admk Photograph: (dmk)
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்துகொண்டு பல்வேறு அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
2026-ல் தனித்து அதிமுக ஆட்சி அமைக்குமா? இப்போது வரை அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்?
அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும். எப்படி பாஜக ஆட்சி அமைத்தால் மோடிதான் பிரதம அமைச்சரோ அதே மாதிரி அதிமுக இங்கு ஆட்சி அமைத்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர். பொதுக்குழுவில் கூட எடப்பாடி தெளிவாக சொல்லிட்டாரு 2026 தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். இந்த கூட்டணி வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்றால் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வாக்கு வங்கி இருக்கிறது. நாம் அதை சொல்ல முடியாது. ஜி.கே.வாசன் எங்க கூடதான் இருக்கிறார். புதியநீதி கட்சி ஏ.சி சண்முகம் எங்க கூடதான் இருக்கிறார். பாரிவேந்தர் எங்களோடுதான் இருக்கிறார். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி இருக்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பிப்பதே ஆட்சியை பிடிக்க வேண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தான். அதே மாதிரி பாமக, தேமுதிக இருக்கிறது. பாமக இப்பொழுது கொஞ்சம் பிளவுபட்டு அவர்களுக்குள் பிரச்சனை இருந்தாலும் தேமுதிக ஜனவரி ஒன்பதாம் தேதிதான் நாங்க அறிவிப்போம் என்று சொல்லியுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் இதுவரை எங்களோடு தொடர்ந்து பயணித்தவர்கள் தான். இதுவரைக்கும் உறுதிப்படுத்தவில்லை இறுதிப்படுத்தவில்லையே தவிர அவர்கள் எங்களுடைய கூட்டணியிலிருந்து அவர்கள் இன்னும் விலகவில்லை. ஜனவரி மாதம் நிச்சயமாக அந்த இரண்டு இயக்கங்களும் இரண்டு பிரிவாக இருந்தாலும் கூட அந்த இயக்கம் எங்களுடைய கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சொல்வதை போல் இது ஒரு மெகா கூட்டணியாகதான் இருக்கும்.
திமுகவில் நிறைய கூட்டணி கட்சிகள் இருக்காங்க. எனக்கு தெரிந்து திமுக மட்டும்தான் அந்த கூட்டணியில் பெரிய கட்சி. மற்றக்கட்சிகள் எல்லாம் ஒரு சதவிகிதம் வாக்கு வங்கி கொண்ட சிறிய கட்சிகள். 2011 தேர்தலில் 63 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் வெற்றிபெற்ற இடம் வெறும் ஐந்து இடம். அன்றைய சூழ்நிலையில் பாஜக இங்கு ஒரு வளர்கிற கட்சியாக இருந்தது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் தான் பாஜகவிற்கு பிளஸ் ஆகும். ஆனால் பாஜக சித்தாந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறார்கள். அதை மறுக்க முடியாது.
திமுக ஆட்சியை அப்புறப்படுத் வேண்டும். திமு கூட்டணியில் இருக்கிற கட்சிகளை நாங்கள் வீழ்த்த வேண்டும் என்றால் எங்களுக்கு துணை வேண்டும். ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ராமபிரான் எவ்வளவு தெய்வீக கடவுள் அவதாரம். அப்படிப்பட்டவரே ராவணனை வீழ்த்துவதற்கு, அந்த ராமாயண போரில் வெற்றி பெறுவதற்கு எத்தனை பேர் துணை போனாங்க நினைச்சு பாருங்க. அதாவது நாங்களும் பாஜகவும் சேர்ந்து திமுக என்கிற வாலியை மறைந்திருந்தும் தாக்குவோம், நேரடியாவும் தாக்குவோம். பாஜக ஒரு தேசிய கட்சி. எங்களோடு துணை நிற்கிறார்கள். திமுகவை வீழ்த்தறதுக்கு நாங்களும் அவங்களுடைய துணையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அவர்களும் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என ஒரு தேசிய கட்சி, 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிற பாஜக ஆசைப்படுவதில் தவறே கிடையாது. ஆனால், அது கட்டாயமும் இல்லை.
Follow Us