பா.ஜ.க. ஆட்சியில் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட ஓர் நிறுவனம் மீண்டும் அதே நிறுவனத்திடம் கொடுக்கப்படுவது நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆம், இந்திய அரசு சுதந்திரத்திற்குப் பின்பு ஜே.ஆர்.டி டாடா உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி ஏர் இந்தியாவாக மாற்றியது. தற்போது நிதி நிலைமையைக் காரணம் காட்டி ‘ஏர் இந்தியா’ டாடா நிறுவனத்திடமே விற்கப்பட்டுள்ளது. இது முதல் முறை அல்ல. தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 1985-ல் கட்டப்பட்ட ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் 1992 ஆம் ஆண்டு அந்த கல்லூரி மீண்டும் தனியாரிடமே ஒப்படைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. மற்றும் பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினர். நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜெயலலிதா இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள நக்கீரனும் விசாரணையில் இறங்கியது. அவ்வாறு நக்கீரன் சேகரித்த தகவல்கள் 06.08.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளியானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeya-medical-college-in-.jpg)
இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி உடையார் வசம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியாகவும்,கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருட காலமாக பலவித போராட்டங்களை பி.அண்ட்.சி.மில் தொழிலாளர்கள் நடத்தியும் அவர்களை துளியும் கண்டு கொள்ளாத தமிழக அரசு திடீரென்று உடையாரிடம் கல்லூரியை ஒப்படைத்ததற்கு ‘‘சூட்கேஸ் பேரமே காரணம்’’ என்று ஏற்கெனவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி உடையார் வசம் போயிருப்பது பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.
1985 இல் கட்டப்பட்ட ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி அரசு புறம்போக்கு இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை இடத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விஷயம் ஊரறிந்த ரகசியம். தி.மு.க. ஆட்சிக் களத்தில் கல்லூரி அறங்காவலர் குழு அளித்த தீர்மான அடிப்படையில்தான் ராமச்சந்திரா கல்லூரியை அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. ‘‘சமயம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று காத்திருந்த உடையாருக்கும் ஜெயலலிதா முதல்வரானது லாட்டரி சீட்டில் பணம் விழுந்தது போல ஆகிவிட்டது.
அன்றைக்கு நீதிபதி பக்தவத்சலம் அளித்த தீர்ப்பு உடையாருக்கு எதிர்ப்பாக அமைய உடையார் நேரடியாக ஜெயின் கால்களில் சரணடைந்து விட்டார். ‘ஜெ’யின் கடைக்கண் பார்வையும் உடையாருக்கு ஆதரவாய் அமைய கோர்ட் தீர்ப்பும் இன்று அரசாங்கத்தாலேயே காலில் போட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளது. மிதிக்கப் பட்டுள்ளது.
உடையாரிடமே திரும்பவும் கல்லூரி வந்திருப்பது மாணவர்களை கோபம் அடைய வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ‘ஜெ’யின் இந்த மோசடி நடவடிக்கைக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர். சட்டசபையில் ஜெயலலிதா ஒருமுறை திருநாவுக்கரசு கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் தரும்போது, ‘‘தனியார் வசம் ராமச்சந்திரா கல்லூரியை ஒப்படைக்க முடியாது’’ என்று பேசியுள்ளார். அமைச்சர் முத்துசாமியும் இதையே வலியுறுத்திப் பேசியுள்ளார்.
ஆனால், அன்று அப்படிப் பேசியவர்களே இன்று அந்தக் கல்லூரியை உடையாரிடம் ஒப்படைத்திருப்பது என்ன நியாயம்? என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரே கேட்கிறார். சட்டசபையில் பேசியதோடு மட்டுமில்லாமல் டாக்டர்கள் சங்கத்தோடு நடத்திய பேச்சுவார்த்தை முடிவிலும் ஒப்படைக்க மாட்டோம் என்று தமிழக அரசு ஒப்பந்தமே போட்டுள்ளது.
டாக்டர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் லஷ்மி நாராயணன் நம்மிடம், ‘‘இது ஒரு சீரியசான பிரச்சனை. நான் கவர்ண்மென்ட எதிர்த்து கோர்ட்ல கேஸ் போட்டுருக்கேன். அரசு வசத்துல காலேஜ் இருந்தபோதே ஏழைங்க படிக்க கஷ்டமா இருக்கு. இந்த லட்சணத்துல தனியார் கைக்கு போய்ட்டா லட்சக்கணக்குல டொனேசன் கொடுத்து படிக்க யாரால முடியும்? அரசே காலேஜ எடுத்துக்கற வரைக்கும் நாங்க எங்க போராட்டத்த கைவிடறதா இல்ல’’ என்றார் ஆணித்தரமாக.
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸும் எதிர்க் கட்சியினரும் களத்தில் குதித்துள்ளனர். ஆர்ப்பாட்டம், மறியல், மனிதச் சங்கிலி என்று பலத்த எதிர்ப்புக்குரல் கிளம்பியும் தமிழகஅரசு எதையும் சட்டை செய்யவில்லை.நீதிமன்ற உத்தரவு வந்த மறுதினமே நீண்ட நாட்களாக கூட்டப்படாத ‘‘ஜெ’’ மந்திரிசபை கூடி உடையாரிடம் கல்லூரியை ஒப்படைக்க முடிவு எடுத்துள்ளது.
‘‘ஜெ’’யின் மோசடி வேலைக்கு ஆதாரமே திடீரென்று கூட்டப்பட்ட மந்திரிசபைக் கூட்டம்தான். இதன் மூலம் மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காமல் சட்டத்துக்கு புறம்பாக உடையாரிடம் சோரம் போயுள்ளது தமிழக அரசு. உடையாரிடம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரியை அரசே ஏற்க வேண்டும் என்பது மட்டுமல்ல மாணவர்களின் கோபம். உடையாருக்குத் துணைபோன ஜெயலலிதா அரசை இனிமேலும் விட்டு வைக்கக் கூடாது என்பதும்தான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/jeya-medical-college-std.jpg)