Advertisment

தமிழீழத்திற்காக கைதான ராமதாஸ்! - வாழ்வுரிமை மாநாடும், வழக்குகளும்...

PMK leader Ramadas arrested for Tamil Eelam in 1992

1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அவரது வெற்றிக்கு தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஈழ ஆதரவு நிலைப்பாடும், தமிழகத்தில் நடந்தேறிய ராஜீவ்காந்தி படுகொலை சம்பவமும் முக்கிய காரணமாகப் பேசப்பட்டன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் ‘தடா சட்டம்’ உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகள் நடந்தேறின. குறிப்பாக ஈழத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்தன. இந்நிலையில், 1992 செப்டம்பர் மாதம் 10,11, 12 ஆகிய தேதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தப்பட்டது. முதல் இரு நாட்கள் சென்னை பெரியார் திடலிலும், கடைசி நாள் கடற்கரையில் உள்ள சீரணி அரங்கிலும் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

Advertisment

பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காங்கிரஸ், அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், சிறு அமைப்புகள், ஈழத்தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சிகளின் போது தமிழீழத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைத் தாங்கிப்பிடித்திருந்ததோடு தமிழீழத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். மாநாடு முடிந்த அடுத்த நாளே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ‘‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்குத் தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’’ என அறிக்கை விட்டதோடு பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த கைது மற்றும் வழக்கு விசாரணையில் நடைபெற்ற பரபரப்பான சம்பவங்களை நக்கீரன் 01.10.1992 தேதியிட்ட இதழில் வெளியிட்டது.

PMK leader Ramadas arrested for Tamil Eelam in 1992

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடந்து கொண்டிருந்த போதே தமிழக அரசியலில் சூடு பறக்கும் அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மாநாடு முடிந்த பிறகும் பா.ம.க.வுக்கு தடை விதிக்கக் கோரி சில அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கினர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி பா.ம.க.வைத் தடை செய்ய அறிவுரை செய்திருந்தார். வாழப்பாடி டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் தனது வீடு, சத்தியமூர்த்தி பவனுக்குக் கூடப் போகாமல் போயஸ் கார்டன் போனார். ‘‘டெல்லி முகம் திருப்பிக் கொள்கிறது கவனம்’’ என சொல்ல, ஜெயலலிதாவும் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஏற்கெனவே போலீசாரால் செட்டப் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. அன்பரசு கவர்னரிடம் மனுகொடுக்க அந்தமனுவே கைதுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு கிடைத்ததும் டாக்டர் ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுமாறன், மணியரசன், தியாகு போன்றவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கான முஸ்தீபுகளில் தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீஸ் மும்முரமாக ஈடுபட்டது. இந்தத் தகவலை முன்பேஅறிந்த டாக்டர் ராமதாஸ் வேகவேகமாய் அறிக்கை தருவித்து பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார். சாலை மறியலில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழுப்புரம் வந்த ராமதாசுக்கு கைது விஷயம் கன்ஃபார்ம் ஆனது. உடனடியாக திண்டிவனம் வந்த ராமதாஸ் சூட்கேஸ் சகிதமாக போலீசின் வருகைக்காக காத்திருந்தார். சரியாக வெள்ளிக்கிழமை விடிகாலை இரண்டரை மணிக்கு மாநில குற்றப்பிரிவு போலீசார் திண்டிவனத்தில் ராமதாசைக் கைதுசெய்து சென்னைக்கு முழு பாதுகாப்போடு கொண்டு சென்றனர். ஐ.ஜி.ஆபீசுக்குப் போன ராமதாஸின் முகத்தில் ஏக சிரிப்பு. அங்கே அவருக்கு முன்பாகவே பண்ருட்டி ராமச்சந்திரனும், தியாகுவும், கடல் தனசேகரனும் கைதாகி உட்கார்ந்திருந்தனர்.

இதேபோல் மதுரையில் நெடுமாறனையும் தஞ்சையில் மணியரசனையும் தேசத்துரோக வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். காலை பத்து மணியிலிருந்தே சென்னை எக்மோர் கோர்ட் பரபரப்பானது. பத்தாவது கோர்ட்வாசலில் போலீஸ் படை குவிந்து நிற்க பத்திரிகையாளர்கள் இங்கும் அங்கும் கண்களை நோட்டம் விட்டபடி டென்ஷனாக இருந்தனர். பதினொரு மணிக்கு ராமதாஸை அழைத்து வருவார்கள் என்று முதலில் தகவல் சொன்னார்கள். ஆனால், பதினொன்றரை மணிக்குத்தான் ராமதாசும் பண்ருட்டி ராமச்சந்திரனும் விசேஷ காரில் பத்தாவது கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.

