/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfgdfg_15.jpg)
இந்திய அரசியலில் மிகமுக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஒருவராகவும் பார்க்கப்படுபவர் ராம்விலாஸ் பாஸ்வான். 60 களின் மத்தியில் தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய பாஸ்வான், வெகு விரைவிலேயே தேசிய அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவராக மாறிப்போனார். சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இவர், பின்னர் லோக் தள் கட்சியிலும், அக்கட்சியின் நீட்சியான ஜனதா தளம் கட்சியிலும் இணைந்து பயணித்தார். பின்னர் 2000 ஆவது ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியைத் தொடங்கினார். ஹாஜிபூர் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி உறுப்பினராக 1977 இல் முதன்முதலில் மக்களவையில் நுழைந்த இவர், 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 மற்றும் 2014 எனத் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
இதில், 1991 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருந்த மூன்றாவது அணியான தேசிய முன்னணி சார்பாக ரோசாரோ மக்களாய் தொகுதியில் போட்டியிட்டு பாஸ்வான் வெற்றிபெற்றிருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் நடந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் நடைபெற்ற தடா அரசியல், தமிழ் ஈழ பிரச்சனை, மண்டல் கமிஷன் சர்ச்சை, அஜித் சிங் உடனான தனது கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ராம்விலாஸ் பாஸ்வான் நக்கீரனுக்குக் கொடுத்த பேட்டி 21.12.1991 இதழில் வெளியானது.
அஜித் சிங் விலகட்டும் -ராம்விலாஸ் பாஸ்வான் பேட்டி.
ஜனதா தள தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் சென்னை வந்த போது அவ்வளவு பிஸியான சூழலிலும் நக்கீரன் பத்திரிகை என்றவுடன் அளித்த ஆழமான பிரத்யேக பேட்டி.
நக்கீரன் : தமிழகத்தில் தடா சட்டம் சிலரின் சுயநலத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து?
பாஸ்வான் : பஞ்சாப்,காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட தடா சட்டம் எந்தக் காலத்திலும் அரசியல் தலைவர்கள் மீது பயன்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் தடா சட்டம் முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. தி.மு.க. தலைவர்களை ஒடுக்குவதற்காக தடா கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இப்பொழுது ஜெயிலில் இருக்கும் உள்துறைச் செயலாளர் நாகராஜன், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கம்கொடுத்துள்ளார். ஆனால் அதே நாகராஜன் இப்போது தலைகீழாக மாறியுள்ளார். காரணம் ஜெயலலிதா அவரை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா தடாவை வைத்துக் கொண்டு கொடூரமாகப் பயமுறுத்திக் கொண்டுள்ளார். அவரை எதிர்த்து அரசியல் பண்ணுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராத அளவுக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
நக்கீரன்: அப்படியென்றால் தடாவை சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்கிறீர்களா?
பாஸ்வான் : YES...absolutely yes! இனிவரும் ஐந்து வருடங்களுக்கும் ஜெயலலிதா ஆட்சி இப்படியே போய்க் கொண்டிருந்தால் தமிழ் நாட்டின் எம்.பி.க்கள்தான் இதன் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்..
அதனால்தான் ஜனதாதளம் சார்பாக போராளிகள் நடவடிக்கை குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நான் பேசியபோது, சோம்நாத் சாட்டர்ஜியும், அத்வானியும் கூட ஆதரித்தார்கள். ஆனால் அந்த விசாரணக் கமிஷன் ஜெயலலிதாவும் காங்கிரசும் சொல்வது போல் இருக்கக் கூடாது.1980 -லிருந்தே நடந்தவை எல்லாம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் யார் தேச விரோதிகள்? எது தேசப்பற்று? என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.தேசாபிமானிகள் யாரென்று யாருக்கும் ஜெயலலிதா கற்றுத் தர வேண்டிய அவசரம் வேண்டுமென்றால் அதை நரசிம்மராவ் செய்யட்டும்.
நக்கீரன் : ரத்தக் களறியாக விளங்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வே இல்லையா? இதில் தேசிய முன்னணியின் நிலை என்ன?
பாஸ்வான் : இனிமேல் ஈழப் பிரச்சனைக்கு ஒரு சுமுக தீர்வு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருந்திருந்தால் தீர்வு இருந்திருக்கலாம். உடம்பு முழுக்க பரவிய கேன்சரைப் போல ஈழப் பிரச்சனை நான்காவது கட்டத்துக்குப் போனதற்குப் பின்னர் சுமுகமான தீர்வைக் காண்பது கடினம்.
இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் இருவருமே ஈழ விடுதலையை ஆதரித்தார்கள். பண உதவி செய்தார்கள். ஆயுதங்கள் அளித்து பயிற்சி அளித்தார்கள். எங்கள் சகோதரர்கள் ஈழத் தமிழர்கள் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆர்.ஒரே நாளில் புலிகளுக்கு பல கோடி ரூபாய்கள் கொடுத்து அவர்களை தனி விமானத்தில் வரவழைத்து திருப்பி அனுப்பி வைத்தார். அவர்கள் புலிகள் ஆதரவாளர்கள் மக்களுக்கு தேச விரோதிகளாகவா தெரிந்தார்கள்.
