திமுகவில் ஓரங்கட்டப்பட்டுள்ள மாஜி எம்எல்ஏ தமிழரசு, அண்மையில், அதிமுகவில் இருந்து த.வெ.க.,வுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோரால் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் இரு திராவிடக் கட்சிகளுக்குமே வெற்றி வாய்ப்பு எளிதல்ல என்பதுதான் சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பு பேசுபொருளாகி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர்.
ஓமலூர் தொகுதியில், 1971 முதல் 2021 வரையிலான 12 சட்டமன்றத் தேர்தல்களில் 5 முறை திமுக நேரடியாக போட்டியிட்டு, ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில், அதிமுக 8 முறை வெற்றி பெற்று, தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் தொகுதியில் கட்சிகளின் செல்வாக்கு நிலவரம் குறித்து விசாரித்தோம். ''ஓமலூர் தொகுதியைப் பொறுத்தவரை, திமுகவுக்கு பாதுகாப்பானதாக ஒருபோதும் இருந்ததில்லை. இது, அதிமுக கோட்டைதான். ஆனாலும் இந்தமுறை, திமுக நேரடியாக ஓமலூரில் களமிறங்கும் எனத் தெரிகிறது.
அதிமுகவில் 'சிட்டிங்' எம்எல்ஏ மணி, மாஜி எம்எல்ஏ வெற்றிவேல், டெக்ஸ்டைல் அதிபர் 'பஞ்சுகாளிப்பட்டி' முருகேசன் ஆகியோர் சீட் பெறும் முனைப்பில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நிழல் இளங்கோவனுக்கு நெருக்கமாக இருப்பதோடு, பண பலம், வன்னியர் சாதி பலத்தோடு உள்ள சிட்டிங் எம்எல்ஏ மணிக்கு சீட் கிடைக்கக் கூடுதல் வாய்ப்பு உள்ளது. கவுண்டர் சமூகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக இருந்தால் பஞ்சுகாளிப்பட்டி முருகேசன் அல்லது மாஜி எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ஜாக்பாட் அடிக்கலாம். பஞ்சுகாளிப்பட்டி முருகேசன் சீட் கேட்டு எடப்பாடியிடம் இப்போதே தேர்தல் செலவுக்காக கணிசமான தொகையைக் கொடுத்து வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இவருக்கு ஓமலூரில் சீட் இல்லாதபட்சத்தில் சங்ககிரியில் தரப்படலாம். ஓமலூரில் கடும் போட்டி ஏற்படுமெனில், சீனியரான செம்மலையை களத்தில் இறக்கிவிடவும் இலைக்கட்சி தயாராக இருக்கிறது.
திமுக தரப்பிலோ, ஓமலூர் தொகுதியில் சீட் கேட்டு பெரும் படையே காத்திருக்கிறது. எனினும், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரான அமைச்சர் ராஜேந்திரன் கைக்காட்டும் நபருக்குதான் கட்சி மேலிடம் சீட் கொடுக்கும். அமைச்சரின் ஆதரவாளர்களான காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன், தளபதி நற்பணி மன்றத் தலைவர் மகேந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில துணைச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் சீட்டை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/17/ilaya-1-2026-01-17-15-27-23.jpg)
அதிமுக தரப்பில் மீண்டும் வன்னியருக்கு சீட் கொடுக்கப்பட்டால், திமுக தரப்பிலும் அதே சமூகத்தைச் சேர்ந்த மகேந்திரன் நிறுத்தப்படலாம். 2001 சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திரன் ஓமலூரில் களமிறங்கியபோது, அவருக்காக தொகுதி முழுவதும் தீயாக தேர்தல் வேலை செய்தவர் மகேந்திரன். தொகுதியில் 25க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டிக் கொடுத்தது, கொரோனா காலத்தில் 30 லட்சம் ரூபாய்க்குமேல் நல உதவிகள் வழங்கியது என மகேந்திரனுக்கு அனைத்து சமுதாய மக்களிடமும் நல்ல பெயர் இருக்கிறது. மகேந்திரன், ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிக்கட்டி பறப்பதால் கரன்சி பாசனத்திற்கும் பஞ்சமில்லை என்கிறார்கள்.
அதிமுக தரப்பில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் களத்தில் இறக்கப்பட்டால், திமுக தரப்பிலும் அதே சமூகத்தைச் சேர்ந்த செல்லதுரையை களமிறக்க வாய்ப்பு உள்ளது. இவர், அதிமுகவில் இருந்தபோது, கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்காக தீவிரமாக தேர்தல் வேலை செய்தவர்; திறமையான களப்பணியாளர் என்பதும், கருப்பூர் பேரூராட்சியில் செல்லதுரைக்கு தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதும் கூடுதல் பலம். அமைச்சர் ராஜேந்திரனின் 'குட்புக்'கிலும் இருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/17/ilaya2-2026-01-17-15-27-51.jpg)
திமுக சார்பில், இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனும்பட்சத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் பிரசன்னாதான் ஒரே 'சாய்ஸ்' என்று அடித்துச் சொல்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திரனுக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 'குட்புக்'கில் இருப்பதால் அருண் பிரசன்னாவின் பெயரும் லிஸ்டில் இருக்கிறது. ஓமலூரில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும் மாஜி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரும் பரிசீலனையில் இருக்கிறது,'' என்கிறார்கள் அரசியல் கள நிலவரம் அறிந்தவர்கள்.
