Advertisment

வீரப்பனிடம் செங்கோட்டையன் வாங்கிய ஆறு கோடி! - அம்பலப்படுத்திய நக்கீரன்

Six crore bought by sengottaiyan from Veerappan!

Six crore bought by sengottaiyan from Veerappan!

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்து, பல வருடங்களாகத் தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய நபர் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 184 பேரைக் கொன்றதாகவும், தந்தத்திற்காகச் சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளைக் கொன்றதாகவும், சந்தன மரங்களைக் கடத்தியதாகவும் எக்கச்சக்க குற்றச்சாட்டுகளைச் சந்தித்த வீரப்பனை 90 களின் மத்தியில் மூன்று மாநில காவல்துறைகளும் சல்லடை போட்டுத் தேடிவந்தன. அப்படியிருந்தும் வீரப்பனின் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறக் காரணம் மூன்று மாநில அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கும் வீரப்பனுடன் இருந்த தொடர்பும், அவர்கள் வீரப்பனிடம் வாங்கிய பணமும் எனத் தகவல்கள் கசிந்த நிலையில் நக்கீரன் தனது கள ஆய்வை மேற்கொண்டு வீரப்பனுடன் தொடர்பிலிருந்தவர்களை அம்பலப்படுத்தியது. அது தொடர்பான கட்டுரை 15.10.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Advertisment

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏறியிருக்கும் விலையேற்றம் கேட்டால் திடுக்கிட வைக்கும். முன்பெல்லாம் ஏ.கே.47 துப்பாக்கி விலை 14 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. இப்போது திடீரென 60 ஆயிரம் ரூபாயாக விலையேறி விட்டது. வெளிநாட்டு ரக துப்பாக்கி செக்கோஸ்லோவியா 9MM பிஸ்டல் உட்பட முன்னால் விலை 8 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை இருந்தது. இப்போது ஒரு பிஸ்டலின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை ஆகி விட்டது. கிராக்கியும் கூடி விட்டது.

Advertisment

மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த ஆயுதங்களை ஈழத்துப் போராளிகள் பயந்துபயந்து குறைந்த விலைக்கு விற்று வந்தவர்கள், தரை ரேட்டுக்கு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியவர்கள் இப்போது இறுமாப்புடன் உயர்ந்த விலை சொல்கிறார்கள். அவர்களின் தரகர்களும் மேலும் விலையை ஏற்றத் தயாராக உள்ளார்கள். ஏனிந்த நிலைமை?

வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள், மலையில் இருந்து இறங்கிவந்து, கோடானுகோடி பணத்தைக்கொட்டி நவீன ஆயுதங்களை வாங்கிச் செல்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும் யார் அந்த ஆட்கள் என ஆராய்ந்தோம். நம்மிடம் கூறியவர், ‘‘சி.கே.பி.குரூப்பினர்தான் அதிக விலைக்கு இறங்கி வந்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் விலையேற்றம்’’ என்றார். யார் அந்த சி.கே.பி.? என விசாரித்ததில் சந்தனக் கட்டை வீரப்பன் கோஷ்டியைத்தான் இப்படி சுருக்கி அழைத்துக் கொள்வார்களாம்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுடைய எல்லைப்பகுதி மலைகளையும் மலை தொடர்ச்சியும் கொண்டது. கர்நாடகாவில் மலை ஏறினால் மைசூர் காடுகள் வழியாக தமிழக சத்தியமங்கலம் வந்து தமிழ்நாட்டு மலைகளின் வழியாகவே கேரளாவின் மலை உச்சிக்கு செல்லலாம். இந்த மலை இலட்சக்கணக்கான தேக்கு மரங்களை, சந்தன மரங்களை, நதி நீர் ஓடைகளைக் கொண்டது. மலைவாழ் மக்கள் கும்பல் கும்பலாக அங்கும் இங்கும் நடமாடுவதைத் தவிர, எப்போதாவது வரும் காண்ட்ராக்ட் மரம் வெட்டும் மனிதர்களைத் தவிர, மலைகளுக்குக் கீழே இருந்து அன்றாடங்காய்ச்சிகளாய் இளம் பாட்டாளிகள் மரம் வெட்ட வருவதைத் தவிர, வேறு மனித நடமாட்டமே இல்லாத பகுதிகள் இவை. அதனால் இந்தப் பகுதி முழுவதும் சந்தனக்கடத்தல் வீரப்பன் கும்பலுக்கு சௌகரியமான பகுதியாகப் போய்விட்டது.

