புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் சித்துப்பட்டியில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தகச்சோழர் ஆட்சிக் காலத்தில் வரகுண இருக்கு வேள் என்ற கொடும்பாளூர் ஆட்சியாளர் தேவதானம் மற்றும் ஊரணி அமைத்துக்கொடுத்த அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆவிவுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது, சிவத்துப்பட்டி ஊரணி கரையில் சூலக்கல் கல்வெட்டு இருப்பது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் முருகப்பிரசாத் , நாராயணமூர்த்தி , குமாரவேல் ஆகியோர் அளித்த 2017 ஆம் ஆண்டு அளித்த தகவலை தொடர்ந்து அவ்விடத்தில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு. ராஜேந்திரன் மற்றும் ஆர்வலர்களுடன் தொடர் ஆய்வு செய்து வருகிறோம்,
கல்வெட்டு சிதைவின் காரணமாக முழுமையாக வாசிக்க இயலாத நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் உதவியுடன் மீண்டும் படியெடுத்து வாசிக்கப்பட்டது அப்போது எங்களின் வாசிப்பை உறுதிசெய்தோம்
சூலக்கல் கல்வெட்டு:
எட்டே கால் அடி உயரம், மூன்றேகால் அடி அகலத்துடன் கல்வெட்டின் பின் பகுதியில் கல்வெட்டும், மறுபுறம் மிகப்பெரிய சூலக்கோட்டுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சூலம் தேவதான நிலத்தின் அடையாளமாகும் , இது சோழர் கால கலைப்பணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் நூற்றாண்டின் சைவ மரபை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பெரிய சூலக்கல் கல்வெட்டுகளில் இது முக்கியமானதாகும் .
கல்வெட்டு தகவல்:
கோப்பரகேசரி எனத் தொடங்கும் கல்வெட்டு அதன் தொடர்ச்சியாகச் சிதைவடைந்துள்ளது, அதன் தொடர்ச்சியாக சிற்றூர் வேள்காடை ஈஸ்வரத்து மகாதேவருக்கு தேவதானமாக செய்து கொடுத்தேன், வரகுண இருக்குவேள் இசைந்து சிற்றூர் ஊரணி வெட்டி கொடுத்தேன், வரகுண இருக்குவேள் இசைந்தனன் அருஞ்சிகையேன் அண்ணல் வாயில் கூற்றத்து கீழ் கோனாட்டோன் ஊரரையர் பணித்த பரிசினால் ஊர் நடந்து எங்கள் சிகைநட்டு கொடுத்தேன்.” என கல்வெட்டு வாக்கியம் தகவல் பகிர்கிறது.
அதாவது, கொடும்பாளூர் வேளிர் “வரகுண இருக்குவேள்” என்ற ஆட்சியாளர், “கோப்பரகேசரி” என்ற பட்டத்தை கொண்ட பராந்தகச்சோழர் ஆட்சியில், வேள்காடை ஈஸ்வரத்து மகாதேவருக்கு தேவதானமாக நிலம் வழங்கியதும், சிற்றூர் ஊரணியை வெட்டி அமைத்ததும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும் “அண்ணல் வாயில் கூற்றத்தில் கீழ் கோனாடு” எனும் கூற்று, அந்தக் காலத்தில் அண்ணல் வாயில் குற்றத்தில் , கீழ் கோனாடு என்ற மண்டல நிர்வாக பிரிவு இருந்ததற்கும், ஊரார் இதில் பங்காற்றியிருந்ததற்கும் ஆதாரமாக உள்ளது. இது சோழர் ஆட்சியின் மத அடிப்படையிலான நில தானங்கள், மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாக அமைப்புகளுக்கும் கோயில்களின் பொருளாதார பங்களிப்புக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.
இது புதுக்கோட்டை மாவட்ட சைவ மரபு மற்றும் சோழர் கால மத நிர்வாக அமைப்பைக் காட்டும் முக்கியச் சான்றாகும் என்றார். மேலும் இவ்விடத்தில் இரட்டபாடி கொண்ட சோழர் எனும் ராசேந்திரசோழரின் குமுதப்பட்டை துண்டு கல்வெட்டு, நாகராஜன், துர்க்கை, சப்த கன்னியர், சண்டிகேசர் போன்ற பல்வேறு கட்டுமான உறுப்புகள் மற்றும் சிற்பங்களும் காணப்படுகிறது என குறிப்பிட்டார்.