தவிப்பும் திகிலோடும் எதிர்பார்க்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தி.மு.க.விற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்களே வாக்களித்த சம்பவம் ஏக ட்ரெண்டிங் ஆனதோடு அரசியல் க்ளைமேட்டை புரட்டியும் போட்டிருக்கிறது. நகர மன்றத்தில் தி.மு.க.வின் பலம் 15, அ.தி.மு.க.வின் பலம் 13 என்று கிட்டதட்ட சம நிலையில் இருந்ததே இந்த ஆச்சரியத்துக்கு காரணமாகப் பேசப்படுகிறது
பெயர் வெளியிட விரும்பாத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினர். ‘முன்னாள் தி.மு.க. சேர்மன் உமா மகேஸ்வரியின் பதவி இழப்பே இதற்கு முக்கிய காரணம்’ என்று அரம்பித்தனர். மன்றத்தில் தி.மு.க.வின் பலம் 17, அ.தி.மு.க.வின் பலம் 13 என்ற நிலையில், உமா மகேஸ்வரி பொறுப்பேற்ற நாள் முதல், நகர வார்டுகளின் அடிப்படைப் பிரச்சனைகளையோ, நிவாரணப் பணிகளையோ மேற்கொள்ளாமல் இருந்ததால், பணிகள் முடங்கியதுடன் ஊழல் குற்றச்சாட்டுகளும் பெருகின. இதனால் வெறுப்படைந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இணைந்து, ஜூன் 26 ஆம் தேதி அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதில் 30 கவுன்சிலர்களில் 28 பேர் ஆதரவாக வாக்களிக்க, உமா மகேஸ்வரி தனது சேர்மன் பதவி இழந்தார்.
இதை ஏற்காத உமா மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 7 ஆம் தேதி அன்று நடந்த மறைமுக வாக்கெடுப்பிலும் 28 கவுன்சிலர்கள் ஆதரவாக வாக்களிக்க, அவர் மீண்டும் பதவி இழந்தார். இதனால் பதற்றமடைந்த தி.மு.க. தலைமை சேர்மன் பதவியை மீண்டும் கைப்பற்றியே ஆக வேண்டும்; தவறினால் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று மா.செ. உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
ஏனெனில் சேர்மனுக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 30 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். 28 கவுன்சிலர்களில் தி.மு.க.வின் பலம் 15, அ.தி.மு.க.வின் பலம் 13 என்றாகிவிட்டது. இரு கட்சிகளின் பலமோ அடுத்தடுத்து சம அளவில் இருப்பதால் சேர்மன் தேர்தலில் எந்தக் கட்சியும் பதவியைக் கைப்பற்றலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டது. தி.மு.க.வின் மாஜி சேர்மன் மற்றும் அவரது ஆதரவாளரான கவுன்சிலர் விஜயகுமார் இருவரும் தேர்தலின் போது அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கிற சூழலும் ஏற்படலாம். அல்லது அவர்கள் தேர்தலை ஒரு வேளை புறக்கணிக்கலாம். எது எப்படி இருப்பினும் ஒன்றிரண்டு கவுன்சிலர்களை அ.தி.மு.க தன் வசம் கொண்டு வந்தால் அதன் வசம் பதவி போய்விடும் என்று பதறிய தி.மு.க. தரப்பில், மன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களைக் கையாளுகிற அந்தப் பவர் புள்ளித் தரப்பினரிடம் டர்ம்ஸ் பேசப்பட்டது. எந்தச் சூழலிலும் சேர்மன் பதவிக்கு தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்றும் அதற்குறிய பிரதிபலன்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டதுடன் அவர்களுக்கு வேண்டியதும் செய்துதரப்பட்டிருக்கிறது. மேலும், இந்த உடன்பாடு உறுதியாக இருக்க “தெய்வத்தின் பேரில்” வாக்குறுதியும் வாங்கப்பட்டதாகப் பேசப்படுகிறது.
