தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

Advertisment

அதன்படி மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக வழங்கி இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்துள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே எஸ்.எஸ்.ஆர் பணியில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாகவும், சர்வர் மெதுவாக இயங்குவதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் பணிச்சுமை காரணமாக மேற்கு வங்கம் மாநிலம் கிருஷ்ணநகர் சோப்ரா பாங்கால்ஜி பகுதியைச் சேர்ந்த 53 வயதான பிஎல்ஓ ரிங்கு டரஃப்தார்(Rinku Tarafdar) கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், “என்னால் பிஎல்ஓ பணியைச் செய்ய முடியவில்லை; ஆனால் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிப்பதில்லை. நான் மிகவும் சாதாரண மனிதர். என்னால் அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. இத்தோடு என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இது ஒரு புறம் இருக்க, பணிச்சுமை காரணமாக பிஎல்ஓ அதிகாரிகள் தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர் சுக்தேப் தாஸ் என்பவர் 23-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது குறித்து பேசிய அவர், “வேலை அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சில சமயங்களில் தலைச்சுற்றலும் கூட ஏற்பட்டது. வாக்காளர்களிடமிருந்து கணக்கெடுப்புப் படிவங்களைச் சேகரிப்பது நீண்ட நேரம் எடுக்கும். அதன் பிறகு நாங்கள் தரவை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். யாராவது ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய முடியுமா?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

4

அதேபோல் சோனார்பூரில் உள்ள வாக்குச்சாவடியின் பிஎல்ஓ தனுஸ்ரீ ஹல்தார் நய்யா, ஜாய்நகரில் உள்ள வாக்குச்சாவடியின் பிஎல்ஓ கமல் நாஸ்கர், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரைச் சேர்ந்த பிஎல்ஓ முஸ்தபா கமல் ஆகியோ அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மருத்துவமனையில் இருந்தபடியே தங்களது பிஎல்ஓ பணியைத் தொடர்ந்து செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் அச்சம் காரணமாக, பொதுமக்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது பணி சுமையின் காரணமாக பி.எல்.ஓ தற்கொலை செய்து கொள்வதும், மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருப்பதும் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதில் உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கிறது.