தமிழகம் பெருமை கொள்கிறது. கீழடி அகழாய்வுகள், தமிழர்களின் தொன்மையான காலம், வாழ்ந்த மூத்த பழங்குடிகள் என்பதை வெளிப்படுத்திய அகழாய்வுகளை ஏற்க மறுத்த ஒன்றிய அரசுக்கு அந்த அரிதானவைகளை அருங்காட்சியகப்படுத்தி உறைக்க வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிச. 20 அன்று முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தவரை அங்கு திரண்டு வந்த ஏராளமான தி.மு.க.வினர் உட்பட்ட பொதுமக்கள் அமர்க்களமாக வரவேற்றிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நெல்லை வந்தவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனிதநேய மகத்துவ கிறுஸ்துமஸ் பெருவிழா மற்றும் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி மண்டலம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாளை சாராள் டக்கர் கன்வென்ஷன் சென்டர் நுழைவு வாயில் திறப்பு விழா ஆகிய இரு விழாக்கள் நெல்லை டக்கரம்மாள்புரம் தரிசன பூமியில் நடந்ததில் பங்கேற்று தலைமை வகித்தார் முதல்வர்.

Advertisment

முதல்வரை அங்கு திரண்டு வந்திருந்த மும்மதத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அவரை ஆரவாரத்தோடு வரவேற்றனர். விழாவுக்கு வந்த முதல்வரை கிறுஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகள் வரவேற்க, அதில் உற்சாகமான முதல்வர் தொடர்ந்து சாராள் டக்கர் கன்வென்ஷனல் நுழைவு வாயிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கிறுஸ்தவ அமைப்புகளின் அனைத்து அமைப்பினரும் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த முதல்வரை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் வரவேற்றார். மேடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களைக் கொண்ட பெரிய பேனரின் மத்தியில் முதல்வர் இருக்கும் ப்ளக்ஸ் படம் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisment

மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்த இந்த மேடையில் மலங்கரா கத்தோலிக்க திருச்சபை கார்டினல் கிளிமீஸ் பாசெலோயிஸ், நெல்லை பரசமயகோளரி ஆதீனம் புத்தாத்மானந்தா சரஸ்வதி பரமாச்சாரிய சுவாமிகள் ஐயாவழி குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகள், துதியின் கோட்டை ஊழியங்கள் தலைமை போதகர் ரத்தினம் பால், கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி, இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் தலைவர் மோகன் சி லாசரஸ், சதக்கத்துல்லா கல்லூரி அரபிக் பேராசிரியர் முகமது  இல்யாஸ் உஸ்மானி, தூத்துக்குடி ஜாமியா  மஜீத் முதன்மை இமாம் அப்தூல் அலிம், உள்ளிட்ட மும்மதத் தலைவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமர்ந்திருந்தது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பார்க்கப்பட்டது.

3-regional-mks

நடந்த இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் மேடையில் மும்மதத் தலைவர்களின் முந்நிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய முதல்வர் பின்னர் அனைத்துத் தலைவர்களுக்கும் ஊட்டியது திரண்டிருந்த பெருமக்களிடையே ஆரவாரத்தை கிளப்பி உற்சாகப்படுத்தியது. மதத்தலைவர்களின் உரைக்குப் பின்னர் பேசிய முதல்வர் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில் அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கே நான் வந்திருக்கிறேன். இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒருதாய் வீட்டுப் பிள்ளையாக வாழ வேண்டும். இதுபோன்ற விழாக்கள் அதற்கு துணை நிற்கவேண்டும். மதசார்பின்மை மத நல்லிணக்கத்தை விரும்புவர்கள் உங்களுக்குத் துணையாக எப்போதும் பாதுகாப்பாய் இருப்போம். என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 