நவீன ஆயுதங்களை சேகரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நாளுக்குநாள் இந்தக்கும்பல் தேர்ச்சிபெற்று வருகிறது. சமீபத்தில் கொழும்பு நிருபர் நமக்கு அனுப்பிய செய்தியின்படி, ‘‘விடுதலைப்புலிகளுக்கு பயந்து தமிழ்நாட்டில் அகதி

முகாம்களில் இருக்கக்கூடிய ஈழப்போராளிகள் குழு ஒன்றிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட விரக்தியடைந்த இளைஞர்கள் நாம சாகப்போறது என்னமோ உறுதிதான். அதுவரை சந்தோஷமாக அனுபவிச்சுட்டு சாவோம்’’ என சொல்லிக்கொண்டு தங்கள் கையில் சிக்கிய நவீன ஆயுதங்களோடு வீரப்பன் கும்பலுடன் இணைந்து விட்டனர்.

இப்படி இணைந்த போராளிகள் இந்திய இராணுவத்தால் 84-85 ஆம் ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர்கள். அதனால் வீரப்பன் கும்பலில் இருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான கடத்தல் காரர்களுக்கும் ஆயுதப்பயிற்சி கொடுக்கக் கூடிய முக்கியப் பங்கையும் வகித்து வருகின்றனர். பயிற்சி பெற்ற போராளிகள் என்பதால் இவர்களுக்கு வீரப்பன் கும்பலில் மரியாதையும் அதிகமாம். சமீபத்தில் கர்நாடக மலையோரம் வீரசாகசத்தோடு வீரப்பனைப் பிடிக்கவந்த போலீஸ் படையினர், எஸ்.பி.யுடன் சேர்த்து கொல்லப்பட்ட நிகழ்ச்சி பயிற்சி பெற்ற போராளிகளின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்ட போர். ‘‘ஆம்புஷ்’’ என்று அழைக்கப்படும் இந்த இராணுவத் தாக்குதலில் எதிரேவரும் இராணுவப் படையினர் முழுவதுமாகக் கொல்லப்படுவார்கள். இந்திய இராணுவம் கொடுத்த பயிற்சி கடத்தல்காரர்களுக்கு உதவி இந்தியப் போலீஸ் அதிகாரிகளைக் கொன்று குவிக்கும் இந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் நமக்கே மனம் தாங்கவில்லை. இத்தனை கொடுமைச் செயல்களுக்குப் பின்னாலும் ஒரு கடத்தல் கும்பல் தைரியமாக உலா வருவது என்று சொன்னால் யார் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்? என்று விசாரித்தோம்.

கர்நாடக மாநிலத்துக்குள் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள், கீழே இருக்கும் காவலர்கள் உட்பட வீரப்பனின் சம்பளப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விபரம் பட்டியல் போட்டு வெளிவராதநாளே கிடையாது

எனும் அளவிற்கு கர்நாடக நிலைமை ஆகிவிட்டது. தீவிரமாக இறங்கி மைசூர் பகுதியில் விசாரித்ததில், ‘இங்கு தாக்குதல் நடக்கும்போது வீரப்பனுக்கு உங்கள் மாநிலம்தான் முழு பாதுகாப்பு கொடுக்கிறது. உங்கள் மாநிலத்தில் பொறுப்பில் உள்ள அதிகமான அதிகாரம் படைத்த ஒரு அமைச்சர் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்’’ என்று அந்த காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

யார் அந்த அமைச்சர்? செங்கோட்டையன்தான்.

