இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள், வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பாரதி தலைமையில், தொழில் சார் கல்விப் பயிற்சிக்காக திருப்புல்லாணி பகுதியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், அரண்மனை, கோரைக்குட்டம் சமண தீர்த்தங்கரர் சிற்பம், உப்பங்கழி ஆகிய வரலாற்றுச் சின்னங்களை நேரில் பார்வையிட்டனர். திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் வே.இராஜகுரு அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது, “பண்டைக் காலத்தில் துறைமுகத்தின் ஆழமான பகுதியில் கப்பல்களை நிறுத்தி அதிலிருந்து பொருட்களை சிறிய படகுகளில் ஏற்றிக் கரையில் இறக்குவர். இதற்கு ஆறு கடலில் கலக்கும் உப்பங்கழிகளும் அவற்றின் முகத்துவாரங்களும் பெரிதும் உதவியாய் இருந்துள்ளன. திருப்புல்லாணி அருகிலுள்ள கோரைக்குட்டத்தில் கொட்டகுடி ஆறு சேதுக்கரை கடலில் கலக்கிறது. இதன் உப்பங்கழியில் அலையாத்திக் காடுகள் அழகாக வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் சேதுக்கரைப் பகுதியில் ஒரு பழமையான வணிக நகரம், துறைமுகம் இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.
டச்சுக்காரர்களின் ஆதிக்கம் கீழக்கரைப் பகுதியில் அதிகமான காரணத்தால், பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்து, முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அதை அரண்மனையாக கி.பி. 1759 இல் கட்டியுள்ளனர். பின் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் அவர் பயன்படுத்தியுள்ளார். இது நான்கு சதுரமாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 16 அறைகளும், நான்கு குளங்களும் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் மற்றொரு பகுதியுடன் பெரிய மரங்களால் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
கோரைக்குட்டம் கொட்டகுடி ஆற்றின் கரையில் தலை இல்லாத 24ஆம் சமணத் தீர்ந்தங்கரர் மகாவீரரின் கி.பி. 9ஆம் நூற்றாண்டு சிற்பத்தில் அவர் மூன்று சிங்க உருவங்கள் உள்ள பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பாண்டியர் காலம் முதல் இஸ்லாமியருடன் கலாசாரத் தொடர்புடையதாக இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. மாவட்டத்தில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோயில் இதுதான்” என்றார். அதன் பின்னர் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றை மாணவர்கள் பார்த்து அறிந்து கொண்டனர்.