Advertisment

தி.மு.க. தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தைக் கொடுத்துள்ளது. இது சிலரது கண்களை உறுத்துகிறது. எப்படி தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கலாம். ஒன்னுக்குள் ஒன்னாக பழகும் மக்களை எதிரிகளாகப் பிரிக்கலாம் என சிலர் யோசிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் சில அமைப்புகள் அழைத்துச் செல்ல நினைக்கும் வழி வன்முறைக்கான பாதை என்பதைத் தமிழகம் உணர்ந்துள்ளது. சகோதரத்தையும் பகுத்தறிவையும் உணர்த்தும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. எல்லோருக்கும் எல்லாம் என்ற இயேசுபிரான் வார்த்தைக்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். கவனமாக இருங்கள் என்றார் முதல்வர் தன் அழுத்தமான உரையில்.

porunai-mks-1

இதையடுத்து நெல்லை திருமண்டலப் பேராயர் பர்னபாஸ் பேசும்போது சிறுபான்மையினரை பாதுகாக்க வந்த உதயசூரியனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் ஆலயங்களைப் பராமரிப்பதற்கும் பல்வேறு திட்டங்களை முதல்வர் அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். பைபிளில் ஒரு வசனம் உள்ளது. உன்னதத்தில் இருந்து வந்த அருணோதயம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அருணோதயம் என்பது ஆங்கிலத்தில் ரைசிங் சன் (உதய சூரியன்) என்று அர்த்தம். எனவே நீங்கள் உதய சூரியனாக இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். உங்களுக்கு எதிராக ஒருவழியாய் வருகிறவர்கள் ஏழு வழியாக ஓடிப்போவார்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்று பைபிளில் கூறப்பட்ட உன்னதமான வேத வசனத்தை விரிவாகப் பேசி ஆசீர்வதித்த திருமண்டல பேராயர் பர்னபாஸ் சிறுபான்மையினர் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் என்று ஆசீர்வாதமாகப் பேசியது முதல்வரை உற்சாகப்படுத்தியது.

நடந்த இந்த மனிதநேய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற கிரீடத்துடன் கூடிய நினைவுப் பரிசை முதல்வர் ஸ்டாலினுக்கு மும்மதத் தலைவர்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆசியாகண்டமே ஆச்சரியத்தோடு பார்க்கும் வகையிலான நெல்லை ரெட்டியார்பட்டியின் ரம்மியமான மலைச்சாலையில் 13 ஏக்கரில் 67.25 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டறியப்பட்ட ஆதித்தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

porunai-mks-2

மலைச்சாலையில் அட்டகாசமான பல கட்டிடங்களாக நேர்த்தியாய் அமைக்கப்பட்டவைகளில் 3 பகுதியில் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தவைகள் கல்தோன்றி மண்தோன்றாத காலத்திற்கு முன்னே தோன்றிய மூத்த மொழி தமிழ் தமிழர்கள். தாமிரபரணி கரையோரம் தோன்றிய அந்தத் தமிழர்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் புழங்கிய பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது 5 ஆயிரத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திலும் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்விலும் உறுதிப்படுத்தப்பட்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் மிக வயதான காலத்தில் புதைக்கப்பட்டவர்களின் உடலோடு நெல் உமியும் சேர்க்கப்பட்டிருந்தது அக்காலம் தொட்டே நெல் விவசாயம் நடந்தது வெளிப்பட்டது.அடுத்து சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு 5300 ஆண்டுகட்கு முன்பு புழக்கத்திலிருந்த பொருள். அந்த இரும்பை உருக்கி ஆயுதங்கள் அன்றைய தமிழர்களின் வாழ்வியலுக்குத் தேவையான பொருட்களும் உருவாக்கப்பட்டதென்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கொற்கை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது தாமிரபரணி கரையோரம் வசித்த தமிழர்களின் பழங்கால வாழ்வியல் கலாச்சாரம் தெரியவந்ததுடன் கொற்கை தமிழர்கள் அத்தனை ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கடல்தாண்டி வணிகம் நடத்தியது, அந்தத் தமிழர்கள் முத்துக்குளிப்பு நடத்தியது உள்ளிட்டவைகளின் ஆதாரங்கள் தடயங்கள் கிடைத்ததும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

