தனது 101 வது வயதில் இதயத்துடிப்பை நிறுத்தி கொண்டார் தோழர் நல்லகண்ணு. இந்திய சுதந்திர போராட்டம் முதல் சுதந்திர இந்தியாவில் நடந்த பல்வேறு தொழிலாளர்கள் போராட்டம் வரை கால் கடுக்க நடந்து களம் கண்ட நூறு வயதை கடந்த துடிப்பான இளைஞன் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். டிசம்பர் 26, 1925ல் திருவைகுண்டத்தில் (திருநெல்வேலி) பிறந்த நல்லகண்ணு பள்ளிப்பருவத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவான ஒரு நாடக ஒத்திகை அவர் பள்ளியில் நடைபெற்ற போது அதை எதிர்த்து அப்போதே போராடியவர். அதற்காக ஆசிரியர்கள் தண்டித்தபோது பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவர்.
காந்தியை விட நேருவின் மீதும், அவரின் எழுத்துக்களின் மீதும் காதல் கொண்ட இவர் காங்கிரஸில் இணைந்தார். நாளுக்கு நாள் நிலச்சுவான்தார்கள் மற்றும் பணம் படைத்தோரின் புகலிடமாக காங்கிரஸ் மாறி வருவதாக நினைத்த நல்லக்கண்ணு அதிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் நெல்லை மாவட்ட விவசாய சங்கச் செயலாளராக இருந்தபோது நில உரிமை போராட்டம் மேற்கொண்டு "உழுபவருக்கே நிலம்" என்ற வார்த்தையை உண்மையாக்கினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/25/379-2026-02-25-14-51-09.jpg)
தூய்மையான அரசியல், மாற்றுச் சித்தாந்தம் கொண்டவர்களும் நேசிக்கும் ஆளுமை, விட்டுக்கொடுக்காத போராட்டக் குணம் என இன்னும் பல சிறப்புகளோடு நடமாடிய நல்ல உள்ளம் 'தோழர் நல்லகண்ணு' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் நல்லகண்ணு தான் முதல்வர் என அனைத்துத் தரப்பினராலும் கூறப்படும் அளவிற்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர். நெல் மூட்டை பதுக்கல், பஞ்சாலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம், சுதந்திரப் போராட்டம் என இடைவிடாத சமூகப்பணி மூலம் இளைஞர்களை அணி திரட்டியவர். அதேபோல் விவசாய சங்கப் பதவி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி என13 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் இருந்தவர்.
ஊருக்கே தெரியும் இவர் நல்லவர் என்றும், அவர் சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சி என்றும்... ஆனாலும் அவரை ஏற்கவில்லை கோவை மக்கள். இத்தனைக்கும் கோவை தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்ற தொகுதி. 1999 நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் நல்லக்கண்ணு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நின்ற போட்டியாளர் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன். அதுவரை தமிழ்நாட்டில் பெரிதாக கால் பதிக்காத பாஜகவின் வேட்பாளரிடம் ஊரறிந்த நல்லவர் 54,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். அத்தோடு அவர் தேர்தலில் போட்டியிடுவதையே நிறுத்திக்கொண்டார்.
தன் இறுதி வாழ்கை வரை பல்வேறு சமயங்களில் தனக்கு கிடைத்த விருதுகளையும், நன்கொடைகளையும் கட்சி வளர்ச்சிக்கும் எளியோருக்கும் கொடுத்த எளிமையின் இன்னொரு வடிவமாகி போனவர் தோழர் நல்லகண்ணு. தூய்மையான அரசியல் கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது 80-ஆவது பிறந்தநாளன்று அவர் செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்த பொழுது மீண்டும் அதைக் கட்சி வளர்ச்சிக்கே கொடுத்தார். அதேபோல் அம்பேத்கர் விருதுடன் தமிழக அரசு கொடுத்த ஒரு லட்சத்தை சரிபாதியாகப் பிரித்து பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர்களுக்கு கொடுத்தவர்.
சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று (25/02/2026) விடைபெற்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/25/378-2026-02-25-14-51-32.jpg)
அரசியலில் அவர் கடைப்பிடித்த நேர்மை, ஜனசக்தியில் செய்தி வெளியிட்ட அவரின் துணிச்சல், கடைசிவரை ஒரு சாதாரண வீட்டில் குடியிருந்த எளிமை, மனைவி உடல்நிலை மோசமான போதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனவலிமை, திருநெல்வேலி ஜாதி கலவரத்தில் தனது மாமனார் கொல்லப்பட்டபோதும், நிதானம் தவறாமல் தக்க முடிவு எடுத்தது மட்டுமின்றி சுற்றுப்பயணத்தையும் சிறப்பாக முடித்த அவரின் பொறுமை, கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம் கம்பெடுத்து கொண்டு சென்ற அவரின் வீரம், பணத்தை துட்சமாக நினைத்த அவரின் மனம், இதுமட்டுமில்லாமல் தானே தன் துணிகளைத் துவைப்பது, நேரம் இருந்தால் உடன் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து தருவது போன்ற அனைத்துமே அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் தான்.
செல்வத்தையும், ஆடம்பரத்தையும் கொஞ்சமும் விரும்பாத 'நாட்டின் செல்வம்' மறைந்த தோழர்நல்லகண்ணு...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/25/377-2026-02-25-14-50-38.jpg)