'Doctors who exposed the conspiracy' - The Red Fort is in tatters Photograph: (DELHI)
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று செங்கோட்டை. எங்கு பார்த்தாலும் முகலாய பாணி கட்டிடங்கள், மக்கள் நெரிசல் என சுற்றுலாத் தலமாகவும், இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக நேற்று (10/11/2025) நண்பகலில் ஹரியானாவில் மருத்துவக் கல்லூரியில் சூட்கேஸில் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் அதீல் அகமது ராதர் என்ற மருத்துவர், முசாமில் ஷகீல் என்ற மருத்துவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் நேற்று நண்பகலிலேயே தலை நகரில் பரவியிருந்தது.
இந்நிலையில்தான் செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. பல்வேறு கட்ட மீட்புப் பணிகளுக்கு பின் இன்று காலை வரை 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியுள்ளது.
புல்மாவை சேர்ந்த 36 வயதான மருத்துவர் உமர், ஹரியானாவில் உள்ள அல் ஃபலோ மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அதே மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வந்த அதீல் அகமது ராதர் முசாமில் ஷகீல், உமர் ஆகியோர் இந்த சதித்திட்டத்தை திட்டமிட்டு வந்தக்காக கூறப்படுகிறது. தனது திட்டமிடலில் உடன் இருந்தவர்கள் படிப்படியாக கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த உமர், அமோனியம் நைட்ரேட் பியூயல் ஆயிலை தனது காரில் நிரப்பி தற்கொலைப்படை தாக்குதலுக்கு தன்னை உட்படுத்தி இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழைந்த உமர், பிற்பகல் 3:10 மணியளவில் செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் மூன்று மணி நேரமாக ஒரு நொடிகூட கீழே இறங்காமல் காருக்கு உள்ளேயே காத்திருந்து பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு காரை மெதுவாக இயக்கி திட்டமிட்டு சதியை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய உமரின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். உமரின் இரண்டு சகோதரர்களான ஆஷிக் அகமது மற்றும் ஜஹூர் அகமது மற்றும் அவரது தாயார் விசாரணைக்காக தனியாக வைக்கப்பட்டுள்ளனர். தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவரது குடும்ப உறுப்பினர், ''புத்தகங்களுக்காக தனது பெரும்பாலான நேரத்தை அர்ப்பணித்த ஒரு படிப்பறிவுள்ள இளைஞன் எப்படி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முடியும்?
மூத்த சகோதரர் தனியார் வேலை செய்யும் அதே வேளையில், இளைய சகோதரர் ஸ்டெனோகிராபி படித்து வருகிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான் அவருடன் பேசினேன். தேர்வுகள் நடந்து வருவதாகவும், நூலகத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறினார். அவர் புத்தகப் புழு. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் படிக்கும்படி என எங்களை வற்புறுத்துவார். நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். வறுமையிலிருந்து மீள்வதற்கான எங்கள் ஒரே நம்பிக்கை அவர்தான்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதில் பெண் மருத்துவர் ஷாகின் என்பவர் காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் தீவிரவாத அமைப்பான ஜெய்ஸ்- இ முகமது அமைப்பின் பெண் பிரிவு தலைவராக செயல்பட்டு பலரை அணி திரட்டியதும், உமர் உள்ளிட்டவர்களுக்கு உதவியதும் தெரியவந்துள்ளது. தற்போது அவருடைய புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அனைவரும் மருத்துவர்கள். மொத்தம் சுமார் 7 மருத்துவர்களுக்கு இதில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. ராணுவம், போலீசார் என பல்வேறு பாதுகாப்பு வளையங்கள் இருந்தும் ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 3000 கிலோ வெடிமருந்துகளை மூன்றாக பிரித்து சதித்திட்டங்களை நிறைவேற்ற இவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முக்கிய நபராக உள்ள உமரின் குடும்பத்தாரிடமும் விசாரணை நீண்டு வருகிறது. தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் விரைவில் இது தீவிரவாத தாக்குதலா? அல்லது விபத்தா? என இந்த சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us