எந்த நேரத்தில் சாத்தான்குளம் என்று பெயர் வைக்கப்பட்டதோ, அங்கு நடந்த அடுத்தடுத்த விபரீதமான வில்லங்கக் கொடூரங்கள் தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தி வருகின்றன.

கடந்த 2020 ஜூலை 6 அன்று, சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்கள், விசாரணை என்ற பெயரில் அவர்களை கடுமையாகத் தாக்கினர். ஒன்பது காவலர்கள் சுற்றி நின்று, தந்தை-மகனை லத்தி மற்றும் கம்பால் அடித்து, அவர்களை ரத்தக் காயங்களுடன் வதைத்துள்ளனர். இதன் விளைவாக, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உயிர் பறிக்கப்பட்டது. இந்தக் காவலர்களின் வெறித்தனமான சித்திரவதைக்கு அடிப்படைக் காரணமே, அதற்கு முந்தைய(2020 ஆம் ஆண்டு ஜூன்) மாதம், அதே காவலர்களால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளி மகேந்திரன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி கடந்து சென்றதே எனக் கூறப்படுகிறது.

100

இந்த ஒன்பது காவலர்களும் மக்கள் மத்தியில் பதில் சொல்லவில்லை என்றாலும், நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காவலர் உடையில் இவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு மன்னிப்புக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.

Advertisment

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாத்தான்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பேய்க்குளத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, பேய்க்குளத்தைச் சேர்ந்த துரை என்பவரை விசாரிக்க, சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் ‘ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் ஆறு பேர், நள்ளிரவு 1 மணியளவில் பேய்குளத்தில் உள்ள துரையின் அம்மா வடிவு வீட்டிற்குச் சென்றனர். அப்போது துரை அங்கு இல்லாததால், வடிவு அம்மாவின் தங்கை பாப்பான்குளத்தை சேர்ந்த சந்திரா என்பவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி மகேந்திரனை முதுகில் பூட்ஸ் காலால் மிதித்து அடித்து இழுத்து சென்றதோடு, ‘ஏன் இப்படி செய்றீங்க..’ என்று கேட்ட சந்திராவையும் போலீசார் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். மேலும், துரையின் மாமனார் வீடான நாங்குநேரிக்குச் சென்று இரவில் கதவை உடைத்து தங்க வேல் என்பவரையும் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு  இழுத்துச் சென்றனர். .

95

காவல் நிலையத்தில், ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான காவலர்கள், மகேந்திரன் மற்றும் தங்கவேலைக் கடுமையாகத் தாக்கினர். இதில், லாக்கப்பில் வைக்கப்பட்ட மகேந்திரனை கடுமையாகச் சித்திரவதை செய்த காவலர்கள், அவரது உடல் முழுவதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்தினர். உச்சி முதல் உள்ளங்கால் வரை கடுமையான காயங்களால் கதறிய மகேந்திரன், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர், வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிய காவலர்கள், அவரை விடுவித்தனர். காவலர்களின் தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மகேந்திரன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஆதரவற்ற நிலையில் இருந்த மகேந்திரனின் வயதான தாய் வடிவம்மாள், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisment

93

இந்நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கைப் பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போதைய சி.பி.சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கு கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது பல துணைக் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு, தற்போது மதுரை சி.பி.சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளர் அருணாச்சலம் தலைமையில், கோவில்பட்டி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கு ஜூலை 20 ஆம் தேதி அன்று, கோவில்பட்டி நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட மகேந்திரனின் தாய் வடிவம்மாள் சார்பில் ஆஜரான தூத்துக்குடி வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், குற்றப்பத்திரிகையைப் பார்த்துள்ளார். அதில், முன்னாள் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மட்டுமே குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, ‘ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ உள்ளிட்ட மற்ற காவலர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து பரிசீலனை செய்த நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஆனந்த், இதன் மீது ஒரு உத்தரவு பிரப்பித்திருக்கிறார்.

101

அந்த உத்தரவில், மகேந்திரனின் இறப்பு குறித்து, போதுமான விபரங்களை புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி குறிப்பிடவேயில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும், அதனை முறையாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மகேந்திரனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து உரிய முறையில் புல விசாரணை செய்யாமல் பெயர் தெரியாத எதிரிகளை நீக்கிய சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த இறுதி அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு, வேறொரு சி.பி.சி.ஐ.டி.டி.எஸ்.பி.யை நியமித்து, மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த முறைகேடான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஆராய்ந்து கண்டித்தது, பொதுவெளியில் பேசுபொருளாகியது. இது சி.பி.சி.ஐ.டி. பிரிவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காவல் துறையின் புலன் விசாரணை என்பது மேம்போக்கானது அல்ல; அதில் உண்மை மற்றும் நம்பகத் தன்மையும் இருக்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் தான், பேய்க்குளத்தில், மழையையும் புயலையும் தாங்க முடியாத ஒட்டுச் சுவர் குடிசையில் வாழ்ந்து வரும் மகேந்திரனின் தாய் வடிவம்மாளை நாம் சந்தித்தோம். கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப நடந்தவற்றை நம்மிடம் விவரித்தார். 