இது ஒருபுறம் இருக்க, என்னதான் ஓமலூர் தொகுதி அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்தாலும் இந்தமுறை அக்கட்சியால் இங்கு எளிதாக கரையேறி விட முடியாது என்ற குரலும் களத்தில் பலமாக ஒலிக்கிறது. கிட்டத்தட்ட திமுகவுக்கும் இதே இடியாப்ப சிக்கல் இருக்கிறது என்கிறார்கள்.
திமுக, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.
''ஓமலூர் தொகுதியில் அதிமுகவின் பல்பாக்கி கிருஷ்ணன் 1989, 1991, 2011 தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்திருக்கிறார். சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் என பெயரளவுக்கு ஒரு பதவி கொடுத்தாலும்கூட, எடப்பாடி அவரை பெரிதாககண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான் பல்பாக்கி கிருஷ்ணன் கடந்த டிசம்பர் இறுதியில் திடீரென்று த.வெ.க.,வில் இணைந்தார். ஓமலூரில் த.வெ.க.,வுக்கு பெரும் படையைத்
திரட்டும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பல்பாக்கி கிருஷ்ணன் மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்த போதிலும் தொகுதி வளர்ச்சிக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. அதேநேரம் அவருக்குக் கெட்டப்பெயரும் இல்லை. ஓமலூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்துதான் அவர் த.வெ.க.,வில் இணைந்தார். தொகுதியில் செல்வாக்கு உள்ளவர் என்பதோடு, த.வெ.க.,வின் இளைஞர் பட்டாளமும் இணையும்போது எப்படியும் 25 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பெறும் வாக்குகள், அதிமுகவுக்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்தும்.
அதிமுகவுக்கு பல்பாக்கி கிருஷ்ணன் எப்படியோ, அதேபோல திமுகவுக்கும் முன்னாள் எம்எல்ஏ தமிழரசு 'ஸ்பாய்லர்' ஆக இருப்பார் என எச்சரிக்கின்றனர் மூத்த உடன்பிறப்புகள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/17/i3-2026-01-17-15-28-19.jpg)
2006 சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் தமிழரசு. பள்ளிக்கூடம் நடத்துகிறார். விவசாயம், புளூமெட்டல் தொழில் செய்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காக துணிச்சலாக களத்தில் நிற்கக் கூடியவர் என்பதால் கட்சிகளைக் கடந்தும் அவருக்கென மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் உள்ளடியால் மருத்துவர் ராமதாசுடன் கோபித்துக் கொண்டு அக்கட்சியை விட்டு வெளியேறிய தமிழரசு, 2019ல் திமுகவில் இணைந்தார். மாஜி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபனுடன் நெருக்கமாக இருக்கிறார் என்பதால் அமைச்சர் ராஜேந்திரன் அவருடன் கட்சியினர் யாரும் அன்னம் தண்ணீ புழங்கக்கூடாது என கட்டளையிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திரன், 2001ல் ஓமலூரில் களமிறங்கியபோது அவருக்காக தமிழரசு களத்தில் ஆதரவு கொடுக்கவில்லை என ரகசியம் சொல்கிறார்கள். அந்த கோபத்தில்தான் அமைச்சர் அவரை ஓரங்கட்டிவிட்டார் என ஃபிளாஷ்பேக் ரகசியத்தையும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். திமுகவில் தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து கட்சித் தலைமைக்கு பலமுறை கடிதம் எழுதியும் அறிவாலயம் ஏனோ கண்டுகொள்ளவில்லை என்ற அதிருப்தியும் அவருக்கு இருக்கிறது.
வரும் தேர்தலில் ஓமலூர் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட தமிழரசு சரியான சாய்ஸ் ஆக இருப்பார். சீட் கிடைக்காதபட்சத்தில் சுயேச்சையாக களமிறங்கினாலோ அல்லது தனது செல்வாக்கின் மூலமாகவோ திமுகவுக்கு 15 ஆயிரம் வாக்குகள் வரை சேதாரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இவருடைய தனிப்பட்ட செல்வாக்கு திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது,'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், வரும் தேர்தலில் பல்பாக்கி கிருஷ்ணனும், தமிழரசுவும் நிச்சயமாக 'கேம் சேஞ்சர்'களாக இருப்பார்கள் என்றே வலுவாகப் பேசப்படுகிறது.
Follow Us