தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட கீழப்புனல்வாசல், ராமகிருஷ்ணபுரம், வாடிக்காடு ஆகிய 3 விவசாய கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் பேர்கள் வரை வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் வெளியூர் செல்ல பேருந்து பயணம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள துறவிக்காடு அல்லது ஒட்டங்காடு வரை நடந்தோ, சைக்கிள்களிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ செல்ல வேண்டும். கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கடைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் இரவு நேரங்களில் ரொம்பவே தடுமாறித் தான் வீடு வந்து சேர வேண்டும். பெண்களை பஸ் ஏற்றிவிட திரும்ப அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வந்து காத்துக் கிடக்கும் நிலை. சுமார் 200 மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு 2 கி மீ தூரம் தினமும் நடந்து தான் செல்ல வேண்டும். சிலர் சைக்கிளில் செல்கின்றனர். 

Advertisment

பஸ் வசதி இல்லாத இந்த ஊர்கள்ல எங்க பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சா அவசரத்துக்கு எங்க பொண்ணும் எங்க வீட்டுக்கு வர முடியாது நாங்களும் பொண்ணைப் பார்க்க வர முடியாது என்று பெண் கொடுப்போர்களும் பல நேரங்களில் மறுத்துள்ளனர். இந்த கிராமங்களுக்கும் தார் சாலை இருக்கே ஏன் பஸ் வராதா என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. சுமார் 10 வருசம் முன்னால எங்க ஊருக்குள்ள பஸ் வரனும்னு ஊர் பெரியவங்க அதிகாரிகளைப் பார்த்து கோரிக்கை வச்சாங்க அப்ப பேராவூரணி - பட்டுக்கோட்டை போற ஏ-6 என்ற டவுன் பஸ்சை எங்க ஊருப்பக்கம் திருப்பி விட்டாங்க. 2, 3 நாள் அந்த பஸ் வந்தது. ஆனால் அந்த பஸ் வந்து போற அளவுக்கு ரோடும் அகலமில்லை, 4 குறுகிய பாலங்களும் பஸ்ல இடிச்சது அதனால 3 நாள்லயே பஸ் வருவதை நிறுத்திட்டாங்க.

thanjai-bri-1

அதுகக்கு அப்பறம் இப்ப வரை இப்படித்தான் சிரமப்பட்டுகிட்டு இருக்கோம். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்றாங்க ஆனா எங்க ஊர் பெண்கள் அரசாங்கத்தின் அந்த சலுகையை அனுபவச்சதில்லை. அதே போல மாணவர்களும் இலவசப் பயணம் செய்ய வழியில்லை. இந்த இப்படியான நிலையில தான் ஒரு வருசம் முனனால உள்ளூர் இளைஞர்கள் ஒன்று கூடி மறுபடி நம்ம ஊருக்குள்ள பஸ் வர நடவடிக்கை எடுக்கனும்னு ஒவ்வொரு அரசு அதிகாரியா போய் பார்த்தாங்க. எல்லாரும் சொன்ன  ஒரே பதில் உங்க ஊருக்குள்ள உள்ள பாலங்கள் ரொம்ப சின்னதா இருக்கு பஸ் வந்து போக முடியல. ரோடும் ரொம்ப சின்னதா இருக்கு அதனை சரி பண்ணுங்க அப்பறம் பஸ் விடுறதைப் பத்தி யோசிப்போம்னு சொல்லிட்டாங்க. இந்த வேலைகளை செய்ய  அரசு அதிகாரிகளைப் பார்க்கப் போனப்ப இந்த வேலைகளை செய்ய காலம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Advertisment

இந்த பதில்களை கேட்ட இளைஞர்கள் பாலங்களை நம்ம ஊருக்காரங்களே விரிவாக்கம் செய்வோம். அதே போல சாலைகளையும் சரி செய்வோம் இதுக்காக நாம வேற யார்கிட்டயும் போக வேண்டாம். ஊர்ல உள்ளவங்க உங்களால முடிந்த பொருள், பணம் உதவிகள் செய்தால் சீக்கிரமே வேலையை முடிச்சுடலாம் என்று முடிவெடுத்தனர். இதனைக் கேட்ட மொத்த கிராமத்தினரும் ஆர்வமாகினர். வெளிநாடுகளில் வேலை செய்யும் இளைஞர்களும் முன் வந்தனர். 4 பாலங்களை விரிவாக்கம் செய்ய கல், மண், சிமெண்ட், கம்பி வந்து சேர்ந்தது. உள்ளூர் இளைஞர்களே களப்பணியும் கட்டுமானப் பணியும் செய்தனர். மற்றொரு பக்கம் கிராமத்தினர் ஒட்டங்காடு முதல் வாடிக்காடு 4 ரோடு வரை சுமார் 6 கி.மீ சாலை ஓரங்களை சில நாட்களில் செடி கொடிகளை வெட்டி அகற்றினர். பொக்கலின் சாலை ஓரங்களில் மண் அள்ளிப் போட்டு சாலை விரிவாக்கம் செய்தது. சில வாரங்களில் பாலம், சாலை பணிகள் முடிந்தது. இதற்காக கிராமத்தினர் ரூ.7 லட்சம் வரை பணமும், உடல் உழைப்பையும் கொடுத்தனர். பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் சாலை ஓரங்களில் இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கான பணத்தை செலுத்தியுள்ளது. 

thanjai-bri-2

கிராமத்தினரின் ஆர்வத்தைப் பார்த்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகளை விரைந்து செய்வதாக நடவடிக்கை எடுத்துள்ளனர். பணிகள் முடிந்ததை அதிகாரிகளுக்கு சொல்லிவிட்டு எங்க ஊருக்கு பஸ்  எப்ப வரும் என்று பல வருட கனவுகளோடு காத்திருக்கின்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியரும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் சில நாட்களிலேயே 3 கிராம மக்களின் கனவு பஸ் கிராமங்களுக்குள் பயணிக்கும். கட்டணமில்லா மகளிர் பேருந்தில் அந்த கிராம மக்கள் ஆசையோடு பயணிப்பார்கள். புத்தகப் பைகளோடு நடந்த சின்னஞ்சிறு கால்கள் பேருந்தில் பயணிக்கும்.