‘Dhozhi’ – an accommodation out of reach for ordinary women? Photograph: (room)
தமிழ்நாடு அரசு, பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் மூலம் ‘தோழி’ மகளிர் விடுதி (Thozhi Hostel) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வேலைக்காகவும் கல்விக்காகவும் நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் சமூக நலத்துறை ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, “வீடு போன்ற பாதுகாப்பான சூழல்” உருவாக்கி பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் துணை நிற்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. பயோமெட்ரிக் நுழைவாயில், 24 மணி நேர பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு, வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பெண்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியை உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே பாராட்டியுள்ளார்.
சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் சேருவதற்கு, மாதம் ரூ.25,000 (சென்னை) மற்றும் ரூ.15,000 (பிற மாவட்டங்கள்) வருமான வரம்புக்குள் உள்ள பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். குறைந்த மாத வாடகையுடன், பகிர்ந்து தங்கும் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், நடைமுறையில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளதாக அங்கு தங்கி வரும் பெண் ஒருவர் வேதனையுடன் தெரிவிக்கிறார். “ரூ.8,800 - இவ்வளவு கட்டணம் செலுத்தியும் சாப்பாடு இல்லாமல் யார் தங்க முடியும்?” எனக் கேட்கும் அவர் “நான் தற்போது சென்னையின் ஆலந்தூரில் உள்ள ‘தோழி’ விடுதியில் தங்கியிருக்கிறேன். இங்கு தங்க வருபவர்களிடம் மாதச் சம்பள விவரம் குறித்து யாரும் கேட்பதில்லை. குறைந்தபட்சமாக ஒருவர் தங்குவதற்கே ரூ.8,800 செலுத்த வேண்டும். அதுவும் உணவு வசதி இல்லாமல். இங்கு தங்குபவர்கள் பெரும்பாலும் மத்திய அரசு அலுவலர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், நல்ல பொருளாதார பின்னணி கொண்டவர்கள். கிராமங்களில் இருந்து முதல்முறையாக வேலைக்காக வரும் பெண்கள் இங்கு எப்படி தங்க முடியும்?
நான் ‘ஏன் இவ்வளவு கட்டணம்?’ என்று கேட்டபோது, ‘இங்கு வசதிகள் உள்ளன; அதற்கேற்ற கட்டணம்தான்,’ என்று கூறினர். வசதிகள் இருப்பது சரி. ஆனால் திட்டத்தின் நோக்கம் என்ன? அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் ரூ.9,000 செலுத்தியும் உணவு இல்லாமல் யார் தங்க முடியும்? இங்கு தனி ஏசி அறை ரூ.12,500. சாதாரண தனி அறை ரூ.10,000. இருவர் பகிர்ந்து தங்கும் சாதாரண அறை ரூ.8,800. இருவர் பகிர்ந்து தங்கும் ஏசி அறை ரூ.10,620. இவை தங்குமிடத்திற்கான கட்டணங்கள் மட்டும். உணவிற்கு தனியாக செலவழிக்க வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தது ரூ.130 முதல் ரூ.150 வரை செலவாகிறது. மாதத்திற்கு ரூ.4,500 வரை கூடுதல் செலவாகும். அதனால் மொத்த செலவு ரூ.13,500 முதல் ரூ.15,000 வரை ஆகிறது. ரூ.20,000 சம்பளம் பெறும் ஒருவர் இதை எவ்வாறு சமாளிப்பார்?
வெளியிலுள்ள விடுதிகளில் ரூ.8,000க்கு உணவுடன் தங்கும் வசதி கிடைக்கிறது. ஆனால் இங்கு உணவு இல்லாமல் ரூ.9,000 வசூலிக்கப்படுகிறது. திட்டத்தின் நோக்கம் நன்றாக இருக்கலாம். ஆனால் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இது சிரமமாக உள்ளது. ரூ.5,000 அளவில் குறைந்த கட்டணத்தில், உணவு உட்பட வசதி இருந்தால் வெளியூரிலிருந்து வரும் பல பெண்கள் பயன்பெறலாம். மூன்று மாதத்திற்குக் குறைவாக தங்குபவர்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அனைவரிடமும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதற்கான தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. கேட்டாலும் சரியான பதில் தருவதில்லை,” என்றார் ஆற்றாமையுடன்.
நல்ல திட்டம் - அனைவரையும் சென்றடைய வேண்டாமா?
பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘தோழி’ திட்டம், அதன் ஆரம்ப நோக்கத்திலிருந்து விலகுகிறதா என்ற கேள்வி எழுகிறது. வசதிகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், கட்டண அமைப்பு குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு சுமையாக மாறினால், திட்டத்தின் சமூக நீதி நோக்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் அமல்படுத்தப்பட வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு கட்டண சலுகை அல்லது மானியம் வழங்கப்பட வேண்டும்.
உணவு வசதியுடன் கூடிய மலிவு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மாவட்ட வாரியாக உள்ள கட்டண வேறுபாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒரு நல்ல சமூக நலத் திட்டம் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களும் பாதுகாப்பான தங்குமிடத்தைப் பெறுவது அரசுத் திட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.
‘வீடு போன்ற சூழல்’ என்ற கனவு சிலருக்கே மட்டும் அல்ல - அனைத்துப் பெண்களுக்கும் நனவாக வேண்டும். இதனை அரசு தீவிரமாக பரிசீலித்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயனாளிகள் முன்வைக்கும் நேர்மையான கோரிக்கையாகும்.
Follow Us