Advertisment

"முகத்தை துடைப்பதை அரசியலாக்குவதா?'' -டெல்லி விசிட் சர்ச்சைக்கு இபிஎஸ் பதிலடி!

A5282

EPS responds to Delhi visit controversy! Photograph: (ADMK)

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, சேலம் ஓமலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ’’இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கானவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். நான் 153 தொகுதிகளில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். அந்த 153 தொகுதிகளிலும் மக்கள் அளித்த ஆதரவு அடுத்த தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்பதை எங்களுக்கு உணர்த்தியுள்ளது. இரண்டாவது நாளாக நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. அதுபற்றி விளக்கமாக, தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

Advertisment

ஸ்டாலின் அடிக்கடி என்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, யாரை எதிர்த்தார்களோ அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகங்கள் காண்பித்துள்ளன. கேலோ இந்தியா விளையாட்டையும், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டையும் மிக ஆடம்பரமாக நடத்தியது திமுக அரசு. அதற்கு பிறகு பிரதமரை சென்னைக்கு அழைத்து வந்தார்கள். கலைவாணர் அரங்கில் ஆடல், பாடல் நிகழ்ச்சியோடு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தினார்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்று அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

Advertisment

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பிரதமர் சென்னைக்கு வந்தபோது கருப்புக் கொடி காட்டினார்கள். ஆளும் கட்சியாக வந்த பிறகு அவரை வரவேற்றார்கள். பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது வெள்ளைக் குடை பிடித்தார்கள். இதுதான் திமுகவின் நிலைப்பாடு.

அண்மையில் காங்கிரஸ் மாநாடு நெல்லையில் நடந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோடங்கர் அதில் பேசும்போது, சட்டமன்ற தேர்தலில் 117 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும் என்று ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். கடலூரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசும்போது 60 ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்து பிழிந்து, சாறு எடுத்து அவர்கள் குடித்துவிடுகிறார்கள். வரும் தேர்தலில் அதிக தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் அரசாங்கத்தில் பங்குபெறுவோம் என்றார். இந்த செய்திகள் எல்லாம் ஊடகத்தில் விவாதமாக மாறவில்லை.

நான் உள்துறை அமைச்சரை சந்திக்கிறேன் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. 16-ம் தேதி இரவு நான் உள்துறை அமைச்சரை சந்திப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து நான் அவரை சந்திக்கச் சென்றேன்.   தலைமைக்கழக நிர்வாகிகள், மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அவரை சந்தித்தேன். நேரம் அதிகமானதால் மற்றவர்களை அனுப்பிவிட்டு அவருடன் சிறிது நேரம் பேசினேன்.

a5261
EPS responds to Delhi visit controversy! Photograph: (ADMK)

நான் காலையில் துணை குடியரசுத் தலைவரை அவர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துச் சொன்னேன். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருந்தார்கள். அப்போதும் நான் அரசாங்க காரில்தான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து சென்று சந்தித்தேன். உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றபோதும் அரசாங்க காரில்தான்  சென்றேன். பிறகு மற்றவர்கள் சென்ற பிறகு 10 நிமிடங்கள் அவருடன் பேசிவிட்டு காரில் திரும்பி வந்தேன். காரில் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது என் முகத்தை துடைக்கிறேன். அப்போது அதை எடுத்து அரசியல் செய்கிறார்கள். இது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தமிழக ஊடகங்கள் இந்திய நாட்டுக்கு முன் உதாரணமாக விளங்கவேண்டிய நம் பத்திரிகை ஊடகங்கள், இப்படி தரம் தாழ்ந்து செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது? நான் முகத்தை துடைப்பதை வீடியோ எடுத்து வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிடுவது எந்த விதத்தில் சரியானது..? ஊடங்கங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

ஒரு கட்சி பொதுச்செயலாளர் பற்றி திட்டமிட்டு தவறாக செய்தி வெளியிடுவது தவறு என்பதை உணர வேண்டும். இனி ரெஸ்ட் ரூம் போனால் கூட சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் எனும் அளவுக்கு அரசியல் சூழல் மாறியிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். முகத்தை மூடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வெளியே செல்வதற்கு என்ன காரணம் என்று முதல்வர் கரூர் கூட்டத்தில் கேள்வி கேட்கிறார். நான் பகிரங்கமாகத்தானே அவரை சந்திக்கப் போனேன். ஒரு முதல்வர் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார், அவரிடம் சரக்கு இல்லை எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இந்த விஷயத்தைப் பேசுகிறார். இது முதல்வருக்கு அழகல்ல. ஒரு முதலமைச்சர் எதை பேச வேண்டும் என்று இல்லையா? இதற்கு தான் இவரை பொம்மை முதல்வர் என்று சொல்கிறேன்.

