Advertisment

அன்புமணியின் திருமணத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டதன் சுவாரசிய பின்னணி - ராமதாஸ் பேட்டி

ramadoss about anbumani marriage function

ramadoss about anbumani marriage function

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகள் சௌமியா ஆகியோரது திருமணம் ஆகஸ்ட் 1991 ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இருபெரும் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்ததோடு, அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டது. இப்படியான சூழலில், தேர்தல் முடிந்த சில மாதங்களில் நடைபெற்ற அன்புமணியின் திருமணத்திற்கு ஜெயலலிதா, திமுக தலைவர் கலைஞர் ஆகியோர் வருகைபுரிந்தது ஏகப்பட்ட அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தின. இந்நிலையில், 14.9.1991 அன்று வெளியான நக்கீரன் இதழில் அன்புமணியின் திருமணம் மற்றும் அதன் பின்னணியில் நடந்த சில சுவாரசிய சம்பவங்களை ராமதாஸ் பகிர்ந்துகொண்ட பேட்டி வெளியானது.

ஜெயலலிதா தலைமையேற்று தாலியை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தார். டாக்டர் ராமதாஸ் அவரைப் புரட்சிச்செல்வி என்று அழைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். -இப்படியான செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதைத் தொடர்ந்து ‘கன்னாபின்னா’ வென்று வதந்திகள் பரவின. பா.ம.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டது. டாக்டர் ராமதாஸ் இனி ஆளும்கட்சியை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் யூகங்கள்.

டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி, வந்தவாசி தொகுதி காங்கிரஸ் எம்.பி.கிருஷ்ணசாமியின் மகள் சௌமியா ஆகியோர் திருமணவிழாவுக்கு ஜெயலலிதா வந்ததைத் தொடர்ந்துதான் இத்தனை வதந்திகள் யூகங்கள். திருமணவிழாவில் நடந்தது என்ன என்று டாக்டர் ராமதாசைக் கேட்டோம்.

இயல்பான குரலில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

Advertisment

என்னுடைய சம்பந்தியான திரு.கிருஷ்ணசாமி நீண்டநாள் காங்கிரஸ்காரராக இருந்தாலும் சமுதாய இயக்கங்களில் பங்குகொண்டு வருபவர். பதினைந்து ஆண்டுகள் சமுதாயப்பணியின்போதே நாங்கள் நண்பர்களாக இருந்து வந்திருக்கிறோம். இந்தத் திருமணம் அவர் எம்.பி.ஆவதற்கு முன்பே நிச்சயிக்கப்பட்டது.

திரு கிருஷ்ணசாமி அவர்கள் டெல்லி சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த முதல்வர் ஜெயலலிதாவும் அவரும் சந்தித்துக் கொள்ள நேர்ந்திருக்கிறது.

அங்கேயே அவர் ஜெயலலிதாவை ‘‘திருமணத்துக்கு வரவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்து சென்னைவந்தவுடன் முறைப்படி அழைப்பிதழ் கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் அவர் சென்னைவந்து முதல்வரைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கேட்டபோது, ‘‘நீங்கதானே அழைக்கிறீங்க ...டாக்டர் தரப்பில் இருந்து அழைப்பிதழ் வரவில்லையே’’ என்று ஜெயலலிதா அவரிடம் கூறினாராம்.

உடனே அவர் என்னிடம் தொடர்புகொண்டு ‘‘சி.எம்.இப்படிச் சொல்கிறார். நான் அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது உங்கதம்பி சீனிவாசனையும் அழைச்சுட்டுப் போறேன்’’ என்று சொன்னார்.

‘‘எல்லா அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் எங்கள் தலைமைக்கழக நண்பர்கள், எனது சார்பாக அழைப்பிதழ் கொடுத்தது போலவே சி.எம். செல்லிலும் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் விரும்பினால் சீனிவாசனை அழைச்சுட்டுப் போறதைப்பற்றி எனக்கு ஆட்சேபனையில்லை’’ என்று நான் சொன்னேன்.

அதன்படியே எம்.பி.கிருஷ்ணசாமி அவரது துணைவியார் சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோரோடு தம்பி சீனிவாசனும் சென்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.

ஏற்கெனவே என் மகள் திருமணத்தை திருக்குறளார் முனுசாமி அவர்கள்தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள். இந்தத் திருமணத்தையும் அவரையே தலைமையேற்று நடத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவரும் ஒத்துக் கொண்டார்.

ஒத்துக்கொண்டபடியே தலைமையேற்று அவர் மணவிழா நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த போதுதான் ஜெயலலிதா வந்தார்.

நான் வரவேற்புரை செய்யும்போது ‘‘என் பாட்டாளிச் சொந்தங்களே, பெருமைக்குரிய அரசியல் கட்சித் தலைவர்களே, தமிழக முதல்வர் புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்களே’’ என்று குறிப்பிட்டேன்.

தலைமையேற்று நடத்தும் திருக்குறளார் தாலி இருந்த தட்டை மேடையில் இருந்த ஜெயலலிதாவிடம் காட்டினார். அவர் அதைத் தொட்டு வணங்கினார்.

பிறகு மணமக்களின் பெற்றோர்களான கிருஷ்ணசாமி எம்.பி., அவர் துணைவியார் சித்ரா கிருஷ்ணசாமி, நான், என் துணைவியார் திருமதி சரஸ்வதி ஆகிய நால்வரும் தாலியை எடுத்துக் கொடுத்தோம். இது முடிந்தவுடன் ஜெயலலிதா தான் கொண்டுவந்திருந்த பரிசுப்பொருளை மணமக்களிடம் கொடுத்து விட்டு விடைபெற்றார். நாங்கள் அவரை வழியனுப்பி வைத்தோம்.

இந்த நிகழ்ச்சிகளின்போது பெற்றோர்களான எங்களைத்தவிர வேறு யார்காலிலும் மணமக்கள் விழுந்து வணங்கவில்லை. இதுதான் நடந்தது. சில பத்திரிகைகளில் மட்டும் கொஞ்சம் ஏற்றி இறக்கி செய்திகள் வந்திருந்தன.

எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு எங்களது விருந்தினராக வந்திருக்கும் அவரை அவர் கட்சித்தொண்டர்கள் அன்போடு அழைக்கும் ‘‘புரட்சி’’ என்ற சொல்லைச் சொல்லி வரவேற்றதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. வந்த விருந்தினரை வரவேற்று வாழ்த்துக்கூறுதல் தமிழர் பண்பாடு என்ற அளவில்தான் நான் நடந்துகொண்டேன்.

மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் முதல்வரையும் ‘‘கலைஞர்’’ என்ற அடைமொழியைச் சொல்லித்தான் குறிப்பிட்டேன்.

ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் என்னும் ஆன்மிகவாதியைச் சந்திக்கச் சென்றபொழுது அவர் காலில் விழுந்து எழுந்திருக்கிறார். அதுபற்றிக் கேட்டபொழுது, 'நான் அவர் காலில் விழுந்ததால் நான் ஒன்றும் ஆத்திகனாகிடல, அவர் ஒன்றும் நாத்திகராகிடல...போங்கய்யா வெங்காயம்' என்றாராம். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசிக்கொள்வது தொன்றுதொட்டு நடந்து வருவதுதான்.

இந்தத் திருமண நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு, இந்தக்கட்சியோடு உறவு அந்தக்கட்சியோடு உறவு என்று சொல்வது அரசியல் முதிர்ச்சியைக் காட்டாது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வந்தது வாழப்பாடியாரின் ஏற்பாடு என்றும் சொல்கிறார்கள். அதில் கொஞ்சம்கூட உண்மையில்லை. இன்றைய நிலையில் ஆளும்கட்சியை எதிர்க்கின்ற சரியான கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்ந்து வருகிறது.

அ.தி.மு.க. அரசு செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்து, தேவைப்பட்டால் போராட்டம் நடத்த எங்கள் கட்சி என்றும் தயங்காது.

anbumani ramadoss App exclusive DR.RAMADOSS
இதையும் படியுங்கள்
Subscribe