கூடவே போலீஸ் ஜீப்பில் தியாகுவும், கடல் தனசேகரனும். சரமாரியாகக் கேமராக்கள் மின்னி முடிந்ததும் ராமதாஸ் கோர்ட்டுக்குள் நுழைந்தார். கோர்ட்டுக்குள் வக்கீல்களை மட்டும் அனுமதித்த போலீசார் மற்ற யாரும் போகக் கூடாது என்று கண்டிஷன் போட்டு வட்டமாய் நின்று கொண்டனர். வேடிக்கை என்னவென்றால் தியாகுவையும் விசிட்டர் என்று நினைத்துக்கொண்டு அவரை முதலில் உள்ளே அனுமதிக்க போலீசார் தயங்கினர். விபரம் தெரிந்ததும்தான் அசடு வழிய தியாகுவை அந்த போலீசார் உள்ளே அனுப்பினர்.

போலீசின் கெடுபிடியை மீறி உள்ளே நுழைந்து வழக்கு விசாரணையை நாம் நேரில் பார்த்தோம். நின்று கொண்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனைப் பார்த்த நீதிபதி டி.வி.சுப்பிரமணியம், ‘சௌக்கியமா?’ என்பது போல லேசாய் சிரித்தார். ‘‘நானும் அவரும் குளோஸ் பிரண்ட்ஸ். தொழில்ரீதியா ரொம்ப நாளா சந்திக்க முடியாம இருந்தோம். இன்னிக்கு இந்த நிலைமையிலே சந்திக்கும்படி ஆயிடுச்சு’’ என்று நீதிபதி சிரித்துக்கொண்டே சொல்ல கோர்ட் முழுதும் சிரிப்பொலி. ராமதாஸ் குழுவினருக்கு ஆதரவாக சுமார் இருபது வக்கீல்கள் குரல் கொடுத்தனர். அக்டோபர் முதல்தேதி வரை ரிமாண்டில் வைப்பதாக தீர்ப்பும் எழுதி விட்டார் நீதிபதி.

ஆனால், ‘‘ராமதாஸ் மீது விதிக்கப்பட்ட 124-ஏ பிரிவை செஷன்ஸ் கோர்ட்தான் விசாரிக்க வேண்டும். மாஜிஸ்ட்ரேட்டுக்கு அந்த உரிமை இல்லை’’ என்று ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டதும் நீதிபதி தர்மசங்கடத்துக்கு உள்ளானார். சில ‘புக்ஸ’ படிச்சுட்டு வர்றேன் என சொல்லிவிட்டு படபடப்பாக தன் தனியறைக்குப் போனார் நீதிபதி. இதற்கிடையில்‘‘பஸ்ஸ கொளுத்தியாச்சு...பஸ்ஸ கல்லால அடிச்சாச்சு...’’என்ற பா.ம.க.தொண்டர்கள் தலைவர்களிடம் சொல்லியபடி இருந்தனர். போனில் யார் யாரிடமெல்லாமோ ஆலோசனை கேட்டுவிட்டு ஒருவழியாய் இரண்டு மணி நேரம் கழித்து தன் சீட்டுக்கு வந்தார் நீதிபதி. ‘‘நான்கு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று குற்றச்சாட்டுகளில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. மீதி இரண்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனவே அக்டோபர் முதல்தேதிவரை இவர்களை காவலில் வைக்க உத்தரவிடுகிறேன். அதேநேரத்தில் இவர்கள் அரசியல் அந்தஸ்துடன் இருப்பதால் நான்குபேரையும்சொந்தஜாமீனில் விடுதலை செய்கிறேன்’’ என்று நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும் ‘‘நீதிக்கு வெற்றி’’ என்று ஒரு வக்கீல் உணர்ச்சி வசப்பட்டு கோர்ட்டுக்குள்ளேயே கோஷம் போட்டார். வக்கீல்கள் ஒட்டு மொத்தமாய் அந்த நால்வரையும் சூழ்ந்து கொண்டு கை கொடுத்தபடி இருந்தனர். இதைப் பார்த்த நீதிபதி, ‘‘நான் ரிலீஸ் பண்ணினாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே!’’ என்று அன்பாகக் கடிந்து கொள்ள ஒரு வழியாய் நால்வர் குழுவினர் சிரித்தபடியே வெளியேவந்தனர்.

வெளிவந்த ராமதாஸைப் பார்த்ததும் தொண்டர்கள் ஆக்ரோஷமாய் ‘‘தமிழ்நாட்டுப் போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க’’ என்று கோஷம் போட ஆரம்பித்தனர். உடனே ராமதாஸ், ’’உஷ்...சத்தம் போடக் கூடாது, இது கோர்ட், எல்லாம் வெளீல வெச்சிக்கங்க’’ என்றதும் தொண்டர்கள் கப் சிப்பென்று அடங்கினர். ‘‘மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’’ என்பதுபோல் யாரைக் கண்டாலும் அவர் தேசத்துரோகி என்று கொடுங்கோலன் கண்ணுக்குத்தான் தெரியும். இங்கும் அதுதான் நடந்தது.

pmk Ramadoss tamileelam
இதையும் படியுங்கள்
Subscribe