இண்டிகோ விமானத்தைப் பிடித்து சென்னை செல்லும் அவசரத்தில், ஜூலை 18-ஆம் தேதி மாலை திருச்சியைச் சேர்ந்த முக்கிய அரசு அதிகாரி ஒருவர் கையில் சூட்கேஸுடன் ஓட்டமும் நடையுமாக இருந்தார். அவரைத் திடீரென வழிமறித்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ‘""உங்க சூட்கேஸை ஸ்கேனிங் செய்ய வேண்டியிருக்கு. நீங்க அதிக அளவில் பணம் கடத்திச் செல்வதாக, விஜிலென்ஸ் அதிகாரிகள் தகவல் கொடுத்திருக்காங்க'' என்று சொல்ல, டென்ஷனும் பதற்ற மும் தலைக்கேறிய அந்த அதிகாரி, "நானா? இல்லையே'’ என்று கொஞ்சம் தடுமாறினார். விடாப்பிடியாக சூட்கேஸைப் பிடுங்கி ஸ்கேன் செய்ததில், உள்ளே ரூ.1 கோடியே 50 லட்ச ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கண்டதும் சந்தேகத்தை உறுதி செய்துகொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், ‘""இதோ இவ்வளவு பணம் இருக்கே? இதை எங்கே கொண்டுபோறீங்க? இதுக்கு ஏதாவது கணக்கு வைச்சிருக்கீங்களா?''’என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, முகம் வெளிறிப்போனது அந்த அதிகாரிக்கு.
""இல்ல என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன் படம் எடுக்கிறான். அவனுக்குப் பைனான்ஸ் பண்ண பணம் கொண்டுபோறேன்''’என்று பாவமாக சொன்னார் அந்த அதிகாரி. ஆஹா… வசமாகச் சிக்கிக்கொண்டார் என்ற மகிழ்ச்சியில், ‘""யார் உங்க ஃப்ரண்ட்? அவருடைய மொபைல் நம்பர் கொடுங்க… நாங்க பேசணும்''’ என்று நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த அதேவேளை யில், வெளியில் "திருச்சியைச் சேர்ந்த முக்கியப்புள்ளி கோடிக்கணக்கில் பணம் கடத்திக் கொண்டுபோகும் போது, திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்' என்ற தகவல் ஃப்ளாஷ் நியூஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
அதற்கு முன்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கிறோம் என்று அந்த அதிகாரிகள் சொன்னதும், அந்த முக்கிய அதிகாரிக்கு வியர்வை அருவியாய்க் கொட்டியது. ‘""சார்... நான் திருச்சியில் முக்கிய அதிகாரி. திருச்சி மத்திய மண்டல கூட்டுறவு சங்கங்களோட இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன். இந்தப் பணத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்குக் கொடுக்கிறதுக்காக கொண்டுபோயிட்டு இருக்கேன்''’என்று வேறு வழியின்றி உண்மையை உடைத்தார்.
இதையடுத்து, உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தை போன்மூலம் தொடர்புகொண்டு, தயங்கித் தயங்கித் தொடங்கியதும் எதிர்முனையில் அதிகாரத் தொனியிலேயே பதில் வந்திருக்கிறது. உடனே, பயந்து பம்மி வந்த ரவிச்சந்திரனை ராஜ மரியாதையோடு சென்னைக்கு அனுப்பிவைத்தனர் அதிகாரிகள்.
இதுபற்றி விசாரணையில் இறங்கியபோதுதான் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் நிறைந்த தகவல்கள் வெளிவந்தன. “""திருச்சி மத்திய மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக ரவிச்சந்தி ரன் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட் டன. திருச்சியில் உள்ள ரேசன்கடைகள் எல்லாம், இவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கும். சமீபத்தில் திருச்சி மத்திய மண்டல ரேசன்கடைக ளில் எடையாளர் மற்றும் உதவியாளர் வேலைக் கான 186 காலிப்பணியிடங்களை நிரப்ப, தலைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூல்செய்து விட்டார். இதில் லோக்கல் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் கோட்டாவிற்கு ஏற்றவாறு பணம் கொடுத்திருக் கிறார்கள்.
ஆனால், 186 காலிப்பணியிடங்கள் மட்டுமே இருக்கும்போது, ரவிச்சந்திரன் 230 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு அதை அமைச்சரிடமும் தெரி விக்காமல் விட்டதால், 186 பேரின் வேலைக்கான ஆர்டர்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டார் அமைச்சர். அதோடு நிறுத்தாமல், இணைப் பதி வாளர் ரவிச்சந்திரனை, அங்கிருந்து ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டு, தூத்துக்குடியில் இருந்து அருண் என்பவரை அந்த இடத்திற்கு அமைச்சர் மாற்றினார். ஆனால், அருணோ ‘"நீங்க காலிப் பணியிடங்களுக்கு பணம் வாங்கிட்டு இன்னும் வேலை கொடுக்கலைன்னு சொல்றாங்க. இந் நேரத்துல, நான் அங்க வந்து பொறுப்பேற்றேன்னா, எனக்கு அது மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும். நீங்க அமைச்சர்கிட்ட பிரச்சினையை பேசிமுடிங்க. அப்பதான் நான் வந்து பொறுப்பேற் பேன்'’என்று கறார் காட்டிவிட்டார். பிறகு அமைச்சரிடம் ரவிச்சந்திரன் பேசிய பிறகுதான், மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு விமானம் மூலம் செல்லும்போது வசமாக மாட்டிக்கொண்டார்'' என்கிறார்கள் இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள்.
இதுபற்றி விளக்கம் கேட்க, ரவிச்சந்திரனின் செல்நம்பர்-க்கு தொடர்பு கொண்டோம். ஆன் செய்ததும் ஆர்வமாக "வணக்கம்' என்று சொன்னவரிடம்,…"நக்கீரன் செய்தியாளர்' என்றோம். சில நிமிட மவுனத்திற்குப் பிறகு எதுவும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. அவர்கள் தரப்பு விளக்கத்தைச் சொன்னால் அதையும் வெளியிட நக்கீரன் தயாராகவே இருக்கிறது.
பணம் பிடிபட்ட விவகாரத்தில், மானம் கப்பலேறினாலும் அதை மறைத்து, வசூல் பணம் விமானத்தில் ஏறியிருக்கிறது.
-ஜெ.டி.ஆர்., மகேஷ்