அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கலில் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்வராஜூக்கு செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் ஓபிஎஸ் நடத்தியதைப் போன்ற மற்றும் ஒரு தர்மயுத்தத்தை அதிமுகவில் செங்கோட்டையன் தொடங்கி இருப்பதாக பேச்சு உருவெடுத்து வருகிறது. அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து தங்களை ராஜினாமா செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/06/a5116-2025-09-06-18-42-25.jpg)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அறிவார்ந்த செயல் ஆகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி நலனுக்கு இது உகந்ததல்ல. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை எண்ணத்தை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்கள் தான் நம் எண்ணமாக பிரதிபலித்திருக்கிறோம். திமுகவை வலுவிழக்க செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். 'சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ' என்ற எம்.ஜி.ஆர் பாடலை சுட்டிக்காட்டியுள்ள சசிகலா 'ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்' என தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/06/a5115-2025-09-06-18-40-58.jpg)
அதேபோல் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுகவின் அடிப்படை தொண்டர்களின் குரலாக இருக்கிறது. கழகத்தில் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், தலைமை நிலையச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என இத்தனை பொறுப்புகளையும் வகித்த செங்கோட்டையன் பத்து நாள் அவகாசம் கொடுத்திருக்கிறார். ஏன் கொடுத்தார். கருத்து வேற்றுமை இருப்பதை எல்லாம் கடந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக கெடு கொடுத்துள்ளார். இதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். எடப்பாடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 10 நாட்கள் கெடு முடிந்தவுடன் செங்கோட்டையனை சந்திப்பேன்''என்றார்.
இதனால் 10 நாள் கெடுவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.