தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்தச் சூழலில், பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முயற்சிக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இக்கட்சிகள், இந்நடவடிக்கை சிறுபான்மையினர், ஏழை எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டது எனக் குற்றம்சாட்டுகின்றன.

Advertisment

இருப்பினும், நவம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision - SIR) படிவங்களை வீடு வீடாக வழங்கி, இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்கள் சமர்ப்பிக்காதவர்கள் ஆகியோரை கண்டறிந்து திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

5

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் (SIR) மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்தில் மேற்கு வங்கத்தில் நடக்கும் தொடர்ச்சியான தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குஷிகட்டாவைச் சேர்ந்த 57 வயதான ஷஃபிக்குல் காஸி என்பவர் 5 ஆம் தேதி ஜெய்பூரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், மாநிலத்தில் மேற்கொள்ளும் எஸ்.ஐ.ஆரின் அச்சத்தால் ஷஃபிக்குல் காஸி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அவரது மனைவி, “செல்லுபடியான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர் பயந்து போனார். நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று தொடர்ந்து கூறி வந்தார். பயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இன்று காலை தேநீர் அருந்திய பிறகு, ஆடுகளைக் கட்டச் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று வேதனை தெரிவித்தார்.

Advertisment

கடந்த வாரம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பிரதீப் கர் என்ற நபர், இதே போன்று எஸ்.ஐ.ஆர் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்ற பயத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று கடந்த 4 ஆம் தேதி உலுபேரியாவைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி ஜாஹிர் மால் என்பவரும் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, எட்டு பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மற்றவர்கள் பதட்டம் காரணமாக நோய்வாய்ப்பட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். எஸ்.ஐ.ஆர் அச்சம் காரணமாக தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்படும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மம்தா, “வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் பெயரில் மக்களை அச்சுறுத்துவது ஜனநாயக விரோதம். இது NRC-ஐ நினைவுபடுத்துகிறது” என்று சாடியுள்ளார்.