porunai-mks-3

இந்த மூன்று பகுதிகளின் அகழாய்வில் கிடத்தவைகள் ஆதிகாலத் தமிழர்களின் பலதரப்பட்ட வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த அகழாய்வில் ஒவ்வொறு பகுதியிலும் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடயப் பொருட்கள் 3 வெவ்வேறு கட்டிங்களில் அருங்காட்சியமாக ரெட்டியார்பட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. நம்மிடம் பேசிய தொல்லியல் ஆர்வலரும் எழுத்தாளருமான காமராஜ், ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்தியவைகள், முதுமக்கள் தாழி, போர்க்கலன்கள் உள்ளிட்ட எண்ணற்ற அரிய பொருட்கள் கிடைத்தன. அவைகளை ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகப்படுத்தி தமிழர்களின் வாழ்க்கை முறையை தற்போதைய தலைமுறைக்கு வெளிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என்று அப்போது கோரிக்கைகள் வலுத்தன. அதுசமயம் மத்திய அரசு ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகத்தை அமைத்து அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தியது ஆனால் அதன் பிறகு அந்தக் காட்சியகம் பராமரிக்கப்படாமலேயே போனது.

அப்போதைய நேரத்தில் 2022 ஆக. 5 ஆதிச்சநல்லூர் வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருங்காட்சியகம் சீரமைக்கப்படும் மேலும் இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றவர் அன்று அதற்கான அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். அதையடுத்து அந்தத் திட்டம் கிடப்பிற்கே போய்விட்டது. இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரையடுத்து சிவகளை, கொற்கையில் அகழாய்வில் கிடத்தவைகள் பேசுபொருளானது. குறிப்பாக சிவகளையில் அகழாய்வில் கிடைத்த இரும்பு 5300 ஆண்டுகட்கு முற்பட்டது. அப்போது வாழ்ந்த தமிழர்களால் இரும்பு உருக்கப்பட்டு பல்வேறு புழக்கப்பொருளானது. அதேசமயம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்குடி தமிழர்களின் வாழ்வாதாரம் இருந்ததன் தடயங்கள் வெளிப்பட்டதன் மூலம் தமிழர்கள் கற்பனைக்கு எட்டாத காலந்தொட்டே வாழ்ந்தவர்கள் என்ற சான்றை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இதையடுத்தே தமிழக முதல்வர் ஆதிச்சநல்லூர் சிவகளை, கொற்கை 3 பகுதிகளின் அகழாய்வில் கிடைத்தவைகளை அருங்காட்சியகப் படுத்துகிற நோக்கில் 2023ல் நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அப்போதைய நிலையில் 35 கோடி என்று திட்டமிட்டு தற்போது 67 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு பொருநை அருங்காட்சியகம் முதல்வரால் திறக்கப்பட்டுள்ளது. 

mks-tuti-road-show

இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரங்கள் வாழ்ந்த தடயங்களை அடுத்த தலைமுறைக்காக காட்சியகப்படுத்தியுள்ளது முதல்வரின் மகத்தான சாதனை என்றுதான் பார்க்கவேண்டும் என்றார். அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வரோ பொருநை ஆற்றங்கரையில் வரலாற்றுத் தடயங்கள். இரும்பை உருக்கி கலன்கள் செய்தது சிவகளை கண்டுபிடிப்பில் மிகவும் தொன்மையானது. கீழடி நமது தாய்மடி. பொருநை தமிழர்களின் பெருமை. அதனை ஜென் சீ (GEN Z)க்கும் கொண்டு செல்கிற நடவடிக்கை இது என்றார் பெருமிதமாக. கடந்து போன ஆட்சியாளர்களால் காட்சிப்படுத்தப்படாத தமிழர்களின் தொன்மையான கலாச்சார வாழ்வியல்களை, புழங்கிய பாண்டங்கள் அடங்கிய தடயங்களை முதல்வர் ஸ்டாலின் அரசு வெளிப்படுத்தியது வரலாற்று சாதனையாகப் பார்க்கப்படுகிறது.