‘‘நிறைய பேருக்கு நிறைய லட்சங்கள் கொடுத்திருக்கேன். எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரிகளுக்கெல்லாம் கூட எவ்வளவோ செய்திருக்கிறேன். கோபிச்செட்டிப்பாளையத்தில் உங்களை அசைக்க முடியாது. மந்திரியாக இருக்கும் உங்களை சின்ன முதல்வர் என்று வேறு இங்கு அழைக்கிறார்கள். எனவே என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என வீரப்பன் தன் தூதுவர் மூலம் செங்கோட்டையனிடம் மேற்கண்டவாறு விஷயத்தை பாஸ் செய்திருப்பான்

போலும். ஜூலை மாதத்தில் இந்த சந்திப்பு நடந்தது என்று ஆணித்தரமாக சொல்கிறார் வனத்துறை உயரதிகாரி ஒருவர். இந்த சந்திப்பின் போதே சுமார் ஆறுகோடி ரூபாய்கள் கரன்ஸிகளாக வீரப்பன் தூதுவரிடம் இருந்து செங்கோட்டையனுக்கு கைமாறியதாக சொல்லும் இவர் தனக்கு நெருக்கமான சில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவானை சந்தித்தார்.

சந்திப்பு நடந்த இடம் ஊட்டி. நாள் 2.10.92.

சவான் வனத்துறையில் நடக்கும் அக்கிரமங்கள் கடத்தல்கள் கொலைகள் என அனைத்து விபரங்களையும் நேரில் கேட்டு அறிந்ததோடுமின்றி வீரப்பன் தங்கியிருக்கும் இடம் எது என்பதையும் வரைபடமாக வரைந்து கொடுக்கச்சொல்லி வாங்கிக்கொண்டார். கூடவே பிரதமர் அலுவலகத்துக்கும் அதிகாரிகள் புகார்களை அனுப்பி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் செங்கோட்டையன் என்பதை அறிந்து வைத்திருக்கும் டெல்லி உயரதிகாரிகள் தனியாக ‘‘ஃபைல்’’ செய்து அதை வைத்துள்ளதாகத் தெரிகிறது. நமக்குக்கிடைத்த அந்தப்புகார்களோடு நேரிடையாக மலையோரப் பகுதிகளில் விசாரணையில் இறங்கினோம்.

தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்து மாத்திரம் சென்ற 300 நாட்களில் 1,728 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சந்தன மரங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன. ஒருநாளைக்கு இருபது லாரி லோடுகள் கடத்தப்படுகின்றன. சந்தனமரம் ஒரு டன்னின் விலை 3,60,000 ரூபாய். மூன்று லாரிகளில் எட்டு டன் சந்தனமரம் ஏற்றப்படுகிறது. இதன் மதிப்பு 28,80,000 ரூபாய். ஆக இருபது லோடு சந்தனமரம் 5,76,00,000 ரூபாய் மதிப்பு வாய்ந்தது. கடந்த 300 நாட்களில் தினம் இருபது லோடு வீதம் 1,728 கோடி ரூபாய்களுக்கு சந்தனமரங்கள் கடத்தப்படுகின்றன. கோதண்டபாணி ரேஞ்சர், நாகராஜன் ரேஞ்சர், சோழலிங்கம் பாரஸ்டர் போன்ற குறிப்பிட்ட அதிகாரிகளும்,மஸ்தான் என்கிறமுத்துசாமி, அஜாய், ஆடிட்டர் ராமசாமி, மனோகரன், பெரியகண்ணு, என்.ஜெகன்னாதன், ரங்கன், நாகலிங்கம், மாணிக்கம் முதலிய செங்கோட்டையன் விசுவாசிகளும் இத்தொழிலை செய்து வருகின்றனர்.

வழக்குகள் என்பது தமாஷூக்காகப் போடப்படுவதுண்டு. ஒரு வண்டியைப் பிடித்ததாக கேஸ் போடப்பட்டு பத்து வண்டி சந்தனமரங்களை நமது பொறுப்பான அதிகாரிகள் விட்டு விடுவார்கள். மேலும் எட்டு டன் கொண்ட லாரியைப் பிடித்தால் சுமார் 600 முதல் 900 கிலோ வரையுள்ள மரம்தான் இருந்தது என ஏழு டன் மரங்களையும் கடத்திப் போக அனுமதித்து விடுவார்கள். வழக்குகள் கூட கூலித் தொழிலாளிகள் மீதுதான் போடப்படும். இப்படிக் கடத்தப்படும் இந்த மரங்களும் வீரப்பன் கும்பலிடம்தான் எவ்விதப் பிரச்சனைகளுமின்றி சென்றடைகிறது. மரத்தை வெட்டி துண்டுகளாக்கிக் கடத்துவது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்குவது போல் எண்ணி நேரிடையாக அரசாங்க டெப்போவில் இருந்தே மரங்களைக் கடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது ‘‘ஆட்சி கவிழப் போகிறது என்ற டாக்’’ உருவானதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக செய்யப் படுகிறது.

