Advertisment

இப்போதான் ஷூட்டிங் நடக்குது, ஆனா அப்போ..? பின்னி மில் சந்தித்த அரசியல்..!

politics behind binny mill in chennai

politics behind binny mill in chennai

தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு பரிட்சியமான ஒரு பெயர், அதிலும் குறிப்பாகத் தமிழ் சினிமாவை தொடர்ந்து பின்பற்றுபவர்கள் கட்டாயம் அறிந்திருக்கக்கூடிய ஒரு பெயர், பின்னி மில். ரஜினி, அஜித், தனுஷ் என, இந்த மில்லின் எஞ்சிநிற்கும் இடிபாடுகள் பார்க்காத நடிகரின் முகமே கிடையாது எனலாம். இப்படிப்பட்ட பின்னி மில் ஒருகாலத்தில் சென்னை மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாக விளங்கியது என்பது மறந்துபோன வரலாறாகிவிட்டது. சுதந்திரத்திற்கு பிறகான சென்னையின் மக்கள் தொகையில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த மில் தான் முதன்மை வாழ்வாதாரம். பின்னி அண்ட் கோ எனும் நிறுவனம் ஆகஸ்ட் 17, 1876 இல் பக்கிங்ஹாம் மில் என்ற ஜவுளி ஆலையை சென்னையில் தொடங்கியது, அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் கர்னாடிக் ஜவுளி ஆலை தொடங்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டு இவை இரண்டும் இணைக்கப்பட்டு பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் மில் (B&C Mill) என மாற்றமடைந்தது.

Advertisment

ஏறத்தாழ 227 ஏக்கர் பரப்பளவுடைய இந்த தொழிற்சாலையில் பணிபுரிய திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் போன்ற பல பகுதிகளிலிருந்து ஆட்கள் அழைத்துவரப்பட்டு, இன்றைய வடசென்னை உருவாக்க வழிவகுத்ததே இந்த ஆலை தான். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் தொழிற் சங்கம், பின்னி மில் தொழிற்சங்கம் தான் என்பது இதன் மற்றுமொரு பெருமை. இப்படி பல்வேறு பெருமைகளைக் கொண்ட பின்னி மில்லுக்குச் சொந்தமான நிலத்தில் பெரும் பகுதியை 1986-இல் ரூ.6 கோடி கொடுத்து ராமசாமி உடையார் வாங்கினார். தொழிற்சாலையை மூடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டாலும், சென்னையில் வந்த வெள்ளத்தில் தொழிற்சாலை முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகக் கூறி 1996 ஆம் ஆண்டு ஆலைக்குப் பூட்டுப் போட்டார் ராமசாமி உடையார். இந்நிலையில், 90 களின் தொடக்கத்தில் இந்த மில்லினை சுற்றி நடந்த அரசியலை நக்கீரன் மக்களிடையே கொண்டுசேர்த்தது. அந்தவகையில், பின்னி மில் குறித்து 5.10.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

Advertisment

பி.என்.சி. மில் கை மாறும் விவகாரம்.

மறைந்த ராஜீவ்காந்தியின் மனைவியான சோனியா காந்தியின் ஆதரவுடன் பிரதமர் பதவிக்கு வந்தார் நரசிம்மராவ். தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக பிரதமர் பதவியை எட்டிப்பிடித்த நரசிம்மராவைக் கவிழ்க்காமல் விடமாட்டேன் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார் தமிழக முதல்வரான ஜெயலலிதா.

அதற்கு அவர் சொல்லும் காரணம்: ‘என்னை மதிக்கவில்லை’.

இதற்காக நரசிம்மராவின் டெல்லி எதிரிகளோடு கைகோர்த்துள்ளார் ஜெ.பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்பவாரும் பாம்பே டையிங் தொழிலதிபர் நூஸ்லி வாடியாவும் தான் ராவின் டெல்லி எதிரிகள்.இவர்களோடு நட்புகொண்டுள்ள ஜெ, இவர்களுக்காக முதல்வர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழில்ரீதியான உதவிகள் செய்ய ஆரம்பித்துள்ளார். நூஸ்லி வாடியாவுக்கு ரொம்ப நாளாகவே ‘பின்னி குரூப்’ பின் மேல் அளவு கடந்த ஆசை. எப்படியாவது அதைக் கைப்பற்றி தென்னிந்தியாவிலும் தன் மில் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற தீராத வெறி.

இந்தவெறிக்கு தீனிபோட முடிவுசெய்த ‘ஜெ’ உடையாரிடம் பேசினார். உடையாரோ பி.என்.சி.மில்லை வேண்டுமானால் தருகிறேன். பின்னி குரூப்பை மட்டும் தரமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.காரணம் பின்னி குரூப்புக்கு ஏராளமான சொத்துக்கள்.