நிலமை இப்படி இருக்க, தி.மு.க., 6-வது வார்டு கவுன்சிலர் கௌசல்யாவை சேர்மன் வேட்பாளராக நிறுத்தியது. தேர்தல் செலவுகளை அவரது தரப்பு ஏற்றதாக தெரிகிறது. சேர்மன் தேர்தலை எதிர்கொள்ள அன்பளிப்புகளும், கரன்சிகளும் கரை புரண்டன. முதலில் நம்பிக்கையில்லாத் தீ்மானத்திற்கு ஆதரவாகக் கைதூக்கிய 28 கவுன்சிலர்களுக்கும், தலா ‘2 எல்’லுடன் சுமார் ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள 55 இன்ச் LED டி.வி உள்ளிட்ட கிஃப்ட்கள் தரப்பட்டுள்ளன. மேலும், சேர்மன் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்தால் கூடுதலாக 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என உத்தரவாதமும் தரப்பட்டதாம்.
இதற்கிடையே, சேர்மன் தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படாததையும், அதன் பின்னணியையும் அறிந்து அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ கொந்தளிப்பில் இருந்திருக்கிறார். உடனே சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகிகளை கூட்டி, “தேர்தல் என்றால் நம் கட்சியின் பலத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். யாரைக் கேட்டு வேட்பாளரை நிறுத்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்? அதன் பின்னணியில் நடந்த அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரியும். சேர்மன் தேர்தலில் நம் கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். தவறினால், காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார் மா.செ. கிருஷ்ணமுரளி. இதனால், அ.தி.மு.க. தரப்பு பரபரப்பானது.
அ.தி.மு.க. வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டு, வேட்பாளர் முடிவு செய்யப்பட்டார். ஆனால், அவரது விவரங்களை வேட்புமனு தாக்கல் செய்யும் வரை வெளியிடவில்லை. காரணம், வேட்பாளர் கடத்தப்படலாம் என்ற அச்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நாளான ஆகஸ்ட் 18, ஆம் தேதி அன்று, சங்கரன்கோவில் நகராட்சியில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவியது. நகராட்சி ஆணையர் சாம்சன் கிங்ஸ்டனிடம் தி.மு.க. சார்பில் வேட்பாளரான கவுன்சிலர் கௌசல்யா சேர்மன் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன்பின், எதிர்பாராத நிகழ்வாக, அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் உள்ளே வந்த 26-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அண்ணாமலை புஷ்பம் வேட்புமனு தாக்கல் செய்தார். இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அண்ணாமலை புஷ்பம், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியின் ஆதரவாளராம்.
சொல்லிவைத்ததை போன்று தி.மு.க.வின் முன்னாள் சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாலர் 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் தேர்தலைப் புறக்கணித்ததால், மீதமுள்ள 28 கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். வாக்கெடுப்பில், தி.மு.க. வேட்பாளர் கௌசல்யா 22 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகளும் பெற்றனர். இதனால், தி.மு.க.வின் கௌசல்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சேர்மன் பதவியை கைப்பற்றினார்.
மன்றத்தில் தி.மு.க.வின் பலம் 15, அ.தி.மு.க.வின் பலம் 13 என்ற நிலையில், 7 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால், அவர் சேர்மனாக அமோக வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.
சங்கரன்கோவில் அ.தி.மு.க.வினர் எதிர்பாராதவகையில், அவர்களது கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தது அ.தி.மு.க. தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனால், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி, தனது கட்சி கவுன்சிலர்களின் இந்தச் செயலை ஜீரணிக்க முடியாமல், கடும் கோபத்தில் இருக்கிறாராம். மேலும், இத்தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கட்சித் தலைமைக்கு எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளார். காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை பாயும் என்ற பரபரப்பு, கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வின் அமைப்பு மற்றும் தொண்டர்களின் ஒழுக்கம் குறித்து, தொகுதி மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரபரப்பில் உள்ளன. இந்தச் சூழலில், அ.தி.மு.க.வினர் தி.மு.க. பக்கம் சாய்ந்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.