சேலம், திருப்பத்தூர், சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள டிப்போக்கள் கடத்தலில் முக்கிய இடங்களாக உள்ளன. செப்டம்பர் முதல்வாரத்தில் சென்னை துறைமுகக்கப்பலில் கண்டெயினர் மூலம் சந்தனமரக் கட்டைகள் கடத்தப்படுவதை அறிந்த மத்திய அரசின் சுங்க இலாகா நேரிடையாகவே ‘ஸ்தலத்தில்’ நின்று கட்டைகளைப் பிடித்தது. வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் இந்தக் கட்டைகளும் மந்திரியின் ஆதரவில்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது மந்திரியின் செயல்பாடுகளே உறுதிப்படுத்துகிறது. கட்டையைப்பிடித்த சுங்கஇலாகாவினரிடம், ‘‘உங்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? வனத்துறை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும், நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்க’’ என விவரம் தெரியாமல் பேசி சுங்கத் துறையிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதா என்ன? தெரியும். செங்கோட்டையன் ஒன்றில் மட்டும் குறியாக இருக்கிறார். எதைச் செய்தாவது ‘‘நம்பர் 1 விசுவாசியாக’’ இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனம். மதுரையில் அ.இ.அ.தி.மு.க.மாநாட்டில் இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. குழுவினர் எம்.ஜி.ஆர். பாட்டுகளை பாடியபோது, ‘‘அம்மா பாட்டைப் பாடுங்கள். எம்.ஜி.ஆர். பாட்டு வேண்டாம்.அம்மா வீடியோவில் இதையெல்லாம் பார்ப்பார்கள்’’ என்று சாதாரண விஷயங்களில் கூட ஜெயலலிதாவை திருப்திப்படுத்த முயலும் மனோபாவம் உடையவர்.

இவர் தன்னிடம் தூது பேசவந்த வீரப்பன் ஆளிடம் சொல்லி நல்ல வாசமுள்ள உயர்ந்த ரக சந்தனமரத்தைக் கொண்டு வரச்செய்து, தன்னுடைய விசுவாசிகளின் நேரடி மேற்பார்வையில் தலைசிறந்த ஆசாரிகளை வைத்து அம்மாவிற்கு சந்தனக்கட்டில் ஒன்றை செய்ய ஏற்பாடு செய்தார். மணம் கமழும் அந்தக் கட்டிலில்தான் உறங்கிக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதை டெல்லி தனி கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் கட்டில் விவகாரம் அம்பலத்துக்கு வருவதோடு வீரப்பனின் தொடர்புகளும் தெரிய வரும்.

ஒரு கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் மீது ஒரு வழக்கு போடுவார்கள். பல கிரிமினல் வழக்குகளில் தொடர்பிருந்தால் வழக்குகளைப் பட்டியல் போட்டு ‘ஃபைல்’ தயார் செய்து தடாவிலோ என்.எஸ்.ஏ.விலோ போடுவார்கள்.இதுவரை இந்தியாவில் ஒன்று தடா அல்லது என்.எஸ்.ஏ.வில்தான் மாட்டியுள்ளார்கள். ஆனால், இந்தப் பேர்வழி தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து தடாவின் விளக்கமான பயங்கரவாதம் மற்றும் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருடன் பணம் வாங்கி தொடர்பு வைத்திருக்கும் காரணத்தால், ‘‘தடா, என்.எஸ்.ஏ.’’வில் உள்ளே தள்ளப்பட வேண்டியவர் செங்கோட்டையன் என்பதை தமிழ் மக்கள் சார்பாக நக்கீரன் முன்வைக்கிறது.

admk sengottaiyan Veerappan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe