மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.
இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்களுக்கு இடையே தனித்து விளங்கியவர் நடிகர் ஸ்ரீனிவாசன். காமெடி என்றாலே இவரது முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிய நடிப்பில் வெளிப்படுத்தியவர். மோகன்லால், மம்முட்டி போன்ற மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் மறைந்த ஸ்ரீனிவாசன்.
நடிப்பைத் தாண்டி, திரைக்கதை, இயக்கம் ஆகிய தனித் துறைகளிலும் அவர் காட்டிய திறமை மலையாள சினிமாவின் முக்கியமான அத்தியாயமாகும். 'தலையணை மந்திரம்', 'சந்தேசம்', 'மிதுனம்' போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
'வடக்குநோக்கியந்திரம்' படத்திற்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருதும், 'சிந்தாவிஷ்டயாய ஷியாமலா' படத்திற்கு தேசிய விருதுடன் மாநில அரசின் விருதும் கிடைத்தது அவரது படைப்புத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
தமிழிலும் 'லேசா லேசா', 'புள்ளக்குட்டிக்காரன்' போன்ற படங்களில் நடித்துப் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்ரீநிவாசன். அதிலும் லேசா லேசா' படத்தில் ஸ்ரீநிவாசன் நடித்திருந்தது தமிழக ரசிகர்களிடம் கவனம் பெற்ற கதாபாத்திரம் ஆகும். இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான இந்த படம், காதலும் உணர்வுகளும் நிறைந்த ஒரு மென்மையான கதையுடன் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ஸ்ரீநிவாசன், கதையின் ஓட்டத்தை மெதுவாக நகர்த்தும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.அவர் நடித்த கேரக்டர் பெரிய ஹீரோயிசம் கொண்டதாக இல்லாவிட்டாலும், மனிதநேயமும் அனுபவமும் நிறைந்த ஒரு குணச்சித்திரமாக அமைந்திருந்தது..
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/20/la-2025-12-20-11-03-39.jpg)
இயல்பான நடிப்பு, முகபாவனை, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் ஸ்ரீநிவாசன்.. இத்தனைக்கும் ஸ்ரீநிவாசன் நடித்த காட்சி எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கதைக்கு ஒரு நம்பகத்தன்மையை சேர்த்தது.
குறிப்பாக, ஹீரோ ஷ்யாமின் மனநிலையை புரிந்து கொண்டு அறிவுரையளிக்கும் வகையிலான அவரது நடிப்பு, படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் வகையில் இருந்தது. இந்த படம் மூலம், மொழி எல்லைகளை தாண்டி, தமிழ் சினிமாவிலும் ஸ்ரீநிவாசன் ஒரு திறமையான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீனிவாசனுக்கு உடல்நல ரீதியாக கடினமான காலமாக அமைந்தது என்று சொல்லலாம்.. 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். ஒருமுறை கொச்சி எடப்பள்ளியில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு 'டிரிபிள் வெஸல் டிசீஸ்' இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பைபாஸ் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 மகன்களின் தந்தையான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினித் ஸ்ரீனிவாசன், நடிகர், பாடகர், இயக்குநர் என மலையாள திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ளார்.இளைய மகன் தயானும் சினிமா உலகில் பயணித்து வருகிறார். குடும்பமும் ரசிகர்களும் உடல் நலம் சீராகி திரும்பி வருவார் என்று காத்திருக்கும் நிலையில், மலையாள சினிமாவின் நகைச்சுவை கலைஞனின் மரணம் கேரள ரசிகர்களின் மனதை ஆழந்த சோகத்தில் ஆழ்த்தி விட்டது. ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் தங்களது உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
Follow Us