ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரால் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை முழுதும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், பெரிதும் பாதிக்கப்படுள்ள வட சென்னையில், மழையினால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால், பலரும் மருத் துவமனைக்கு அலைந்தபடியிருக்கிறார்கள். வட சென்னை பகுதியில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் (பெயரைச் சேர்க்க விரும்பவில்லை) வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள் ளார். அங்குள்ள மருத்துவர் பரிசோதித்துப் பார்த்ததில், சரியான காரணத்தைக் கண்டறிய அல்ட்ரா ஸ்கேன் எடுத்து வரும்படி பரிந்துரைத்து அனுப்பியுள்ளார்.

tt

அதே மருத்துவமனையில் அல்ட்ரா ஸ்கேன் எடுப்பதற்கான பிரிவு இருக்கிறது. அங்கே, ரேடியாலஜி பாடப்பிரிவில் பி.ஜி. படிக்கும் மாணவர் கோகுலகிருஷ்ணன் பணிபுரியவே, அவரிடம் சென்று அல்ட்ரா ஸ்கேன் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. அவரோ, வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, பெண்ணின் மார்பகம் மற்றும் பெண் உறுப்பு என அனைத்தையும் தகாதபடி தொட்டுப் பேசியுள்ளார். இதனை உணர்ந்த அந்த பெண், "வயிற்று வலிக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கு?" எனத் திட்டிவிட்டு வெளியில் வந்துள்ளார்.

மிகுந்த மன வேதனையடைந்தவர், கடந்த வாரம் சனிக்கிழமையன்று, அவரது கணவரை அழைத்து வந்து ஸ்டான்லி மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகாரளிக்க, அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டி ருக்கிறது.

இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனை உயரதிகாரி, ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள அனைத்து ஹெச். ஓ.டி.க்களையும் அழைத்து விசாரித்ததில், "இந்த மாணவர் ஏற்கெனவே எம்.பி.பி.எஸ். இங்கேதான் படித்துள்ளார். அப்போதும் இதே போன்று சர்ஜரிக்கு வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த மருத்துவ மாணவர்மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக மருத்துவமனையில் இதுபோன்ற தவறு கள் நடக்காமல் இருக்க, மருத்துவமனையை 24 மணி நேரமும் கண்காணிக்கத் தான், மருத்துவமனையிலே தங்கும் விடுதியும், அங்கு தங்கி பணிபுரிவதற்காக கூடுதல் ஊதியமும் வழங்கப்பட்டு ஆர்.எம்.ஓ. ஒருவரை நியமித்துள்ளனர். அவர்தான் மருத்துவமனையிலுள்ள அனைத்து உபகரணங்களும் நன்முறையில் செயல்படுகிறதா? இன்னும் கூடுதலாக உபகரணங்கள் தேவையா? வருகின்ற நோயாளிகளுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறதா? என்பதை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவரோ அந்த பணிகள் எதையுமே செய்வதில்லையாம். அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கே அவர் வருவதில்லை என்று கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு வருவதும், கையெழுத்து இடுவதும், பிறகு அம்பத்தூரிலுள்ள தனது வீட்டுக்கு சென்று விடுவதையுமே வழக்கமாக வைத்துள்ளாராம். இப்படி அரசாங்க விதிமுறைக்கு மாறாக பொறுப்பின்றி செயல்பட்டதால், மருத்துவமனையின் கண்காணிப்பே கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தான் பயிற்சி மாணவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயமே இல்லாமல் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும், அதன் காரணமாகவே இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இவ்விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில், பி.ஜி. மருத்துவ மாணவர் கோகுலகிருஷ்ணன் செய்துள்ள பாலியல் சில்மிஷம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே அவரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதோடு, 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனைவரின் உயிரையும் காக்கக் கூடிய மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில், இதுபோன்ற சிலர் பாலியல் சில்மிசங்களில் ஈடுபடுவது, ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதும் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

tt

Advertisment