கரூரில் செந்தில்பாலாஜி பற்றி முதல்வர் பேசும்போது, ‘கோடு போட்டால் ரோடு போடுவார்’ என்றார். இதே செந்தில்பாலாஜி பற்றி முன்பு அவர் என்ன பேசினார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். விசுவாசத்தைப் பற்றி அமைச்சர் ரகுபதி சொல்கிறார். விசுவாசம் என்றால் என்ன விலை என்று கேட்கும் ரகுபதி அவர்களே.. நீங்கள் எந்த இடத்தில் இருந்துகொண்டு பேசுகிறீர்கள்? எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதே தீயசக்தி திமுகவை தோற்கடிக்கத்தான்.  அதிமுகவில் வேட்பாளராக போட்டியிட்டு, தொண்டர்கள் உழைப்பால் வென்ற உங்களை அம்மா அமைச்சராக்கினார். அதிமுகவில் கிடைத்த புகழ் தான் திமுகவில் சேர உங்களுக்கு இடம் கிடைத்தது. அந்த நன்றி மறந்த உங்களுக்கு விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

நான் முகத்தை மறைத்ததாக முதல்வர் சொல்கிறார். முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் சட்டையை கிழித்துக் கொண்டு வருவார்கள்? மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அந்த நிலையில் வந்தவர் இன்று என்னைப் பற்றி பேசுகிறார். அதிமுகவில் நான் தும்மினாலும் இருமினாலும் விவாத நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக என்னைப் பற்றியே நீங்கள் விவாதம் நடத்துவதுடன்,  செய்தியும் போடுகிறீர்கள். ஆளும் கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்னைப்பற்றியே பேசுகிறீர்கள். இதற்கு நன்றி. ஆனால், நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். 

வறுமையை மையமாக வைத்து கிட்னி திருடப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவமனையில் இது நடந்துள்ளது. இந்த முறைகேடுக்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது எவ்வளவு பெரிய மோசடி. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்மணியின் வறுமையைப் பயன்படுத்தி அவரது கல்லீரலை எடுத்துள்ளார்கள். எதற்கெல்லாமோ வழக்கு போடும் அரசு, இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நான் டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து தேசத்துக்கு உழைத்தவருக்கு மரியாதை செலுத்த பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை கடிதம் கொடுத்தோம். 

a5263
EPS responds to Delhi visit controversy! Photograph: (ADMK)

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு உள்துறை அமைச்சர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார். அப்படி பேசிய பிறகும் இந்த விஷயத்தில் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். உள்துறை அமைச்சர் என் எழுச்சி பயணத்தைப் பற்றி பாராட்டிப் பேசியதுடன் அது குறித்து விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.  

அண்மைக்காலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அம்மா காலத்தில் இருந்து, கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். அதன்படிதான் சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு கண், காது, மூக்கு வைத்து செய்தி வெளியிடுகிறீர்கள். உள்துறை அமைச்சர் அதிமுக விஷயங்களில் தலையிட மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு டிடிவி, ‘நான் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறேன்’என்று சொன்னார். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு சம்மதிப்போம் என்றார். ஆனால் அண்மையில் என் மீது சில குற்றச்சட்டுகளை சொல்லி வருகிறார். நேற்றைய தினம் நான் முகமூடி அணிந்து சென்றதாகச் சொல்லியிருக்கிறார்.


நான் முகமூடி அணிந்து போகவில்லை. அவர்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் இணைந்தார். அம்மா டிடிவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். அவர் 10 ஆண்டுகள் கட்சியிலே இல்லை. அம்மா இறக்கும் வரை அவர் சென்னை பக்கமே வரவில்லை. அவர் என்னைப் பற்றி பேசுகிறார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று நான் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் இப்படி பேசுகிறார். அவர் என்ன உள்நோக்கத்தோடு பேசுகிறார் என்று எனக்கு புரியவில்லை…’’ என்று கூறினார். 

இதையடுத்து வேறு காரில் வெளியேறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, ‘’நான் எந்த காரில் போனேன் என்று கேட்கிறீர்களே இதுபோல் ஸ்டாலினிடம் கேட்கிறீர்களா..? அரசு காரில் சென்றேன். உள்துறை அமைச்சருடன் குழுவினர் சந்திப்பு முடிந்ததும் அவர்கள் கிளம்பினார்கள். அதன் பிறகு நான் சந்தித்துப் பேசிவிட்டுக் கிளம்பினேன்.

நான் தென் மாவட்டத்துக்கு எழுச்சிப்பயணம் சென்றபோது அங்குள்ள மக்கள் என்னிடம்  கோரிக்கை வைத்தார்கள். அதை வைத்துதான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். உட்கட்சி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. நாங்கள் பொய் சொல்வதில்லை. நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் சொன்னது பொய்யான செய்தி. அதை இப்போது அவரே உறுதிப்படுத்தி விட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு செயல்பட முடியாது என்று நான் முன்பே கூறியிருந்தேன். அது முழுமையாக தெரிந்தும் பொய் அறிவிப்பை வெளியிட்டு மக்களை திமுக ஏமாற்றி இருக்கிறது. இப்போது அதை நிறைவேற்ற முடியாது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

எங்கள் ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று எல்லோரும் சொன்னார்கள். எல்லோரும் கவிழ்க்க முயற்சி செய்தார்கள். ஒரு சாதாரண விவசாயியான எனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. எங்கள் திறமையாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த ஆதரவாலும் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை வழங்கினோம். எங்கள் ஆட்சி தொடர மத்திய அரசு உதவி செய்தது. பல நலத்திட்டங்களுக்கு நிதி வழங்கியது. அதனால் பல திட்டங்களையும் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். அந்த அடிப்படையில்தான் அதிமுக சிறப்பாக அட்சி அமைக்க மத்திய பாஜக அரசு உதவியது என்ற கருத்தை சொன்னேன்" என்றார்.

admk amithsha b.j.p edappaadi palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe