கேரள மாநிலம் ஆலப்புழா தும்போளியைச் சேர்ந்தவர் ஷாரோன். இவர் சேர்த்தலா கே.வி.எம். பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதே சேர்த்தலா பகுதியில் உள்ள பள்ளியில் கொம்மாடி முத்தலச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆவணி என்ற இளம்பெண் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெரியோர்கள் ஷாரோனுக்கும் ஆசிரியை ஆவணிக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர். அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருக்கிறது.
அதன்படி இவர்களது திருமணம் 21-ஆம் தேதி ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு முந்தைய நாள் இரு வீட்டாரும் மெஹந்தி விழாவை கோலாகலமாகக் கொண்டாடியிருக்கின்றனர். இந்நிலையில் திருமணத்தன்று மணமகள் ஆவணி மேக்கப் போடுவதற்காகத் தனது உறவினர்களுடன் காரில் குமரகம் சென்றிருக்கிறார். குமரகம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகள் ஆவணி உள்ளிட்ட காரில் பயணித்த நால்வருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மணமகள் ஆவணிக்கு கை உடைந்து முதுகில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மணமகள் ஆவணியை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஆவணியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே திருமணத்துக்கு வந்தவர்கள் சிலர் மருத்துவமனைக்கும், பலர் திருமண மண்டபத்திலும் குவியத் தொடங்கினர். அதே சமயம் மணமகள் படுக்கையில் இருப்பதால் திருமணம் நின்றுவிட்டதாகவும் பேசத் தொடங்கினர்.
இந்நிலையில் என்ன ஆனாலும் சரி, ஆவணியை ஏற்கெனவே குறித்த நேரத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த மணமகன் ஷாரோன், மருத்துவமனையில் வைத்து டாக்டர்கள் முன்னிலையில் ஆவணியின் கழுத்தில் தாலி கட்டினார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம் திருமணத்தைக் காண்பதற்காக மண்டபத்துக்கு வந்த அனைவருக்கும் தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.
வருங்கால மனைவி விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருக்கும்போது “அவருக்காக நான் இருப்பேன்” என்று கூறி தாலி கட்டிய மணமகன் ஷாரோனின் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மணமகள் ஆவணி விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று அனைவரும் வாழ்த்துகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/4-2025-11-24-16-45-04.jpg)