வடகிழக்கு பருவமழை பொலிவு தமிழகத்தில் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Advertisment

கனமழை காரணமாக நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்பகுதிகளில் ஒரு வாரத்தில் மட்டும்  380 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த நவ்.18 ஆம் தேதி முதல் இன்று வரை அந்த பகுதியில் உள்ள ஊத்து பகுதியில் 106 சென்டி மீட்டர் மழையும், நாலுமுக்கு என்ற பகுதியில் 100 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. காக்காச்சி பகுதியில் 91.5 சென்டி மீட்டரும், மாஞ்சோலை பகுதியில் 82.5 சென்டி மீட்டர் மழையும் என ஒரே வாரத்தில் 380 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பருவமழையின் தீவிரம் வரும் நாட்களான நவ். 28,29,30 ஆகிய நாட்களில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

098
'A lion has set out...' - Coming 'December' Photograph: (CHENNAI)

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், மண்டபம், மூக்கையூர், தொண்டி, கீழக்கரை  உள்ளிட்ட பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி அனுமதி சீட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாகவே வடகிழக்கு பருவமழை காலங்களில் டிசம்பரை ஓட்டிய நேரத்தில் புயல் மற்றும் வெள்ளம் என்பது வாடிக்கையாகி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் கடுமையான தாக்கத்தை ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழக்கமாக தாங்கிக் கொள்கின்றன. காரணம் அங்கு ஏராளமான நதி அமைப்புகள் மற்றும் ஈரநிலங்கள் இருப்பதே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரி மற்றும் கிழக்கு தமிழ்நாடுதான் தாக்குப்பிடிக்க முடியாமல்  பாதிப்பிற்கு ஆளாகின்றன. அப்படி வந்த வெள்ளங்களில் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் தமிழகத்தை, குறிப்பாக தலைநகர் சென்னையை திருப்பிப் போட்டது. மறக்கவே முடியாத வெள்ளங்களில் அதுவும் ஒன்று.

Advertisment

092
'A lion has set out...' - Coming 'December' Photograph: (CHENNAI)

2015 ஆம் ஆண்டு இதே போன்ற நவம்பர் 24 ஆம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பொழிந்து கொண்டிருந்த சமயத்தில் நவம்பர் 29 ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கூடுதல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி பெய்த கனமழை காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதி சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது .

வெள்ளம் காரணமாக நகரத்தின் முக்கால் வாசி பகுதிகளுக்கு மின்சாரம்  தடைபட்டது. பல மருத்துவமனைகள் செயல்படவில்லை. அரையாண்டு பள்ளித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. போக்குவரத்து சேவையும் தடைபட்டது. தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப்பட்டது. ஒட்டுமொத்த சென்னையும் முடங்கிப்போனது. வெள்ள நீரில் தத்தளித்தது போக, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தத்தளிக்கும் நிலையும் ஏற்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக 2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் கடலூர் இருந்தது. அங்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. 2015 வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாக 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

093
'A lion has set out...' - Coming 'December' Photograph: (CHENNAI)

அதேபோல இன்னொரு பாதிப்பை கொடுத்திருந்தது 2023 ஆண்டு டிசம்பரில் வந்த மிக்ஜாம் புயல். வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2023 டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடந்தது. அந்த நேரத்தில் சுமார் 80 முதல் 90 கி.மீ வேகத்துடன் காற்று வீசியது. 2015 வந்த வெள்ளத்தை காட்டிலும் பாதிப்புகள் குறைவு என்றாலும் சென்னைக்கு பயம் காட்டிய முக்கிய இடராகவே மிக்ஜாம் புயல் பாதிப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 17 பேர் இந்த பேரிடரில் பலியாகினர். அந்த நேரத்தில் வேளச்சேரியில்  பெட்ரோல் பங்கின் புதிய கட்டுமான பகுதியின் பள்ளத்தில்  கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 சிக்கியிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. 2015 மற்றும் 2023 பாதிப்பு சம்பவங்கள் டிசம்பருக்கும் சென்னைக்கும் ஏழாம்பொருத்தம் என்ற நிலையை உருவாக்கியது. இப்படி டிசம்பர் பேரிடர்கள் கற்றுத்தந்த பாடங்கள் அதிகம்.

099
'A lion has set out...' - Coming 'December' Photograph: (CHENNAI)

இந்நிலையில் புதிய புயல் அறிவிப்பு வந்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குள் ஐக்கியமாகி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் இது வரும் புதன்கிழமை (நாளை-25/11/2025) புயலாக வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த நவ்.21 ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த சுழற்சி இன்று (நவ்.24 ஆம் தேதி)  வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் நவ்.27 ஆம் தேதி புயலாக மாறும் சாத்தியக் கூறு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் கடலோர மாவட்டங்களில் மிக மற்றும் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தீவிர மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நவ்.29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை ஆகிய  7 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரையின் படி உருவாகும் புயலுக்கு சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. 'சென்யார்' என்றால்  சிங்கம் என்று பொருளாம். மீண்டும் வரப்போகுது டிசம்பர்.