‘ஆக. 30 – செப்.2 நாளிட்ட நக்கீரனில் பாரில் நடிகை போதை அலப்பறை’ என்ற தலைப்பில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் மிதுன் உள்ளிட்டவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் பானர்ஜி சாலையிலுள்ள வெலாசிட்டி பப்பில் மதுபோதையில் ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான அலியார்ஷா சலீம் என்பவரை தாக்கியதோடு, காரில் புறப்பட்ட அலியார்ஷா மற்றும் அவரது நண்பரை வழிமறித்து தாக்கி கடத்தியதோடு, அராஜகத்தில் ஈடுபட்டதை விரிவாக வெளிப்படுத்தியிருந்தோம். இந்த சம்பவம் நடந்ததை அடுத்து நடிகர் மிதுன், சோனமோல், அனீஸ் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அதையடுத்து எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தை நாடிய லட்சுமி மேனன் அந்தக் குழுவினர் தான் தன்னை அவமதித்தனர் என முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றமும் நடிகை லட்சுமி மேனனை ஓணத்திற்கு பின்பான செப். 17 வரை கைது செய்ய தடை விதித்ததோடு அதன் பின் விசாரிக்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்தது. இந்த முன்ஜாமீன் மூலம் லட்சுமி மேனன் இடைக்கால ரிலாக்ஸில் இருக்கிறார். சாதாரண அடிதடி வழக்கிற்கே முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடுகிற போது அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாக வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேசோ மோதல், ஆள் கடத்தல் தாக்குதல் என கிரேவ் கிரிமினல் அபென்ஸ். அப்படியிருக்க லட்சுமி மேனனின் முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது காவல்துறை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்காததால் லட்சுமி மேனனுக்கு தடங்கலின்றி முன்ஜாமீன் உத்தரவாகியிருக்கிறது என்பது கேரளாவின் பொது வெளியில் பேசு பொருளாகியிருக்கிறது.
இதுகுறித்து நாம் எர்ணாகுளம் டவுண் வடக்கு காவல் நிலையத்தின் காவலர்கள் தரப்பு மற்றும் குற்ற நடவடிக்கைத் துறை பிரிவைச் சார்ந்தவர்கள் என்று பேசிய போது, பாரில் நடந்த சம்பவம் குறித்து அலியார்ஷா சலீம் காவல் நிலையத்தில் புகார் செய்த அடிப்படையில் எதிர் தரப்பையும் நாங்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விட்டோம். காவல் நிலையத்தில் வைத்தே அலியார்ஷா தரப்பு லட்சுமி மேனன் தரப்பைத் தாக்கினர். அலியார்ஷாவுக்கு ரவுடி பின்புலம் உண்டு. தண்ணி அடிச்சா மூர்க்கனாகி விடுவார். இந்த வழக்கு இந்த லெவலுக்குப் போனதற்கு காரணமே அவனது சேட்டைதான். எதிர் தரப்பிலும் புகார் கொடுத்தனர். இரண்டு தரப்பினர் கொடுத்த புகாரிலும் பொய் இருப்பதைத் தெரிந்து கொண்டோம். அதனால் இந்த விவரங்களை குற்றத் துறையின் மேலிடத்திற்கு தெரிவித்தோம்.
இரண்டு பக்கமும் சொல்வதை இப்போதைக்கு நம்ப முடியாது. தீர விசாரித்துதான் முடிவுக்கு வரணும். இதுல நாங்க அவசரப் படல. அதனால தான் நாங்க கோர்ட்ல ஒன்னும் சொல்லல. முன்ஜாமீனும் கிடைத்தது. அவங்க குற்றவாளி என்று ஏதாவது சொன்னால் பின்னால அவங்க நிரபராதி என்று வந்தால் அது போலீசுக்கு கேவலமாகிறும். சினிமா விவகாரம். இரண்டு தரப்பையும் நம்ப முடியாது. இதுல யாராவது தப்பு செஞ்சிருந்தா கண்டிப்பா உள்ள போட்றுவோம். கொலை எதுவும் நடக்கல. அதனால அவசரப்படாம தீர விசாரிங்கன்னு மேலிடம் சொன்னது. இப்போதைக்கு வேண்டாம். ஆழமா விசாரிங்க. யார் மேல தப்பிருக்குதுன்னு தெரிஞ்சா நடவடிக்கைக்குப் போகலாம். இப்போ தேர்தல் நேரம். அவசர நடவடிக்கைல திசைமாறி ஆளும் கட்சிக்கு எதிராகிவிடக் கூடாது என்று ஆளும் தரப்பு மேலிடமிருந்து காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். ஆதாரமில்லாமல் அரெஸ்ட் பண்ணி கோர்ட்ல பிரச்சிணையாச்சின்னா கேஸ் போலீசுக்கு எதிராகத் திரும்பிரும்.
அதனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். காசுக்காகவே வேறெதுக்காகவோ நடந்த சம்பவமல்ல. அந்த இடத்தில நடந்த ஒரு சம்பவம் தான் இது. அதனால இந்த கேஸ்ல அவசரப்பட்டுப் போய் கேஸ் தப்பாச்சுன்னா பெரிய பிரச்சினையாகிரும். தேர்தல் வருது. அதனால பார்த்துப் போகணும். தப்பு நடந்திருக்குன்னு தெரிஞ்சா கைது நடவடிக்கை. தப்பில்லாம நாமளே ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்று டைரக்டர் ஜெனரல் ஆஃப் ப்ராசிக்யூஷன் தரப்பிலிருந்து ஸ்ட்ராங் இன்ஸ்ட்ரக்ஷன் வந்ததால்தான் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் லட்சுமி மேனனின் முன்ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் தான் பின்வாங்க நேர்ந்தது. மேலும் இந்த வழக்கு குறித்து எங்களின் விசாரணை பல டைரக்ஷன்களில் போய்ட்டிருக்கு என்றனர். குற்றப்பிரிவின் ஆழமான விசாரணை இந்த சம்பவத்தின் எதிர்பாராத பின்னணி மர்மங்களை வெளிப்படுத்தும் என்கிறார்கள்.