"தேசியம் என்பதே புரட்டு. அது காலிகளின் புகலிடம்' என்று தந்தை பெரியார் சொன்னார். இன்றைக்கு போலித்தனமான தேசியவெறியை தூண்டிவிடும் காவிகளின் கூடாரம் பெரியார் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க போதுமானதாக இருக்கிறது.
எல்லாவற்றையும் ஒற்றைமயமாக்கல் என்பதே தேசியத்தின் உள்ளடக்கம் என்பதை சமீபத்திய பா.ஜ.க. ஆட்சி தெளிவாக உணர்த்தி வருகிறது. பல்வேறு இனக் குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங் கள், பல்வேறு உணவுப்பழக்கங்கள் என்று வேறுபட்ட மக்கள் அடங்கிய இந்திய தேசியத்தை நோக்கி அண்ணா ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய தேசியத்தை வெறும் கற்பிதம் என்றே அண்ணா கூறினார்.
அண்ணாவின் திராவிட நாடு கோட்பாடு நிறைவேறி யிருந்தால் அது உலக ஜனநாயக அமைப்புகளில் மிகவும் உயர்ந்ததோர் இடத்தைப் பெற்றிருக்கும். இந்திய அரசு கொண்டுவந்த பிரிவினை ஒழிப்பு சட்டத்தைத் தொடர்ந்து அண்ணா தனது திராவிடநாடு கோரிக் கையை கைவிட நேர்ந்தது. ஆனால், தனது திராவிட நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண் டாரோ, அந்த சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இந்திய அரசில் இடம்பெற வேண்டும் என்று முழக்கமிட்டார். அதாவது தனது திராவிட நாடு கொள்கையை இந்தியா முழுமைக்கு மாக பொருத்தினார். இப்படி அறிஞர் அண்ணாவை இன்றைய ஜனநாயக அரசியலுக்கான தேவையாக முன்னிறுத்துகிறது, இந்து குழுமம் வெளியிட்டுள்ள "மாபெரும் தமிழ்க் கனவு' என்கிற 800 பக்க புத்தகம்.
சமத்துவம் என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற புதிய புரிதலை அறிமுகப் படுத்தினார் அண்ணா. இயக்கத்தைத் தொடங் கிய அண்ணா 18 ஆண்டுகளில் அதை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆட்சி முறைக்கும், கட்சி செயல்பாடுக்கும் புதிய இலக்கணங்களை வகுத்து அமல்படுத்தி னார். வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி வேண்டும் என்றெல்லாம் புதிய நடைமுறைகளை தனது தம்பியருக்கு கற்பித்தார்.
தி.மு.க.வை சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரிக் கட்சியாக உருவாக்கும் முயற்சியில், அண்ணாவின் மறைவு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்று கலைஞர் ஒரு முறை நினைவுகூர்ந்ததை இந்த நூலில் இடம்பெற்றுள்ள இந்து தமிழ்த் திசை நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் எழுதிய கட்டுரை பதிவு செய்திருக்கிறது. ஆனால், நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்து முதன்முதலில் பிரகடனம் செய்தபோதும், சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் தி.மு.க. என்ற இயக்கத்தை சர்வதேச நாடுகள் கவனித்ததை மறந்துவிடக் கூடாது.
இன்றுவரை ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்து என்றால் அதை பாதுகாக்க எழும் முதல் குரல் தி.மு.க.வுடையதாகவே இருக் கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா ஆய்வறிஞர் கர்க சட்டர்ஜி, “"1965-ல் அண்ணா நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம்தான், வங்காளியான என்னை இந்தி படிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாமல் தடுக்கிறது'’என்கிறார். அமெரிக்காவின் ப்ரவ்ன் பல்கலைக்கழக ஆய்வறிஞர் பிரேர்ணா சிங், “""தமிழகத்தில் பிராந்திய உணர்வுடன், சமூகநலத் திட்டங்கள் பிணைக் கப்பட்டதற்கு சிறந்த குறியீடு அண்ணாவின் ரூபாய்க்கு ஒருபடி அரிசி’திட்டம்'' என்கிறார். ஆம், அண்ணா படி அரிசி 1 ரூபாய்க்கு தருவோம் என்று அறிவித்தபோது கேலி செய்தார்கள். ஆனால், அவரைத் தலைவராக கொண்ட இயக்கங்களோ, அவருடைய மாதம் 20 கிலோ அரிசி திட்டத்தை இலவசமாகவே கொடுத்து சாதித்திருக்கின்றன என்பதையே இவர் சொல்ல வருகிறார்.
""அண்ணாவின் எளிமையும், தன்னலமற்ற தன்மையும் திராவிட இயக்கத்துக்கான அவருடைய அர்ப்பணிப்பும் அவரை கற்பனைக்கெட்டாத புகழ்கொண்ட மக்கள் தலைவ ராக்கின''’என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ் .ஜார்ஜ். எல்லாவற்றுக்கும் மேலாக, “இந்தியாவை மூழ்கடித்த சமஸ்கிருத அலையில், புத்தாக்கச் சிந்தனையின் மகத்தான சாதனைகளும் மூழ்கடிக்கப்பட்டன. அந்த சமஸ்கிருத கோலி யாத் அரக்கனை வீழ்த்திய எளிய டேவிட் அண்ணா''’என்று உயரத்தில் தூக்கிவைத்து போற்றுகிறார் ஜார்ஜ்.
செல்வ புவியரசன் தனது கட்டுரையில், ""உலகுடன் இந்தியா இன்றைக்கு சரளமாக உரையாடுவதற்கான சாளரமாக ஆங்கிலத்தை பாதுகாக்க உதவியவர் அண்ணா''’என்று பொருளா தார அறிஞரும், மூத்த பத்திரிகையாளருமான சுவாமிநாதன் எஸ்.அங்கலாசாரிய அய்யரின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
அண்ணாவின் திராவிட நாடு லட்சியம் குறித்து பேசும் ஆழி.செந்தில்நாதன், அந்த விவகாரத்தை மிகச்சுருக்கமாக வாசகர்களுக்கு கொண்டு போயிருக்கிறார். “""அண்ணா திராவிட நாட்டை அடையாவிட்டாலும், சுடுகாட்டை அடையவில்லை. பிரிவினைக் கோரிக்கையைத்தான் கைவிட்டார். பிரிவினைக்கான காரணங்களோ தொடர்ந்து நிலவுவதாக கூறி னார். அதாவது, தனது சுதந்திர வியூகத்தை கூட்டாட்சிக்கும், தன்னாட்சிக்குமான வியூகமாக மாற்றிக் கொண்டார். அதாவது, நூறு ரூபாய் நோட்டை இரண்டு ஐம்பது ரூபாயாக மாற்றிக்கொண்டார்''’என்கிறார்.
வரலாற்று ஆய்வாளர் கோம்பை அன்வர் தனது கட்டுரையில், "1947 முதல் 1962 வரை தனது அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக் காத காங்கிரஸ், அண்ணா சுட்டிக்காட்டி பேசியதற்கு பிறகே கடையநல்லூர் மஜீத் துக்கு வாய்ப்பளித்தது' என்கிறார். முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத், திராவிட நாடு கோரிக்கையை ஏற்க மறுத்த காரணத்தையும், அதையும் மீறி பெரியாரும் அண்ணாவும் முஸ்லிம்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டு பொதுவெளியில் முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதற்கு முடிவு கட்டியதையும் நினைவுகூர்கிறார்.
"மாபெரும் தமிழ்க் கனவு' என்ற இப்புத்தகத் தின் உள்ளடக்கம் அண்ணாவின் ஆற்றலை, அவ ருடைய எளிமையை, அவருடைய மேதைமையை, அவருடைய அரவணைப்பை, அவருடைய மனிதநேயத்தை, உலகளாவிய சிந்தனை வளத்தை பொதிந்து வைத்திருக்கிறது. அதுவும் அவருடைய உரைகள், எழுத்துகள் மூலமாகவும், அவரை அறிந்தோர் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறது. நீளம் கருதி சில விஷயங்களை குறிப்பிட்டு தாவிவிடலாம் என்று நினைக்கிறேன். நாகநாதன் பேட்டியில், "மாற்றுத் தரப்பினரையும் உள்ளிழுக்கும் ஆற்றல் பெற்றவர்களில் காந்தியையும் அண்ணாவையும் மட்டுமே இந்திய வரலாற்றில் குறிப்பிட முடியும்' என்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகிய மூன்று தேசிய கட்சிகளின் பொருளாதார கண்ணோட் டத்துக்கு மாற்றுப் பொருளாதாரம் அண்ணாவுடையது என்பதற்கும் விளக்கமளிக்கிறார்.
இரா.கண்ணனின் அண்ணாவின் கதைச் சுருக்கமும், கே.கே.மகேஷ் தொகுத்த அண்ணா 60, அண்ணாவின் தி.மு.க. கதை ஆகிய தொகுப்புகளும் அண்ணாவை இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் எளிமையாக புரியவைக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.
இந்த நூல் அற்புதமான ஒரு தொகுப்பு என்பதற்கு, அண்ணா முன்வைத்து பிரச்சாரம் செய்த திராவிட நாடு குறித்த விவரங்களை சொல்லலாம். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புழுதி தூற்றும் ஒரு கூட்டத்துக்கு இந்த விவரங்கள் தெளிவை ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஆம், திராவிட நாடு என்ற கோட்பாடு இந்திய அரசை படுத்தியபாட்டையும், தி.மு.க.வையே தடை செய்யும் அளவுக்கு அது ஏற்படுத்திய அச்ச உணர்வையும் இன்றைய தலைமுறை அறிய உதவும்.
ஆர்.விஜயசங்கர் கார்த்திகேசு சிவத்தம்பி யிடம் நடத்திய உரையாடலில், ஆழமான பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையை இன்றைக்கும் தாங்கி நிற்பது எது என்று கார்த்திகேசு சிவத்தம்பி கூறும் விஷயம் ஆச்சரியம் அளிக்கும். அந்தப் பேட்டியின் நிறைவாக, "அண்ணாவும், கலைஞரும் அறிவார்ந்த கவர்ச்சி மூலமாக மக்களை அரசியலுக்கு ஈர்த்தார்கள். எம்.ஜி.ஆர். அது குறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், வெறும் வாக்குகளுக்கான வெகுஜனக் கவர்ச்சியை நோக்கி மக்களை நகர்த்தினார்' என்கிறார்.
பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது அதை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணா பேசினார். தனது உரையில் “""இந்த மசோதாவை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஒரு தனி ஆளை சமாளிக்க இந்திய அரசமைப்புச்சட்டத்தையே திருத்து கிறார்கள் என்று கருதுவார்கள்''’என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
1962-ல் அண்ணாவுக்காக பிரிவினைவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, இப்போது, தீவிரவாதத் தடுப்புச்சட்டத்தை கூர்மைப் படுத்தியிருக்கிறது. ஒற்றையாட்சிக் கும், இந்தி ஆதிக்கத்துக்கும் எதிராக ஓங்கிக் குரல் எழுப்பிய அண்ணா பற்றிய அற்புதக் குவியலாகவே இந்த நூலைக் கருதலாம். அவருடைய குரலின் தொடர்ச்சி தமிழகத்தில் இன்னும் உயிர்த்திருக்கிறது.
(செப்டம்பர் 15 -அண்ணா பிறந்தநாள்)