர்கள்கிட்ட பேசி எதுவும் பண்ணல. யூனியன் சேர்மனாவும் எங்க கட்சிக்காரங்க இருந்தாங்க. இப்ப எந்த நகராட்சியிலயும் அப்படி ஒரு நிலை இல்ல. எந்த யூனியன்லயும் நாங்க செல்வாக்கா இல்ல. இப்படியிருந்தா கட்சி எப்படி வளரும்? 15 வருஷத்துக்கு மேல இங்க விருதுநகர் மாவட்டத்துல அரசியல் பண்ணிட்டு இருக்காரு மாணிக்கம் தாகூர். கட்சி மேல அவருக்கு என்ன அக்கறை இருந்துச்சு? இன்னைக்கு திடீர்னு அக்கறை பொத்துக்கிட்டு ஊத்துது. கீழே உழைக்குற தொண்டர்கள் பலன் அடைய வேண்டிய நேரம் வந்தா, வாய்ப்புகளை கைவிட்ருவாங்க. பாராளுமன்றம், சட்டமன்றம் வந்தா சீட் எண்ணிக்கை பேசுவாங்க. உள்ளாட்சித் தேர்தல் வந்தா? மேல இருந்து யாரும் முன்வர மாட்டாங்க. இதான் கீழ்மட்ட தொண்டர்களோட மனக்குமுறல். எலக்ஷன் வரைக்கும் அவங்களுக்குத் தேவை. முடிஞ்சதும் தொண்டர்கள் புறக்கணிப்பு. அப்புறம் எப்படி கட்சி வளரும்?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/mani4-2026-02-17-18-02-50.jpg)
இந்த மாவட்டத்துல கம்யூனிஸ்டுகளே சில இடங்கள்ல பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள்ல இருக்காங்க. நம்ம காங்கிரஸுக்கு இந்த மாவட்டத்துல? பூஜ்யம்.. மூத்த தலைவர்கள் எல்லாம் இப்ப வெறும் பார்வையாளர்கள் தான். இதான் உண்மை. விருதுநகர் தொகுதி மேல பாசம் இல்லன்னா கூட… மாமனார் பாசம் மாணிக்கம் தாகூருக்கு ரொம்ப இருக்கு. 2021-ல மதுரை, மேலூர் தொகுதில மாமனாருக்கு சீட் வாங்கிக் கொடுத்தாரு. கட்சி வளர்ச்சி, தொண்டர் உழைப்பு எல்லாம் பின்னாடி, குடும்பம் முன்னாடி. முடிவு என்ன? அந்த சீட்டு போச்சு.. அதிமுக பெரிய வித்தியாசத்துல ஜெயிச்சிருச்சு. இப்பகூட மதுரை வடக்கு தொகுதிய மாமனாருக்காக ரெடி பண்ணுறப்ப… கோ. தளபதிகூட கடுமையான முட்டல் மோதல். தொகுதி விஷயம்னா மவுனம். குடும்ப விஷயம்னா வேகம், அதான்.. நாங்கள்லாம் கொதிச்சு போயிருக்கோம். மாணிக்கம் தாகூர், இந்த மாவட்டத்துல சொற்பமா இருக்கிற அவரோட ஆதரவாளர்கள் இப்ப நடந்துக்கிறத பார்க்கும்போது குழப்பமா இருக்கு. தமிழ்நாட்டுல திமுக ஆட்சியில பங்கு வேணும்னா, அது மொதல்ல கட்சித் தலைமையிடம் சொல்ல வேண்டிய விஷயம் தானே? தலைமை மூலமா அந்த கருத்து வரட்டும். கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது மேஜை மேல வைக்கட்டும். அதைவிட்டுட்டு, பொதுவெளியில வந்து பேசுறது எதுக்குன்னு எங்க கட்சி தொண்டர்களுக்கே புரியல. திமுக–காங்கிரஸ் கூட்டணியில சர்ச்சை வரணும், உரசல் வரணும், கடைசில முறிஞ்சா நல்லதுன்னு ஒரு உள்நோக்கம் இருக்கிற மாதிரியே பேசிட்டிருக்காரு. கட்சி பலம் இல்லாத நேரத்துல, இப்படி பேசுறது யாருக்கு சாதகம்னு தெரியாம இல்ல. அட, காங்கிரஸுக்கு உள்ள இருந்துக்கிட்டே பா.ஜ.க.வோட திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு உயிர் கொடுக்கிறாரு. இந்த பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மாதிரி கட்சி விசுவாசம் இல்லாதவங்கள வசமா தூண்டிவிடறாங்கன்னு நல்லா தெரியுது. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்… மாணிக்கம் தாகூரோட நினைப்பு அந்த மாதிரிதான் இருக்கு. தேர்ந்தெடுத்த மக்கள்கிட்ட நல்ல பெயரும் இல்லை; கட்சி வளர்ச்சிக்காக தியாகபூர்வமா உழைத்ததுமில்லை. திமுக தோள் மேல ஏறி அரசியல் பண்ணி இந்த நிலைக்கு வந்துட்டு, இப்ப நன்றியுணர்வு துளிகூட இல்லாம நடந்துக்கிறாரு. ஏன் இப்படி நடக்குதுன்னு திமுககாரங்க எங்க முகத்துக்கு நேரா கேட்கும்போது எங்களால பதில் சொல்ல முடியல” என்றனர் வேதனையுடன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/mani1-2026-02-17-18-00-55.jpg)