மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான 66 வயதான அஜித் பவார் இன்று காலை ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவார், புனே மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான பாரமதியில்(Baramati) நடைபெறவிருந்த ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மும்பையிலிருந்து சிறிய ரக தனியார் சார்ட்டர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
விமானம் காலை 8:45 மணியளவில் பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையிலிருந்து விலகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் மொத்தம் 6 பேர் இருந்த நிலையில் அஜித் பவார், அவரது இரண்டு பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்டோர் என அனைவரும் உயிரிழந்துள்ளதாக DGCA உறுதிப்படுத்தியுள்ளது. பாரமதி மருத்துவமனையில் உள்ள அவரது நெருங்கிய உதவியாளர் கிரண் குஜார் கூறுகையில், “அஜித் பவார் உள்பட 6 பேரும் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர்” என்றார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த DGCA உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா? வானிலை பிரச்சனை காரணமாக நடந்ததா? அல்லது பைலட்டின் தவறான வழிநடத்தலால் நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அஜித்பவார் உயிரிழந்திருப்பது மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநில அரசியலின் மிக முக்கியமான, சர்ச்சைக்குரிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் தான் அஜித் பவார். பள்ளிப்படிப்பை முடித்து பட்டப் படிப்பு படித்து வந்த அஜித் பவார், தந்தை மறைந்த பிறகு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
அதன்பிறகு 1982-ல் கூட்டுறவு சர்க்கரை ஆலை வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலிலும் அறிமுகமானார். கூட்டுறவுத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த அஜித் பவார் சித்தப்பா சரத் பவாரின் வழிகாட்டுதலுடன் 1991-இல் புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த 1991 நாடாளுமன்றத் தேர்தலில் பாரமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் தனது சித்தப்பா சரத் பவார் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு வசதியாக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சரத் பவார் மத்திய அமைச்சரானார்.
அதைத் தொடர்ந்து, சரத் பவார் ராஜினாமா செய்த பாரமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அமைந்த கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். இப்படி தொடர்ந்து தனது சித்தப்பாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த அவர், திடீரென தனது ஆதரவாளர்களுடன் 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் சேர்ந்து துணை முதல்வரானார். ஆனால் பதவியேற்று 80 மணி நேரத்தில் திடீரென விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார்.
இந்தச் சூழலில்தான் 2023 ஆம் ஆண்டு திடீரென கட்சிக்குள் மீண்டும் குழப்பம், கோஷ்டி மோதல் வெடித்தது. அதன்காரணமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, பாஜக - ஷிண்டே ஷிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரினார். நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் கட்சி அஜித் பவாருக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கட்சியை கைப்பற்றிய அஜித் பவார் கடந்த 2024 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்று மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறு வகித்து வந்தார். தனது சொந்த தொகுதியான பாரமதி 2004, 2009, 2014, 2019, 2024 என 5 முறை வெற்றிபெற்று தனக்கேனெ தனி முத்திரையை பதித்துவந்தார். இந்த நிலையில்தான் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது ஒரு புறமிருக்கு கடந்த ஆண்டு குஜராத்தில் நடந்த விமான விபத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். அதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும், 2011 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த தோர்ஜி கண்டுவும் விமான விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அதேபோன்று நாட்டின் முக்கிய பதவியில் இருந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி முதல்வர்கள், துணை முதல்வர் என நாட்டின் அதீத முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் விமான விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
Follow Us