மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெத் மாகாணத்தில் அமைந்துள்ளது குயிண்டாலப் கடற்கரை. இந்த நிலையில் 47 வயதான ஜோயன் என்ற பெண் தனது இரு மகன்களான 13 வயது ஆஸ்டின் அப்பெல்பீ, 12 வயது பியூ மற்றும் மகள் 8 வயது கிரேஸ் ஆகியோருடன் விடுமுறைக்காக குயிண்டாலப் கடற்கரைக்கு வந்துள்ளார். பின்னர், அவர்கள் பேடில் போர்டு எனப்படும் ஒரு வகை படகில் ஏறி விளையாடியுள்ளனர்.
அப்போது, திடீரென ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக அவர்கள் நடுக்கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பெரிய அலைகளில் சிக்கி கடலில் 4 பேரும் தத்தளித்தனர். இதனால் உடனடியாக தாய் ஜோயன், மகன் ஆஸ்டினிடம், “எப்படியாவது கடலில் நீந்தி கரைக்குச் சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வா” என்று கூறியுள்ளார்.
குடும்பத்தினர் ஆபத்தில் சிக்கியதை உணர்ந்த ஆஸ்டின், கடலில் நீந்த முடிவெடுத்தார். முதல் 2 மணி நேரம் லைஃப் ஜாக்கெட் அணிந்து நீந்திய ஆஸ்டின், அது தன்னை மெதுவாக்குவதாக உணர்ந்து அதை கழற்றிவிட்டு, மீதமுள்ள 2 மணி நேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமலேயே கடும் அலைகளுக்கு இடையே நீந்தினார்.மொத்தம் சுமார் 4 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்து கரையை அடைந்தார்.
பின்னர் கரையில் சோர்வடைந்த நிலையிலும், தாயின் கைப்பையில் இருந்த மொபைல் போனை எடுத்து அவசர உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டன. கரையிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பேடில் போர்டில் தொங்கிக் கொண்டிருந்த தாயும், தம்பி-தங்கையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அனைவரும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/263-2026-02-05-19-46-52.jpg)
இதுகுறித்து தென்மேற்கு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் பிராட்லி கூறுகையில், “இந்த 13 வயது சிறுவனின் தைரியமும் உறுதியும் பாராட்டத்தக்கது. அவரது மன உறுதியே தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றியது” என்றார். மீட்புக் குழு தளபதி பால் பிரெஸ்லாந்து, “இது சூப்பர்ஹ்யூமன் செயல்” என்று வியந்துள்ளார்.
தாய் ஜோயன் கூறுகையில், “மகனை ஆபத்தான கடலில் 4 மணி நேரம் நீந்தச் சொன்னது என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் ஒன்று. ஆனால் அவன் அதை சாதித்தான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த வீரச் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆஸ்டினுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/264-2026-02-05-19-46-26.jpg)