94

“காலையில் பதட்டத்துடன் போனில் பேசிய எனது தங்கை  சந்திரா என்னிடம், "சம்பவம் நடந்த அன்னைக்கு நள்ளிரவு ஒரு மணி இருக்குமாம். போலீஸ் டிரஸ் ல இல்லாம சாதா டிரஸ் ம், டீ சர்ட்  ம்  போட்டிருந்த  ஆறு பேர் கதவை உடைச்சு உள்ள வந்து யாரையோ தேடிருக்காங்க. என்ன நினைச்சாங்களோ தெரியல, வேலை அலுப்புல படுத்திருந்த என்  மகன் மகேந்திரனை காலால் மிதிச்சு, அடிச்சு இழுத்துட்டு என் தங்கச்சி யோட செல்போனையும் எடுத்துட்டு போயிருக்காங்க. பதறிப்போய் ‘என்னய்யா இப்படி அடிக்கிறீங்க’ன்னு எங்க அம்மா கேட்டதுக்கு கிழவி உன் பேரன் செத்துட்டான்னு நினைச்சுக்கோன்னு  மகேந்திரனை இழுத்துட்டு போயிருக்காங்க”ன்னு சொன்னாள். 

ஆதரவு இல்லாம நான் பரிதவிச்சு இருந்தப்ப, ரெண்டு நாள் கழிச்சு உடம்பு முழுக்க ரத்தக் காயமாகி, அரை மயக்கத்துல வந்த என் மகனை தூத்துக்குடி மருத்துவமனையில சேர்த்தோம். அவன் முதுகு முழுக்க காவலர்கள் அடிச்சதுல ரத்தம் காய்ஞ்சு, சட்டை ஒட்டிக்கிடந்தது. அந்த அளவுக்கு இரக்கமில்லாம ஒண்ணும் தெரியாத என் பையனை அடிச்சிருக்காங்க. அவனால ‘அம்மா’னு கூட பேச முடியல. ரெண்டு நாள் மயக்கத்துல இருந்தவன் உசுரு போயிடுச்சு. இந்த அளவுக்கு என் பையனை சித்திரவதை பண்ணி கொன்னுட்டாங்க,” என்று தலையில் அடித்தபடி கதறினார்.

103

ஆதரவற்ற நிலையில் உள்ள வடிவம்மாள், வயிற்றுப் பிழைப்பிற்காக பீடி சுற்றி வாழ்பவர். சம்பவம் நடந்த நாளில், மகேந்திரனை காவலர்கள் இழுத்துச் செல்லும்போது, அவரது ஒட்டுக் குடிசையின் முன் சுவரையும் இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றதை, வேதனையுடன் வடிவம்மாள் நம்மிடம் சுட்டிக்காட்டினார்.

97

இந்த வழக்கில் வடிவம்மாளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் ஜெயச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது, “மகேந்திரனின் அண்ணனைத் தேடிச் சென்றபோது, அவர் இல்லாததால் அவரது தம்பியான மகேந்திரனை இழுத்துச் சென்றுள்ளனர். காவலர்கள் இழுத்துச் சென்ற மகேந்திரன் மீது எவ்வித புகாரும் இல்லை. அப்போது அங்கு காவலர்கள் மற்றும் ‘ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என ஆறு பேர் வந்திருந்தனர். மகேந்திரனை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றவர்கள், அங்கு ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர்கள் மகேந்திரனை நிர்வாணமாக்கி கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் அடித்ததில் மகேந்திரன் மயங்கியதால், அதிர்ச்சியடைந்த காவலர்கள், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது அவரை விடுவித்துள்ளனர். இறந்தபோதும், அவரது உடலைப் புதைக்கவிடாமல் போலீசார் தடைகளை ஏற்படுத்தி, அனைத்து ஆதாரங்களையும் அழித்துள்ளனர்.

92

மகேந்திரனின் தாயார் அப்பாவி மற்றும் ஆதரவற்றவர். முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சி.பி.சி.ஐ.டி.யின் பல விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு, தற்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பெயர் குறிப்பிடப்படாத நான்கு எதிரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த நீக்கத்திற்கான காரணமும் முகாந்தரமும் தெளிவாகக் கூறப்படவில்லை. அவர்களுக்கு சாதகமாகவே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். அதனை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். வேறு நேர்மையான அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவிசாரணை நடைமுறையில் இதுபோன்ற முறைகேடுகள் இதற்கு முன் நடந்ததில்லை. இனி நேர்மையான விசாரணை நடத்தப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட ஏழைத் தாய் வடிவம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் கொலைச் சம்பவத்திற்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தில், அப்போதே மாவட்டக் காவல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்” என வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆணித்தரமாகத் தெரிவித்தார். 

காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத் தருணம் இது.