சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து உலக மரபுவார விழாவை மூன்று நிகழ்வுகளாக ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடின.
பொதுவாக நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபுவாரமாகக் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் பழமையான கல்வெட்டு ஒன்று சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு தொண்டி சாலையில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் 246 ஆண்டுகள் பழமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டெடுத்தனர். இக்கல்வெட்டு ஒரு கல்லறைக் கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள செய்தி:
‘1759 ஜூன் முதல் நாள் பிறந்து, 1779 ஜூலை 25 ஆம் நாள் இறந்து போன 20 ஆண்டுகள் ஒரு மாதம் 25 நாள் மட்டுமே இப்பூமியில் வாழ்ந்த திருமணமாகாத எலிசபெத் ஹெல்மர் எனும் இளம் பெண்ணிற்காக இக்கல்லறைக் கல்வெட்டு’ என ஆங்கில எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 1779ஆம் ஆண்டு செதுக்கப்பட்டுள்ளது (இன்றிலிருந்து 246 ஆண்டுகளுக்கு முன்) என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கைப் பகுதியை சசிவர்ணருக்குப் பிறகு, சிவகங்கையின் இரண்டாவது மன்னரான முத்துவடுகநாதர் ஆண்டு வந்தார். அவர் ஆற்காடு நவாபிற்காக ஆங்கிலேயப் படையால் 1772இல் கொல்லப்பட்டார். அதன் பிறகு 1772 முதல் 1780 வரை 8 ஆண்டுகள் ஆற்காடு நவாபால் சிவகங்கை ‘ஹுசைன் நகர்’ என்னும் பெயரில் ஆளப்பட்டு வந்தது.
சிவகங்கையில் நவாபின் நேரடி பிரதிநிதியாக ஆற்காடு நவாபின் மூத்த மகன் உம்தத் உல் உம்ரா செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் (1779இல்) இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது சிவகங்கையை மீண்டும் வேலு நாச்சியார் மருது சகோதரர்கள் துணையுடன் கைப்பற்றுவதற்கு முன்னதான காலமாகும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/23/5-2025-11-23-11-03-45.jpg)
ஆற்காடு நவாப் காலத்தில் சிவகங்கையை ஆற்காட்டு நவாபின் சிப்பாய்களும், ஆங்கிலேயப் படை வீரர்களும் காவல் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. அவ்வாறான காலத்தின் சான்றாக இக்கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் முதன்மை கருதி சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பழமையான இக்கல்வெட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் செல்வி ஊத்தீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.
அடுத்த நிகழ்வாக தொன்மையைப் பாதுகாக்கவும், தொன்மை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிவகங்கை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்ட மாணவர்களில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 3000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2000 ரூபாய், மூன்றாம் பரிசாக 1000 ரூபாய், நான்காம் பரிசாக 500 ரூபாய் வழங்கப்பட்டன.
கருத்தரங்கு;
அடுத்த நிகழ்வாக ‘தொன்மையின் பெருமை’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார். வரலாற்றுத் துறை ஆசிரியர் பர்வத ரோகிணி வரவேற்றார். காப்பாட்சியர் செல்வி ஊத்தீஸ்வரி முன்னிலை வகித்தார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா நோக்க உரையாற்றினார். மேனாள் காப்பாட்சியர் பக்கிரி சாமி, சிவகங்கை வழக்கறிஞர் ராம் பிரபாகர், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் ரமேஷ் கண்ணா, ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொன்மையின் பெருமையை எடுத்துச் சொல்லி, தொன்மையைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்வின் இறுதியில் தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் நன்றியுரைத்தார். இணைச் செயலர் முத்துக்குமரன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் வித்யாகணபதி, மேனாள் கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார், மேனாள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன், மேனாள் தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ஓவியரும் மூத்த தமிழறிஞருமான முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் துறை மாணவி இலக்கியவடிவு, எழுத்தாளர் மகாபிரபு, நல்லாசிரியர் முத்துக்காமாட்சி, பாண்டி, ஹரி, ஆய்வாளர் காளீஸ்வரன், பேராசிரியர் சோனை முத்து, வழக்கறிஞர் சத்யன், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், வேலு நாச்சியார் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/23/4-2025-11-23-11-03-21.jpg)