சேலம் அருகே, காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி கூலித்தொழிலாளியை, திமுக பிரமுகர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குருக்குப்பட்டியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவர், வாய் பேச இயலாத மற்றும் கேது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  

கடந்த 4ம் தேதி காலை 9 மணியளவில் அவர் தீவட்டிப்பட்டியில் நடக்கும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். வீடு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்தார். அப்போது அவருக்குப் பின்னால், 'டிஎன்30 ஏஒய் 5' என்ற பதிவெண் கொண்ட, திமுக கொடி கட்டிய, ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ கார் டீசல் போட வந்து நின்றது.  

எல்லப்பன் பெட்ரோல் போட்டுவிட்டு, பம்ப் மேனிடம் சில்லரை பெற்றுக்கொண்டு கிளம்புவதற்குள் பின்னால் காரில் வந்த 5 பேர் கும்பல் அவரை விரைவாக வண்டியை நகர்த்துமாறு சத்தம் போட்டனர். செவித்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்பதால் அதை அவர் கவனிக்கவில்லை. இதையடுத்து எல்லப்பன் அங்கிருந்து தனது வண்டியை சிறிது முன்பக்கம் நகர்த்திச்சென்று நிறுத்தினார். அப்போது காரில் வந்த கும்பல், அவருடைய வண்டி மீது மோதுவது போல் சீறிப்பாய்ந்து வந்து நிறுத்தினர். 

Advertisment

இதில் அவர் சைகையால் ஏதோ சொல்லப்போக ஆத்திரம் அடைந்த காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக கைகளால் தாக்கினர். பெட்ரோல் பங்க் ஊழியரோ, 'பாவம்ணா... அவரை விடுங்கண்ணா...' என்று சமாதானம் செய்தார். பின்னர் அந்த கும்பல் டீசல் போட்டுக்கொண்டு அங்கிருந்து 'விருட்'டென்று கிளம்பிச் சென்று விட்டது.  இந்த தாக்குதலில் எல்லப்பனுக்கு கழுத்து, தலை, முகத்தில் பலத்த உள் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். பதற்றம் அடைந்த மனைவியும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  

மருத்துவப் பரிசோதனையில், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படியும் கூறியுள்ளனர். இதற்கிடையே லாரி ஓட்டுநராக உள்ள எல்லப்பனின் தம்பி அபிமன்னன் சரக்கு லாரியுடன் வட மாநிலங்களுக்குச் சென்றிருந்த நிலையில், செப்டம்பர் 8ம் தேதி வீடு திரும்பினார்.  

தனது அண்ணன் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்த அபிமன்னன், சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க்கில்  உள்ள சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தார். இதில், தாரமங்கலம் பெரியாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செந்தில், பழனிசாமி, அம்மாசி, கணேசன் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து தனது அண்ணனை தாக்கி இருப்பது தெரிய வந்தது.  

இந்த சம்பவம் குறித்து எல்லப்பனின் தாயார் பூஞ்சோலை அளித்த புகாரின்பேரில் தாரமங்கலம் காவல்நிலையத்தினர், செப்டம்பர் 5ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில், ஐந்து பேர் எல்லப்பனை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனரே தவிர, யார் யார் தாக்கினர் என்று பெயர்களைக் குறிப்பிடவில்லை. தாக்கிய நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 189 (2) (5 மற்றும் 5க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக கூடுதல்) மற்றும் 115 (2) (காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

i2

இந்நிலையில், எப்ஐஆர் பதிவு செய்து நான்கு நாள்கள் ஆகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதைக் கண்டித்து செப்டம்பர் 8ம் தேதி,  எல்லப்பனின் தம்பி அபிமன்னன் குடும்பத்தினருடன் கையில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி வந்து தாரமங்கலம் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். குழந்தைகளுடன் தேசியக்கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தாரமங்கலம் காவல்நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அபிமன்னன் இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயலிடம் நேரில் புகார் அளித்தார். அவரோ, 'சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என பட்டும்படாமலும் பேசி அவரை அனுப்பி வைத்துள்ளார்.  இதுகுறித்து லாரி ஓட்டுநர் அபிமன்னன் கூறுகையில், ''என் அண்ணன் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத ஒரு மாற்றுத்திறனாளி.அவரை திமுக பிரமுகர்களான கண்ணன், செந்தில், பழனிசாமி, அம்மாசி, கணேசன் ஆகிய ஐந்து பேரும் பெட்ரோல் பங்க்கில் வைத்து தாக்கி உள்ளனர். அவர்கள் உள்ளூரில் கந்து வட்டித் தொழிலும் செய்து வருகின்றனர்.  

சம்பவத்தன்று திமுக கொடி கட்டிய காரில் டீசல் போட பெட்ரோல் பங்க்கிற்கு வந்த அவர்கள், முன்னால் நிறுத்தி இருந்த என்னுடைய அண்ணனின் வண்டியை நகர்த்தச் சொன்னார்கள். அதற்கு சற்று கால தாமதம் ஆனதால் ஆத்திரத்தில் அவர்கள், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கிய நபர்கள் யார் என அடையாளம் தெரிந்த பின்னரும் காவல்துறையினர் கைது செய்யாமல் அலட்சியமாகவும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவும் செயல்படுகின்றனர்,'' என்றார்.  

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 92, 'மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது 6 மாதம் மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படும்,' என்று வரையறுக்கிறது. ஆனால் காவல்துறையினர் எல்லப்பனை தாக்கியவர்கள் மீது பிணையில் விடக்கூடிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த சம்பவம், தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, காவல்துறையினரின் நடவடிக்கைகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.