உதாரணத்துக்கு எத்திராஜ் கல்லூரிக்கு எதிரேயுள்ள நிலம் பின்னி குரூப்புக்கு சொந்தமானது. இந்த இடத்தில் ‘பைவ்-ஸ்டார்’ஓட்டல் ஒன்றைக் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ள உடையார், இது சம்பந்தமான ஆரம்பகட்ட வேலைகளிலும் இறங்கியுள்ளார். இச்சூழ்நிலையில் முழுவதையும் விற்றால் உடையாருக்கு நஷ்டம். தன்னுடைய பிரச்சனையை ‘ஜெ’ விடம் விளக்கமாகக் கூறாமல் பின்னி குரூப்பை உடையார் மறுத்ததில் ‘ஜெ’ வுக்கு வருத்தம்.

நிலைமையை வாடியாவிடம் எடுத்துச்சொல்ல தம்பித்துரையையும், ஜி.சாமிநாதனையும் அனுப்பினார் ‘ஜெ’. இதற்கு வாடியா ஒத்துக்கொள்ளவில்லை.

முதலமைச்சரிடம் சொல்லி ‘பின்னி குரூப்’பின் மொத்த சொத்துக்களையும் எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கள் என பிடிவாதமாக திருப்பி அனுப்பி விட்டார்.

இதுசம்பந்தமான பிரச்சனையைச் சரிசெய்ய டபிள்யூ.ஆர்.வரதராஜனை தேர்வு செய்தார் ஜெ. சமீபகாலமாக ‘ஜெ’வுடன் நெருக்கம் கொண்டுள்ள வரதராஜனும் பெங்களூரில் உள்ள வாடியாவின் தூதுவர்களைச் சந்தித்தார். ஜெவின் ஆலோசனையின் பேரில் தொழிலதிபர் விஜயமல்லையாவும் வரதராஜனுடன் சேர்ந்து தூதுவர்களைச் சரிக்கட்ட முயன்றார். முயற்சி பலிக்கவில்லை.

முயற்சியில் பின்வாங்காத வரதராஜன் உடையாரை ஓ.கே.சொல்ல வைக்கப் போராடினார். பின்னி கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்புவகிக்கும் நடராஜன் என்ற அதிகாரியைச் சந்தித்துப் பேச, நடராஜனும் பின்னி முழுவதையும் விற்க மறுத்து விட்டார்.

இதனால் கடுப்பானார் ஜெ.

மில் மூடப்பட்டதால் வேலையிழந்த எட்டாயிரம் தொழிலாளர்களுக்கு மாதம் நானூறு ரூபாய் வீதம் ஒருவருடத்துக்கும், மளிகை செலவினங்களுக்கு நிதியாக முதல் தவணையாக ஐம்பது லட்சம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்த ‘ஜெ’ ஆரம்பத்தில் இத்தொகையை உடையார் மூலம் தொழிலாளர்களுக்கு கொடுப்பதாகத்தான் முடிவு செய்திருந்தார்.

உடையாரும் கணக்குகள் போட்டு மூன்று கோடியே எண்பத்து நான்கு லட்சம் ரூபாய் தன்னிடத்தில்தான் தருவார்கள் என காத்திருக்க இந்த இடத்தில்தான் உடையாருக்கு செக்.

தொழிற்சட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடையாரைப் பழி வாங்க நேரிடையாகவே தொழிலாளர்களுக்குப் பணத்தைப் பட்டுவாடா செய்து விட்டார் ஜெ.

வாடியாவுக்கு பின்னியை வாங்கிக் கொடுத்து சரத்பவாரிடம் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள ‘ஜெ’ முயன்றுவரும் நிலையில் உடையாரின் பிடிவாதம்தான் இன்னமும் தடுக்கிறது.

இதனை எப்படி முடிவு செய்வது? என்பதை ஆலோசிக்க போயஸ்தோட்டத்தில் சிறிய கூட்டம் ஒன்று நடந்தது. டாக்டர் வினோதகன், சசிகலா, கவர்னரின் முன்னாள் ஆலோசகரான கேரளத்துக்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் உட்கார்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

இறுதியில் உடையாரைச் சரிக்கட்டும் பொறுப்பு ராமச்சந்திரனிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராமச்சந்திரனும் பல இரவு நேர ரகசிய சந்திப்புகளை உடையாருக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திக் கொண்டுள்ளார். டெல்லி தொழிலதிபருடன் நட்பு கொள்ள லோக்கல் தொழிலதிபரை எதிர்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார் ஜெ.

எது எப்படியோ..,பிரச்சனைகள் சுமுகமாக விரைவில் முடிந்து எட்டாயிரம் பி.என்.சி. தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைகிடைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டால் அதுவே போதும்.

tamil cinema App exclusive
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe