Advertisment

“டி.கே சிவக்குமாரை நாங்கள் முதல்வராக்குவோம்” - பாஜகவின் அறிவிப்பால் டென்ஷான காங்கிரஸ்!

4

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக கூட்டணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் கடும் போட்டி நிலவியது.

Advertisment

இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் தலா 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா மாநில முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

Advertisment

கடந்த 20 ஆம் தேதியோடு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக மோதல் தொடங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியது. டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்களது தலைவர்களுக்காகப் போர் கொடி தூக்க ஆரம்பித்தனர். அப்போது இரு தலைவர்களும், “கட்சி மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று தாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டிக்கொண்டனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளது. 27 ஆம் தேதி அவர் வெளியிட்ட பதிவில், “சொல்தான் உலகில் சக்தி வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும். வார்த்தைதான் உலகின் பெரிய சக்தி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சி மேலிடத்திற்கு நினைவுபடுத்தும் வகையில் டி.கே. சிவகுமார் இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பதிவைத் தொடர்ந்து கர்நாடக அரசியலில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. பெங்களூரு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் கார்கேவை சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டி.கே. சிவகுமாரும் கார்கேவைச் சந்தித்து, விமான நிலையம் வரை இருவரும் ஒரே காரில் பயணித்துள்ளனர். இப்படி முதல்வர் பதவியில் நீடிக்க சித்தராமையாவும், முதல்வர் நாற்காலியில் அமர டி.கே. சிவகுமாரும் போட்டி போட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அதே சமயம் பிரச்சினையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பாஜக குதிரைப் பேரத்தையும் ஆரம்பித்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்க்கியோளி, “50 எம்.எல்.ஏக்களுடன் டி.கே. சிவகுமார் வந்தால் அவரை நாங்கள் முதல்வராக்கிக் காட்டுவோம்” என்று பகிரங்கமாகவே பேசியுள்ளார். அதனால், காங்கிரஸ் மேலிடம் தனது மௌன விரதத்தை கலைத்துவிட்டு ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இரு தலைவர்களுக்கும் நல்ல முடிவு வரும் என்றும் தலைமையிலிருந்து தகவல் பறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரத நாட்டின் ஒரு பரந்துபட்ட கட்சியாகத் திகழ்ந்த காங்கிரஸ், தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் கூட உட்கட்சிப் பூசல் நிலவுவது ஒட்டுமொத்தத் தொண்டர்களையும் ஏமாற்றமும் அயர்ச்சியும் அடையச் செய்கிறது என்று கதர் வேட்டிகளே புலம்பத் தொடங்கியுள்ளனர்.

congress dk shivakumar Rahul gandhi Siddaramaiah
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe