மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிக்கு பாஜகவினர் சேலை கட்டிவிட்டு சம்பவம் அரசியல் களத்தில் தகிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவின் டோம்பிவலியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரகாஷ் பகரே. இவர், கடந்த செப்டம்பர் 22 அன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பெண்களே, மன்னிக்கவும், நானும் ட்ரெண்டில் இருக்க விரும்புகிறேன்,” என்ற தலைப்புடன் ஒரு வீடியோ மீம்ஸை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற சேலையில் மார்ஃபிங் செய்யப்பட்டு, பிரபல மராத்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா பாஜக தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. “ஒரு நாட்டின் பிரதமரை இப்படி அவதூறாக சித்தரிக்கலாமா?” என்று குற்றம்சாட்டிய பாஜகவினர், பிரகாஷ் பகரே மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினர். ஆனால், கல்யாண் மாவட்ட பாஜகவினர் இதற்கு ஒரு படி மேலே சென்று, பிரகாஷ் பகரேவுக்கு தக்க பாடம் புகட்டத் திட்டமிட்டனர்.
அதன்படி, பகாரே வழக்கமாக டோம்பிவலி பகுதியில் இருப்பதை அறிந்த மாவட்ட பாஜக தலைவர் நந்து பரப், செப்டம்பர் 23 அன்று மண்டல் தலைவர் கரன் ஜாதவ், சந்தீப் மாலி மற்றும் தத்தா மலேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுட அங்கு சென்றிருக்கிறார். அப்போது, வெள்ளை குர்தா, பைஜாமா மற்றும் கறுப்பு காலணிகளுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்த பிரகாஷ் பகரேவைச் சூழ்ந்த பாஜகவினர், உள்ளூர் துணிக்கடையில் வாங்கிய ரூ.5,000 மதிப்புள்ள புத்தம் புதிய சேலையை வலுக்கட்டாயமாக அணிவித்தனர்.
இது குறித்து பேசிய மாவட்ட பாஜக தலைவர் நந்து பரப், “பிரதமரின் இத்தகைய மோசமான புகைப்படத்தைப் பதிவிடுவது புண்படுத்துவது மட்டுமல்ல, ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட. மீண்டும் இதுபோன்று எங்கள் தலைவர்களை அவமதிக்க முயற்சித்தால், பாஜகவின் பதிலடி இன்னும் கடுமையாக இருக்கும்,” என்று எச்சரித்தார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால், பாஜகவினருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல், “72 வயது பட்டியலின காங்கிரஸ் நிர்வாகியை பாஜக குண்டர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளனர். மருத்துவரிடம் சென்ற மூத்த குடிமகனை அழைத்து, சாதி அடிப்படையில் திட்டி, மிரட்டியுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்,” என்று கடுமையாகச் சாடினார்.
இது குறித்து பிரகாஷ் பகரே கூறுகையில், “அந்த வீடியோ ஏற்கனவே பேஸ்புக்கில் வைரலாக இருந்தது, நான் அதை மறுபதிவு மட்டுமே செய்தேன். மருத்துவமனையில் இருந்து என்னை வெளியே இழுத்து, பொது இடத்தில் சேலை அணிய வைத்து அவமானப்படுத்தினர். இந்தக் குண்டர்களை சட்டப்படி எதிர்கொள்வேன்,” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பு இதை சாதி வன்முறை மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் முயற்சி எனக் குற்றம்சாட்ட, பாஜக தரப்பு இதை பிரதமரின் மரியாதையைப் பாதுகாக்கும் செயல் என நியாயப்படுத்துகிறது. இதற்கிடையே, டோம்பிவலி காவல்நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.