இன்னமும் திருந்தாத சாத்தான்குளம் போலீஸ்; சமூக ஆர்வலரை நோயாளியாக்கிய டி.எஸ்.பி?- அம்பலமான கொடூரம்!

DSP Subakumar beaten social activist Madasamy art Sathankulam police station

“ஒரு 10 பேர் பெயரை சொல்லுடா.... வழக்குல சேக்கனும்...” என்று  சமூக ஆர்வலர் ஒருவரை சாத்தான்குளம் டி.எஸ்.பி. சுபக்குமார் டார்ச்சர் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாத்தான்குளம் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்கமுடியாது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். ஆனால், இதையெல்லாம் பார்த்தும்கூட திருந்தாத சாத்தான்குளம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் சைக்கிள் மாடசாமியை செய்யாத குற்றத்தை ஒப்புகொள்ள வேண்டும் என்று கூறி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சுபக்குமார் முன்னிலையில் தனக்கு நேர்ந்த படு பாதக செயலையும், கொடுமைகளையும் குமுறலோடு நம்மிடம் விவரித்தார் சமூக ஆர்வலர் சைக்கிள் மாடசாமி.... "நான் மாடசாமி, சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்தவன். விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன்; இன்னும் திருமணம் ஆகவில்லை. 2006-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 41 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல்துறையிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனது இரு கண்களையும் தானம் செய்ய பதிவு செய்துள்ளேன். எங்கள் பகுதியில் பொதுநல இயக்கங்களுடன் இணைந்து, பிரதிபலனை எதிர்பார்க்காமல், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் என்னால் முடிந்த சமூகப் பணிகளைச் செய்து வருகிறேன்.

2024 ஜனவரியில், நெடுங்குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே தொடங்கப்பட்டது. இதனால், வெடிபொருட்களால் வீடுகளில் விரிசல்கள், விவசாய நிலங்களில் பாதிப்பு, சாலைகளில் சேதம், அதிவேக கனரக வாகனங்களால் விபத்துகள் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்தன. இதை எதிர்த்து, 2024 செப்டம்பர் 25-ஆம் தேதி, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, வாயில் கருப்புத் துணி கட்டி அமைதியாகப் போராட்டம் நடத்தினோம். தாசில்தார், காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கனிமவளத்துறை அதிகாரி பிரியா, குவாரியை தற்காலிகமாக நிறுத்துவதாக உறுதியளித்ததால், போராட்டத்தைக் கைவிட்டோம். அடுத்த நாள் முதல், வட்டாட்சியர் உத்தரவின்படி குவாரி நிறுத்தப்பட்டது.

குவாரிக்கும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கும் இடையேயான இடைவெளி குறித்த விவரங்களை அறிய, சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் அடங்கல் மற்றும் கிராம வரைபடத்திற்கு மனு அளித்தேன். அப்போது, சிலர் என்னை குவாரி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என மிரட்டினர். இதுகுறித்து 2024 மே 15-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தேன். மேலும், குவாரியின் பாதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன்.

2024 அக்டோபர் 4-ஆம் தேதி, கிராம மக்கள் அதிவேகத்தில் சென்ற குவாரி லாரியை மறித்து மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது, நான் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேறு பணிக்காக வந்திருந்தேன். இச்சம்பவம் குறித்து பின்னர் தான் அறிந்தேன். ஆனால், அதே நாளில், சாத்தான்குளம் எஸ்.ஐ. சுரேஷ்குமார் என்னை தொடர்பு கொண்டு, லாரி மறித்ததாக என் மீது புகார் வந்துள்ளதாகவும், மேலிட உத்தரவால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவிருப்பதாகவும் கூறினார். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை, மறியலுடன் தொடர்பு இல்லை எனத் தெளிவுபடுத்தினேன்.

இருப்பினும், 2024 அக்டோபர் 6-ஆம் தேதி, லாரி உரிமையாளர் அருள்ராஜனின் புகாரின் பேரில், நானும், ஆண்ட்ரூஸ் பிரபு, சந்தனராஜ், ஜான்சன், பால் செல்வராஜ், ஷியாம் மற்றும் அடையாளம் காணப்படாத 10 பேர் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது, குவாரி விவகாரத்தில் நான் தலையிட்டதற்கு எதிராக வன்மத்துடன் திட்டமிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், நாங்கள் நிபந்தனை ஜாமீன் பெற்று, தினமும் காலை 9:30 மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தோம். 2024 டிசம்பர் 9-ஆம் தேதி, வழக்கம்போல் கையெழுத்து இடச் சென்றபோது, சாத்தான்குளம் டி.எஸ்.பி. சுபக்குமார், இன்ஸ்பெக்டர் நாககுமாரி, எஸ்.ஐ.க்கள் உள்ளிட்டோர் இருந்தனர். டி.எஸ்.பி. எங்கள் செல்போன்களை பறிக்க உத்தரவிட்டார். பின்னர், எங்கள் மீதான எஃப்.ஐ.ஆரைப் பார்த்து, "உங்கள் ஊரில் 10 பேர் பெயரை உடனே சொல்லு, இல்லைன்னா விடமாட்டேன்" என மிரட்டினார். அப்போது, ‘நான் சம்பவ இடத்தில் இல்லை, திருச்செந்தூரில் இருந்தேன், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என விளக்கினேன். ஆனால், டி.எஸ்.பி. கோபமாக, "குற்றத்தை ஒப்புக்கொள், 10 பேர் பெயரைச் சொல்" என மிரட்டி, நீண்ட நேரம் நிற்க வைத்தார். இதனால், 2020-ல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் சம்பவத்தை நினைத்து பயந்து, மன உளைச்சலால் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன்.

எனது நண்பர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு அழைக்க செல்போன்களைக் கேட்டபோது, டி.எஸ்.பி. கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர், நண்பர்கள் என்னைத் தூக்கிக்கொண்டு, 100 மீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்தபோது, மருத்துவரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாகக் கூறினேன்.

இச்சம்பவம் அறிந்து, எனது உறவினர்களும் கிராம மக்களும் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், காவல்துறையினர் குவாரி வாகனத்தை வைத்து வழிமறித்து, "சென்றால் வழக்கு பதிவு செய்வோம்" என மிரட்டினர். இதுகுறித்து 2024 டிசம்பர் 10-ஆம் தேதி தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றேன். டி.எஸ்.பி.யின் மிரட்டலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, தூக்கமின்றி இப்போது நோயாளியாகிவிட்டேன். டி.எஸ்.பி. சுபக்குமார், குவாரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பொய் வழக்கு பதிவு செய்து பொது அமைதியை சீர்குலைத்துள்ளார். மறியல் சம்பவத்தில் தொடர்பில்லாத என்னை வழக்கில் சேர்த்து, 10 பேர் பெயரைக் கேட்டு துன்புறுத்தியது ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 2024 டிசம்பர் 10-ஆம் தேதி புகார் அளித்தேன், ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி டி.எஸ்.பி. சுபக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக குற்றங்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலகர்களை பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை வழுத்துள்ளது. 

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

DSP police sathankulam social activist
இதையும் படியுங்கள்
Subscribe