புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூரில் வசிக்கும் கரும்புறத்தார் சமுதாயத்தினர் வசம் ஒரு செப்பேடு இருப்பதாக வந்த தகவலையடுத்து, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் சென்று அச்செப்பேடு ஆய்வு செய்தனர். பின் அவர்கள் தெரிவித்ததாவது,
இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ள இச்செப்பேடு முதல் பக்கம் 43 வரிகளும் இரண்டாம் பக்கம் 7 வரிகளும் என மொத்தம் 50 வரிகள் காணப்படுகின்றன. இச்செப்பேடு குறிப்பிடப்படும் சாலிவாகன ஆண்டு தவறாக உள்ளதால், இதன் தமிழ் ஆண்டையும், இச்செப்பேடு எழுத்தமைதியையும் வைத்து இதன் காலம் கி.பி. 1690-ஆக இருக்கலாம், அதாவது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதமுடிகிறது.
செய சோழ கம்பீர வள நாடாகிய சோனாடு பிறமலை சூழ்ந்த பொன்னமராவதிக்கு வடக்கில் உள்ள கொன்னையூரைச் சேர்ந்த கொப்பனாபட்டி காணியில் வன்னியர் சூரக்குடியில் இருந்து வந்த 60 தலைக்கட்டு கரும்புறத்தார் பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோவில் பூசைக்குப் போகும்போது பிசாசு அபயம் என்று கீச்சு மூச்சு என்று சத்தம் கேட்ட பூசாரி அதை ஊரவரிடம் சொல்லி, வன்னியர் சூரக்குடியில் இருந்து வந்த கரும்புறத்தார் 60 தலை பலி கொடுத்த செய்தியைக் கூறுகிறது.மேலும், கொன்னையூர் கண்மாயில் வடக்கு மடையில் தண்ணீர் பிரியாமல் இருந்ததால் கோடங்கி பார்த்ததில் கரும்புறத்தார் பிசகு என்றும், எழுபது மொட்டையர் பிசகு என்றதால் அம்மன் திருவுளம் கேட்டதில் கரும்புறத்தார் பங்குனி மாதத்தில் அம்மனுக்கு காப்பு கட்டி செடில் குத்தி பொங்கல் பூஜை வைத்து, ஆட்டுக்குட்டி கொடுத்தால் பிசகு தீர்ந்து போகும் என்று கொன்னையூர் கண்மாயில் வடக்கு மடைக்கு பொங்கல் வைத்து, அம்மன் கோவிலில் கரும்புறத்தாருக்கு பரிவட்டமும், காளாஞ்சியும் கொடுத்த செய்தியையும்,
கருத்தான் ஊருணி என்று சந்தைப்பேட்டை ஊருணியை வெட்டி, அதன் மேல்கரையில் பிள்ளையார் கோவில் கட்டிக் கொடுத்தோம் என்றும், மானியம் கொடுத்து, கொப்பனாபட்டியில் குடியிருக்க இடம் காண்பித்து, கோவில் ஊழியம் செய்யும்படி ஆறு காத வட்டகை மூவேந்தர் வேளார் வழங்கிய தீர்ப்பு என்று இச்செப்பேடு கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆறு காத வட்டகை மூவேந்தர் வேளார் என்பதற்கு ஆறு காத தூரம் உள்ள நிலப்பரப்பை ஆண்ட நிலத்தரசான கார்காத்த மூவேந்தர் வேளார் வானாதராயர் என்பதாகும். அதாவது வன்னியர் சூரக்குடியில் இருந்து வந்த கரும்புறத்தார் சமுதாயத்தினருக்கு கொப்பனாபட்டியில் குடியிருக்க இடம் வழங்கி, சந்தைப்பேட்டை மேல்கரையில் பிள்ளையார் கோவில் கட்டிக்கொடுத்து, கோவில் ஊழியம் செய்யக் கூறிய செய்தியையும், கொன்னையூர் முத்துமாரி அம்மன் கோவிலில் பரிவட்டம் கட்டி காளாஞ்சி கொடுத்த செய்தியையும் கூறுகிறது. அழகிய பெரியவள் ஒலியநாயகி துணை என்று இச்செப்பேடு முடிகிறது என்றனர்.