புகழ்பெற்ற புனித தலமாக விளங்கும் தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான தர்மஸ்தலாவில், 800 ஆண்டுகள் பழமையான புனித தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் கோயில் உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். தலைமுறை தலைமுறையாக ஜெயின் ஹெக்டேகுடும்பத்தினரால் இக்கோயில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார். சிவபக்தர்களுக்கு அமைதியை அளிக்கும் தர்மஸ்தலா, தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மஸ்தலாவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக எவ்வித புகாரும் பதிவு செய்யப்படாததால், காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறினர். இவ்வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பள்ளி மாணவிகள், மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக, கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவு ஊழியர் ஒருவர் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஜூலை 4 தேதி முன்னனாள் துப்புரவு ஊழியர் தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜூலை 13 தேதி, புகாரளித்தவர் தனது அடையாளத்தை மறைத்து உடல் முழுவதும் கருப்பு துணியை அணிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெல்தங்கடி முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அதில், “1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில், சிறுமிகளும் அடங்கும். அந்த பெண்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் என்னை மிரட்டிக் கட்டாயப்படுத்தினர். 1998ஆம் ஆண்டு எனது மேற்பார்வையாளர் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்த நேர்ந்த கொடூரங்கள் என்னை பயத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும், உடல்களைப் புதைக்க மறுப்பு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் என்னையும் எனது குடும்பத்தையும் கொன்று பிணங்களோடு பிணங்களாக எரித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அதனால் பயந்துபோய் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தேன். தர்மஸ்தலாவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் டீசல் பயன்படுத்தி சில உடல்களை எரிக்கவும், மற்றவற்றை அடக்கம் செய்யவும் என்னைக் கட்டாயப்படுத்தினர். நான் நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்துள்ளேன். சில குழந்தைகளை பள்ளி சீருடையில் புதைத்துள்ளேன். அதிலும் ஒரு குழந்தை 12 அல்லது 15 வயது இருக்கும், அந்த குழந்தையின் முகம் ஆசிட்டால் சிதைக்கப்பட்டிருந்தது. அதையும் நான்தான் புதைத்தேன். இப்படி ஒரு வருடமல்ல.. இரண்டு வருடமல்ல... 16 வருடங்கள் புதைக்கும் வேலையைச் செய்தேன்.
அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் செய்யப்படவில்லை. அந்த குற்ற உணர்வு என்னை துரத்துகிறது. இறந்தவர்களுக்கு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். தர்மஸ்தலா கோயில் நகரத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்களால் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, எனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்று அஞ்சி, நான் அண்டை மாநிலத்திற்கு தப்பிச் சென்றேன். ஆனால், எனது மனசாட்சி என்னை தூங்கவிடவில்லை. அதனால் தான் தற்போது இதனை வெளியே கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த குற்றங்களைச் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன். அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் அடையாளம் காண்பிப்பேன். உடல்களை தோண்டி எடுக்க வேண்டும், பெண்களின் இறப்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்” என்று அவர் அதிர்ச்சி தரும் தகவல்களைத் தெரிவித்தார். மேலும், அவர் ரகசியமாகத் தோண்டி எடுத்ததாகக் கூறப்படும் எலும்புக்கூடுகளை ஆதாரமாக சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/19/94-2025-07-19-14-34-21.jpg)
இதற்கிடையில், பெங்களூரைச் சேர்ந்த 60 வயது சுஜாதா என்ற பெண்மணி, “2003-ல் எனது மகள் அனன்யா, மருத்துவ மாணவியாக இருந்தபோது, தர்மஸ்தலாவில் காணாமல் போனார். அப்போது நான் கொல்கத்தாவில் இருந்தேன். தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ‘உங்கள் மகள் யாருடனாவது சென்றிருப்பார்’ எனக் கூறி என்னை அவமானப்படுத்தினர். கோயில் நிர்வாகிகளிடம் விசாரித்தபோதும், அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் மன வேதனையில் கோயில் வாசலில் அமர்ந்திருந்தபோது, சிலர் என்னைத் தாக்கி சித்திரவதை செய்தனர். இதில் மயக்கமடைந்து மூன்று மாதங்கள் கோமாவில் இருந்தேன். பெங்களூரில் கண் விழித்தபோது, எப்படி அங்கு வந்தேன் எனத் தெரியவில்லை. இப்போதாவது, தோண்டி பார்த்து என் மகளின் உடல் இருந்தால், அதனை எனக்கு கொடுங்கள். அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணீருடன் புகார் தெரிவித்தார். சுஜாதா முன்பு சி.பி.ஐ.யில் ஸ்டெனோகிராஃபராக பணியாற்றியவர் என்பதால், அவரது புகாரையும் புறந்தள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்கு, மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். மேலும், காணாமல் போனவர்கள் அல்லது இறந்தவர்கள் குறித்து குடும்பத்தினர் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் பெரும்பாலும் உரிய பதிலளிப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதேசமயம் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்த கர்நாடக வழக்கறிஞர் சங்கத்தினர், “இந்த வழக்கின் விசாரணையை காவல்துறையினர் தாமதப்படுத்துவதால், ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
மறுபுறம், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், கடந்த ஆண்டுகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். தற்போது வரை இந்த வழக்கை எஸ்.ஐ. அளவிலான போலீசாரே விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) மாற்றி உத்தரவிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தர்மஸ்தலா மீது புகார் வருவது இது ஒன்றும் முதல்முறை அல்ல, 2012-ல் நடந்த ஒரு கொலை வழக்கின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், 1985 முதல் 400 மர்ம மரணங்கள் நிகழ்ந்ததாகவும், அதில் 95 இளம் பெண்கள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால், அவை இன்று வரை வெறும் குற்றச்சாட்டுகளாகவே இருந்து வருகிறது; எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று தற்போது, 1995 முதல் 2014 வரை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மாநிலத்தின் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸும், பாஜகவும் மௌனம் காப்பது தொடர் சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.