ஆனால், இந்திய அமைதிப்படையை புலிகள் எதிர்த்ததால்இவர்களுக்கு தேச விரோதிகளாக மாறி விட்டார்கள். ஜெயவர்த்தனாவும் புலிகளுமே இந்திய அமைதிப்படையை விரும்பாமல் சமாதானம் பேசலாம்.ஜெயவர்த்தனா புலிகளை சமரசத்துக்குள் கொண்டு வந்து இந்திய அமைதிப் படையை எதிர்க்கிறார்.
ஈழத் தமிழர் பிரச்சனையின் பயங்கரம், காஷ்மீர் பயங்கரவாதம் எல்லாமே காங்கிரஸின் மெத்தனத்தால் உருவானதுதான். அந்தக் கட்சி எப்பொழுதுமே ஒரு உறுதியான சுமூகமான முடிவுகளை எடுத்ததில்லை. அது காங்கிரசால் முடியாது.
நக்கீரன்: அப்படியெனில் ஈழத்தமிழர் விடுதலையை புலிகள்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமா?
பாஸ்வான்; ஆமாம். அவர்களேதான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.புலிகளை இந்திய அரசு வழி நடத்தவில்லை.
நக்கீரன்: தேசத்தை ஒன்றுபடுத்துவதற்காக பி.ஜே.பி. காஷ்மீர் பாதுகாப்பு ரத யாத்திரையை உருவாக்கியுள்ளதே?
பாஸ்வான்: central governmentwill get collapse it. BJP gets collapse. பி.ஜே.பி.ஏதாவது கிறுக்குத்தனமாக யாத்திரை நடத்தினால் மத்தியில் மைனாரிட்டியாக இருக்கும் இந்த அரசும் காவடி தூக்கும்.
காஷ்மீரைப் பாதுகாப்போம் என்று சொல்லி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவடி தூக்கியுள்ளார்களே! அது எதற்காக? காஷ்மீரில் இருக்கும் மூன்று சதவீத இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் பிராமணர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தானே பதறியடித்துக் கொண்டு யாத்திரை நடத்துகிறார்கள்.
அரிசனப் படுகொலையை கண்டித்து இவர்கள் யாத்திரை நடத்தக் கூடாதா?அரிசனங்கள் இந்துக்கள் இல்லையா? பி.ஜே.பி.யின் காஷ்மீர் யாத்திரை மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மாறாக தேசத்தையே பிளவுபடுத்தி விடும். ஏற்கெனவே மத்திய அரசிடம் அத்வானியின் இந்த புதிய யாத்திரையை உடனே தடைசெய்யச் சொல்லி விட்டோம். ஆனால் இந்த நரசிம்மராவின் அரசு யாத்திரையை எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. மௌனிகளாகி விட்டார்கள். ஏனென்றால் பி.ஜே.பி., காங்கிரஸ் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே!. ஒன்று நல்ல பாம்பு. மற்றொன்று கருநாகம். இரண்டு தீயசக்திகளையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
நக்கீரன் ; நீங்களும் அஜீத்சிங்கும் எப்போழுதும் எதிரும் புதிருமாகவே இருக்கின்றீர்களே?
பாஸ்வான்: ஏனென்றால் நான் சமூக நீதியை முன்னிறுத்திப் போராடுகிறேன். அவர் அதை எதிர்ப்பது இயற்கைதானே? ஆனால், கட்சியின் கொள்கையை அவர் மீறினால் அதன் விளைவை கடுமையாக சந்திக்க வேண்டி வரும். அவர் கட்சியை விட்டே போனாலும் கூட எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.
நக்கீரன் : நரசிம்மராவும் மண்டல் கமிஷனை அமல்படுத்தப் போவதாக கூறுகிறாரே?
பாஸ்வான் : அது ஒரு பித்தலாட்டம். கடந்த நான்கு மாதங்களாக பொருளாதார இடஒதுக்கீட்டை அவராலே புரிந்து கொள்ள முடியவில்லை. பொருளாதார இடஒதுக்கீடு கொண்டு வருவேன் என்று சொல்கிறார்.ஆனால் அரசியல் சட்டத்தில் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கென்று எந்த விதிகளும் கிடையாதே! இவர்கள் இப்படி குட்டையைக் குழப்புவதன் நோக்கமே அத்தனை இட ஒதுக்கீடு முறைகளையும் காற்றில் பறக்க விடுவதற்காகத்தான்.
நக்கீரன்: அதிகரித்து வரும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த ஏதாவது அதிரடித் திட்டங்கள் வைத்திருக்கின்றீர்களா?
பாஸ்வான்: ஒரே வழி. சமூக எழுச்சிதான். அப்பாவி மக்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த இந்த அளவுக்கு திராணி இல்லை. அந்த மக்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இரண்டு வழிகள். ஒன்று ஜனநாயகம். இன்னொன்று வன்முறை.
நக்கீரன் ; அப்படியென்றால் வன்முறை தவறில்லை என்கிறீர்களா?
பாஸ்வான்: வன்முறை தீர்வு தரும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் சமீபத்தில் ஆந்திராவில் முத்தம்மா என்ற அப்பாவிப் பெண் கையைக் கட்டி நிர்வாணமாக மேல் ஜாதியினரால் நடு ரோட்டில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு அவமானப்படுத்தட்டாள். அதே முத்தம்மா நாளை பூலான் தேவியாக மாறினால் அதற்குப் பொறுப்பு முத்தம்மாவா? இந்த அரசாங்கமா? அல்லது இந்த சமூகமா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dfgdfg.jpg)