Advertisment

ஊர்ப் பெயர்களில் பிழை: திருத்தம் செய்ய அரசுக்கு கோரிக்கை

2

அரசு ஆவணங்கள், பேருந்துகளில் பிழையாக எழுதப்படும் ஊர்களின் பெயர்களை சரிசெய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

பாரம்பரியமிக்க ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊர் பெயர்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அந்தந்தப் பகுதிகளில் காணப்படும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர், நில அமைப்பு, ஆன்மீகம் சார்ந்த பெயர்களை ஊர்களுக்கு இட்டுள்ளனர் நம் முன்னோர்கள். இப்பெயர்கள் பேருந்துகளிலும், வருவாய்த்துறைப் பதிவுகளிலும், அரசின் இணையதளங்களிலும் பிழையாக எழுதப்பட்டு வருவது வேதனையானது.

Advertisment

Untitled-1

ஊர்களின் பெயர்களுக்கு விளக்கமளித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:  கடற்கரையோரம் அமைந்த நெய்தல் நிலத்துத் துறைமுகம் பட்டினம்  எனவும், பெரிய வணிக நகரம் பட்டணம் எனவும் அழைக்கப்படும். பழங்காலத்தில் துறைமுகமாகவும், வணிக நகரமாகவும் இருந்த கடற்கரை ஓரத்து ஊர்கள் பட்டினம், பட்டணம் என இரு பெயராலும் அழைக்கப்பட்டன. அவ்வகையில் தேவிபட்டினம், பெரியபட்டினம் ஆகிய ஊர்களின் பெயர்களை தேவிபட்டணம், பெரியபட்டணம் என எழுதுவதும் சரியானதே. ஆனால் இவ்வூர்களை தேவிபட்டிணம், பெரியபட்டிணம் என எழுதுவது பிழையானது. பொருள் இல்லாதது.

சேதுபதி மன்னர்கள் காலத்தில் அவர்களின் ஒரு படைப் பிரிவு தங்கியிருந்து காவல் காத்த இடம் என்பதாலும், ராமநாதபுரம் நகரத்தைக் காத்த வீரனின் பெயராலும் உருவாகியுள்ள ஊர் பட்டணம் காத்தான். இதிலுள்ள பட்டணம், ராமநாதபுரம் நகரத்தைக் குறிக்கிறது. பட்டணம் காத்தான் என்ற இந்த ஊரின் பெயர் வருவாய்த்துறை ஆவணங்களில் பட்டிணம் காத்தான் எனத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிழையாக எழுதப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத்தின் தகவல் பலகைகளில் பட்டணம் காத்தான் எனச் சரியாக எழுதப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

1

ராமநாதபுரம் கோட்டைக்கு வெளிப்பகுதியில் உருவான நகரம்  என்பதால் வெளிப்பட்டணம் என அழைக்கப்படும் இவ்வூரும் சில சமயம் அதன் பொருள் தெரியாமல் வெளிப்பட்டிணம் என பிழையாக எழுதப்படுகிறது.

கோயிலின் தல வரலாறுபடி திரு+ஆடு+ஆனை திருவாடானை என ஆனதாகச் சொல்லப்படுகிறது. தேவாரப்பாடல்களில் திருவாடானையில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஆடானை நாயகன் என்றே குறிப்பிடப்படுகிறார். இவ்வூர்ப் பெயர் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், வருவாய்த்துறைப் பதிவுகளிலும், பேருந்துகளிலும், திருவாடனை எனப் பிழையாக எழுதப்பட்டு வருகிறது. இதுபோன்று அரசு ஆவணங்களில் பிழையாக உள்ள அனைத்து ஊர்களின் பெயர்களையும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ramanadhapuram tngovt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe