Advertisment

தமிழர்களுக்காக கர்நாடகம் நோக்கி புறப்பட்ட ராமதாஸ்... காத்திருந்து கைது செய்த போலீஸ்...

ramadass arrested for rally towards karnataka in 1992

ramadass arrested for rally towards karnataka in 1992

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாகப் பிரச்சனை நீடித்து வருகின்றது. இது இரு மாநில அரசுகளின் பிரச்சனை என்பதைக் கடந்து, பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த ஒரு பிரச்சனை என்பதால், இதில் அவ்வப்போது பொதுமக்களின் உணர்வுமிக்க போராட்டங்களும் கவனிக்கத்தக்க வகையில் இருந்துள்ளன. அவை சில நேரங்களில் தமிழ் மற்றும் கன்னட மக்களுக்கிடையே கலவரங்களாகவும் நீட்சியடைந்துள்ளன. குறிப்பாகத் தமிழர்கள் மீது பல்வேறு காலகட்டங்களில் கன்னடர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவை மிக மோசமானவையாகவே இதுவரை வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கர்நாடக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள், தங்களது தாய் மொழியான தமிழை அம்மாநிலத்தின் வீதிகளில் சத்தமாகப் பேசவே தயங்கும் நிலைதான் இன்றும் அங்கு நீடித்து வருகிறது.

Advertisment

தமிழர்கள் மீதான கன்னடர்களின் வன்முறையாட்டம் தொடங்கிய காலகட்டம் 1991. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதன்முறையாகக் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. வாட்டாள் நாகராஜ் தூண்டுதலால் ஏற்பட்ட இக்கலவரத்தில் ஏகப்பட்ட தமிழர்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகினர். இந்த கலவரம் காரணமாக 48 மணிநேரத்தில் சுமார் 50,000 தமிழர்கள் கர்நாடகாவை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து, கலவரங்கள் ஓய்ந்த பிறகு, அங்கிருந்து வெளியேறிய தமிழர்களை மீண்டும் கர்நாடகாவில் மீண்டு குடியேற்றுவேன் என்ற முழக்கத்தோடு கர்நாடகத்தை நோக்கிப் புறப்பட்டார் அப்போதைய அரசியல் புதுமுகம் ராமதாஸ். இப்படி ராமதாஸின் பயணம், அதற்கு காவல்துறையின் எதிர்வினை, காவிரி வன்முறை குறித்த அரசியல்வாதிகளின் பார்வை உள்ளிட்டவை 18.1.1992 நக்கீரன் இதழில் வெளியானது.

Advertisment

காவிரி பிரச்சனை; ராமதாஸ் கைது...

"காவிரிப் பிரச்சனையால் கர்நாடகாவில் பாதிக்கப்பட்டு, தப்பி தமிழகம் வந்தவர்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு 5.1.92 அன்று கர்நாடகாவில் குடியமர்த்துவோம்" என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தாலும் அறிவித்தார், கர்நாடக மற்றும் தமிழ்நாடு போலீஸாரும் அரசியல்வாதிகளும் படு டென்ஷனாகி விட்டனர்.

"பா.ம.க மிக மோசமான கட்சியாம். அவர்கள் ஆயிரம் லாரிகளில் கொண்டு வருவது கர்நாடக தமிழர்கள் இல்லையாம். விடுதலைப் புலிகளாம். அவர்கள் கன்னடர்களைத் தாக்க வருவதோடு விதான் சவுதா (கர்நாடக சட்டசபை) வையும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறார்களாம்" என்று கர்நாடக போலீஸ் முதல் பொதுமக்கள் வரை பேசிக்கொண்டார்கள்.

இதனால் கர்நாடக எல்லைப்பகுதி மட்டுமன்றி பெங்களூர் நகர், விதான் சவுதா போன்ற முக்கியப் பகுதிகளிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

கர்நாடகாவில் இப்படியென்றால், தமிழ்நாட்டு எல்லைக்குள் எப்படி இருக்கும்?

ஐ.ஜி.தேவாரம் தலைமையில் மூன்று டி.ஐ.ஜி.க்கள், எட்டு எஸ்.பி.க்கள், இருபது டி.எஸ்.பி.க்கள், நாற்பது இன்ஸ்பெக்டர்கள், எண்பது சப்-இன்ஸ்பெக்டர்கள், ஐநூறு ஆயுதம் தாங்கிய போலீஸார் உட்பட ஆயிரத்து எண்ணூறு போலீஸார் என மொத்தம் இரண்டாயிரம் போலீஸ் படை கிருஷ்ணகிரியில் குவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் நாலாயிரம் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்டபடி பேரணி பெங்களூர் புறப்பட்டே தீரும் என மீண்டும் அறிக்கை வெளிவரவே, பா.ம.க.தலைவர்களைக் கைது செய்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எண்ணிய போலீஸ், டாக்டர் ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், பு.தா. இளங்கோவன் ஆகியோரைக் கைது செய்ய வலை வீசியது.

இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்காததால், எப்படியும் 5.1.92. அன்று காலை தெரிந்துவிடும் என்று கருதிய போலீஸார், கிருஷ்ணகிரி வரும் அத்தனை சாலைகளிலும் ஆயுதம் தாங்கிய போலீஸை குவித்தனர்.

கிருஷ்ணகிரிக்குள் ராமதாஸ் நுழைந்தால் கைது செய்வோம் என்று அறிக்கையும் வெளியிட்டனர். 5.1.92. அன்று காலை முதல் கிருஷ்ணகிரிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

எப்படியும் பேரணி புறப்பட்டே தீரும் என ராமதாஸ் உறுதியாய் அறிவித்திருந்ததால் அவர் ஏதாவதொரு வாகனத்தில் மாறுவேடத்தில் கூட வரலாம் என்று கருதியது போலீஸ்.

இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட போலீஸின் சோதனைகளில் இருந்து தப்ப முடியவில்லை.

போலீஸின் கண்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு 4.1.92. இரவே கிருஷ்ணகிரி வந்து ரகசிய இடத்தில்தங்கி விட்டார் ராமதாஸ். அவர் பத்து மணிக்கு பேரணி புறப்படும் காரனேஷன் திடலில் திடீரென்று தோன்றுவார் என்றும், மாறுவேடத்தில் ஓசூர் சென்றுவிட்டார்என்றும் கிருஷ்ணகிரியில் பரவலாகப் பேசிக் கொண்டதால் குழம்பிப்போய் விட்டனர் போலீஸார்.

ஐ.ஜி.தேவாரம் டென்ஷனோடு கிருஷ்ணகிரியை வலம் வந்து கொண்டு இருந்தார். ஒன்பது மணியளவில் சில குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அது தற்போது ராமதாஸ் தருமபுரி பயணியர் விடுதியில் உள்ளார் என்பதுதான். பரபரப்பான போலீஸார், ராமதாஸ் கிருஷ்ணகிரியில் நுழைவதானால் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று கருதி, கிருஷ்ணகிரி பால் பண்ணை முன்னால் அதிக அளவு போலீஸை குவித்தனர்.

ராமதாசைக் கைது செய்வதற்காக வியூகம் அமைக்கப்பட்டது. மூன்று பிரிவுகளாக நிறுத்தப்பட்ட போலீஸில் முதல் பிரிவு ராமதாசின் காரை நிறுத்த சொல்லிக் கூறுதல். ராமதாஸ் நிறுத்தாமல் முன்னேறினால் இரண்டாவது பிரிவினர் சாலையை அரை வட்டமாக மறித்து காரை நிறுத்துதல். அதையும் மீறி அவர் தாண்டினால் மூன்றாவது பிரிவினர் வேன், கார்களைக் குறுக்கே நிறுத்தி ராமதாசைக் கைது செய்தல்.

இதை போலீஸாருக்கு விளக்கிக் கொண்டிருந்த டி.ஐ.ஜி.காளிமுத்து, முதல் பிரிவு போலீஸாரிடம் கைதானால் தயாராய் உள்ள அன்னை சத்தியா பஸ்சில் ஏற்றுங்கள். இரண்டாவது பிரிவு போலீஸார் கைது செய்தால் போலீஸ் வேனில் ஏற்றுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்.

மணி பத்தாகியும் ராமதாஸ் வராததால் போலீஸின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. ஜீப்களிலும் கார்களிலும் வயர்லெஸ் அலறிக் கொண்டே இருந்தது. சுமார் 11.00 மணியளவில் வயர்லெஸ்சில் வந்த அந்த செய்தியைக் கேட்டதும் பரபரப்பான போலீஸார்ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஸ்டென் கன் சகிதம் நிற்க ஆரம்பித்தனர். காரணம், ராமதாஸ் தருமபுரியில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

சரியாக மணி 11.20. ஏழு கார்களும் ஒரு வேனும் அணிவகுத்து வந்தன. முதல் பிரிவு போலீஸார் வழிமறித்து காரில் இருந்தவர்களை இறங்கச் சொன்னபோது டாக்டர் ஐயா5 ஆம் காரில் உள்ளார். அவர் கைதானால் நாங்கள் கைதாகிறோம்! என்றனர் காரில் இருந்தவர்கள்.

அவசரமாய் அந்தக் காரைச் சூழ்ந்த போலீஸார் ‘‘நீங்கள் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் போவதால் நாங்கள் உங்களைக் கைது செய்கிறோம்’’ என்று கூறி காரில் இருந்து அவரை இறக்கியபோது, போலீஸை கண்டித்த ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு அன்னை சத்தியா பஸ்ஸில் ஏறினார். அவருடன் தீரன், பு.தா.இளங்கோவன் உட்பட மொத்தம்64 பேர் கைதானார்கள்.

ராமதாசை ஏற்றிய பஸ் நேராக கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்குக்குள் நுழைந்த போது அங்கே ஏற்கெனவே கைதாகி இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

‘‘தமிழ்நாட்டுக்கு அப்பால் இந்திய எல்லை உள்ளதா’’ என்று பார்க்க நாங்கள் புறப்பட்டோம்.

‘‘காவிரி நீரை அணைகட்டி கர்நாடகத்தினர் கைது செய்வது போல ரோட்டில் போலீஸை நிறுத்தி எங்களைக் கைது செய்து கர்நாடகம் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்றார் பண்ருட்டியார்.

இவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி காரனேஷன் திடலில் ராமதாசுக்காகக் காத்திருந்த பா.ம.க. தொண்டர்களையும் கைது செய்து அரசு கலைக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர் போலீஸார்.

ராமதாஸ் உட்பட சுமார் 300 பேர் இருந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணகிரி மாஜிஸ்ட்ரேட் சிங்காரவேலு, கைதானவர்களை மூன்று நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

‘தமிழ்நாடு முழுவதும் பா.ம.க.வினர் நாலாயிரம் பேர் கைது என போலீஸ் சொன்னதும், "உண்மையில் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார் ராமதாஸ்.

பா.ம.கவினருக்கு யாரும் லாரிகள் கொடுக்கக் கூடாது என அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மிரட்டிய போதிலும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதான போதும், ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு பணியாமல் ஆயிரம் லாரிகளுக்கு ஏழு கார்களையாவது வைத்து ஊர்வலம் வந்துவிட்டார் ராமதாஸ்.

"கொஞ்சமாவது அக்கறை இருந்தால்தானே" -சுப்ரமணியசாமி சூடு.

ஜெயலலிதா அரசைக் கடுமையாகச் சாடினார் சுப்ரமணியசாமி.

"பெங்களூர் சென்று பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகள் அனைத்தையும் பார்த்தேன். தமிழர்கள் வாழ்ந்த குடிசைப்பகுதிகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டிருந்தன. பங்காரப்பாவின் மந்திரி சபையில் இருக்கும் ஒரு மந்திரியே வன்முறையை தலைமை ஏற்று நடத்துகிறார். அனைத்து வன்முறைக்கும் பங்காரப்பாவே முழுப் பொறுப்பு. அந்த வன்முறையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறி விட்டார் ஜெயலலிதா. அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க மறந்து விட்டார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது டில்லியில் அதே போல்தான் தமிழர்கள் மீது கலவரத்தைக் கட்டவிழ்த்து விடத் திட்டமிட்டனர். ஆனால் அதை அப்போது ஆட்சியில் இருந்த நாங்கள் தடுத்து விட்டோம். அது போன்ற நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கத் தவறிவிட்டார். அதிமுகவின் 11 எம்.பி.க்களும் நினைத்திருந்தால் இந்த நேரத்தில் நரசிம்மராவை நம் வழிக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதா அதைச்செய்யவில்லை.

சமூகத்தின் காவலர் என்று டாக்டர் பட்டம் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. தமிழ் மக்களைக் காத்திட கொஞ்சமாவது அக்கறை வேண்டும். நடவடிக்கை வேண்டும்" என்றார் சுப்ரமணிய சாமி.

"ஜெயலலிதா செய்தது தவறு"- திருநாவுக்கரசு.

கர்நாடகத்தில் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருநூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. மனம் வருந்தத்தக்க பலவித அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. இது ராஜாக்கள் காலமாயிருந்தால் நாம் நேரடியாகச் சென்று தாக்கலாம். இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில் மத்திய அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

மத்தியஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தமிழ் மக்களின் மனக்குறையாக உள்ளது. காரணம், பிரச்சனை ஏற்படப் போகிறது என்று தெரிந்தவுடன் இராணுவத்தை அனுப்பாததால்தான்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண மத்தியஅரசை நிர்ப்பந்தித்து தீர்வு காணும் பொறுப்பு தமிழகத்தையே சாரும். அந்த வகையில் முதலமைச்சர் தவறி விட்டார்.

ராமதாசைக் கைது செய்தது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அவரை மூன்று நாட்கள் சிறையில் வைத்தது அநியாயத் தவறு.

Cauvery dispute DR.RAMADOSS App exclusive
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe