செல்போன் திருட்டு, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சஞ்சார் சாத்தி செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும்போது இந்த செயலியைத் தானாகவே நிறுவும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisment

இந்த உத்தரவு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களைப் பாதுகாக்கவே இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தாலும், செல்போன் பயனர்களை உளவு பார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பல செல்போன் நிறுவனங்களும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளன.

Advertisment

இப்படி மத்திய அரசின் உத்தரவு பேசுப்பொருளாக மாறியது ஏன்? சஞ்சார் சாத்தி செயலி என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்று சற்று விரிவாகப் பார்ப்போம்....

சஞ்சார் சாத்தி என்பது மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் முயற்சியால் தொடங்கப்பட்ட செயலி ஆகும். இது தொலைத்தொடர்புத் துறையில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும், மொபைல் போன் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்த செயலி மூலம் ஒருவரது மொபைல் போன் திருடப்பட்டாலோ காணாமல் போனாலோ எளிதில் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்த முடியாமல் (block) தடுக்க உதவுகிறது. அதோடு, அந்த மொபைல் போன்கள் மூலம் நடைபெறும் மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் நிகழும் நிதி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளைக் கட்டுப்படுத்தவும் இந்த செயலி உதவும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஒருவரது பெயரில் உள்ள போலி சிம் கார்டுகள், தேவையற்ற சிம் கார்டுகளை முடக்கவும் இந்த செயலியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. 

Advertisment

மேலோட்டமாகப் பார்த்தால் நன்மை என்று தோன்றினாலும், அதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் மிகவும் ஆபத்தானவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சஞ்சார் சாத்தி செயலி மூலம் நாம் என்ன பார்க்கிறோம், எதைப் பார்க்கிறோம், எதை எழுதுகிறோம் என்று அனைத்தையும் மத்திய அரசு கண்காணித்துக் கொண்டே இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கையில் சஞ்சார் சாத்தி செயலி மூலம் ஒட்டுமொத்த நாட்டையே மத்தியில் ஆளும் கட்சி கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும். இது ஒரு புறம் இருக்க, ஹக்கர்கள் செயலியை ஹேக் செய்து அனைவரது தனிப்பட்ட தகவல்களையும் எடுத்துவிடும் அபாயமும் உள்ளது. என்னதான் செயலி பாதுகாப்பானது என்று கூறினாலும், கடந்த காலங்களில் ஆதார் போன்ற அரசு ஆவணங்களில் தகவல்கள் இணையத்தில் கசிந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போன்ற நிலைமை பின்னாளில் சஞ்சார் சாத்தி செயலிக்கும் வரலாம். ஆகையால் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவை நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், விருப்ப செயலியாக வேண்டுமானால் சஞ்சார் சாத்தியைப் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் கட்டாயம் என்று திணிக்க முடியாது என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அதேபோன்று சாம்சங் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

தொடர் எதிர்ப்புக்கு பிறகு தற்போது மத்திய அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், “உங்களுக்கு இந்த செயலி வேண்டாம் என்றால் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லை. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியை அறிமுகப்படுத்த வேண்டியது எங்களின் கடமை. ஆனால் இதை அவரவர் செல்போன்களில் வைத்துக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.